பிரீமியம் ஸ்டோரி

நிசப்தத்தின் ஓசை

நிசப்தத்தின் நொடியில்
தொடங்குகிறது
கலவரம் மிகுந்த
வாழ்வியலுக்கான ஓசைகள்

தனிமையில்
என் இருப்பை
உறுதிப்படுத்துகின்றன
இந்த ஓசைகள்

அது ஒரு அற்புதமான
இசையாகப் பரிணமித்தால்
அதைவிட
என்னவாக இருக்கக்கூடும்
என் வாழ்தலின் அர்த்தம் சகா!

- ஷாலினி கணேசன்

ஒளிமாற்றம்

வீட்டிற்கு இடமும் வலமுமாக
கண்களைப்போல் ஒளிர்ந்த
மாடங்களின் வெளிச்சப் பிறைகள்

தாழ்வாரத்தில் தூண்களைச் சுற்றி
வானத்தில் இருந்து இறைந்திருந்த
சின்னஞ்சிறு நட்சத்திரங்கள்

நடுக்கூடத்தின் பூசை மாடங்களில்
கண்சிமிட்டிக்கொண்டிருந்த
விடிவெள்ளித் துகள்கள்

ஒவ்வொரு அறையின்
சன்னல் திட்டுகளிலும்
யாருக்காகவோ காத்திருந்த
அழகான விட்டில் பூச்சிகள்

சமையலறையில் விறகடுப்பை
அலங்கரித்து
பாட்டியைத் திளைக்க வைத்திருந்த
புகையில்லாத நெருப்புத்துண்டுகள்

இரவானதும் புழக்கடையில்
நிலாத்துளிகளைச் சுரந்திருந்த
கிணற்றுமாடத்து ஒளிப்பேழைகள்

அத்தனை பிரகாசங்களும்
இருளுக்குள் போயிருந்தன
நகரத்து அடுக்கக வீட்டின் பால்கனியில்
கார்த்திகை தீபம் கொண்டாடிய பொழுது.

- தி.கலையரசி

ஸ்மார்ட் சிட்டி

சிங்காரப் பெருந்தலைநகர்
பிதுங்கி வழிய
பிறக்கிறது ஸ்மார்ட் சிட்டி

விரிந்து படர்ந்த பசிய விளைநிலங்களுக்கு
பாலூட்டிய திரவ தனங்களின் வேரில் செருகிநிற்கும்
விளம்பரப்பெரும்பலகைகள் சாய்ந்து கிடக்க
இன்னமும் கோபமாய்க் காற்று

ஊற்றுக்கண்கள் அடைத்த
அடுக்குமாடி ஆரண்யங்களைப்
புரட்டிக்கடாசிய பெரும்புயல்
தேங்குவதெங்கே
தெரியாப்புதிரில்
திரண்ட நீர்க்கூட்டம்
வாகாய் நுழையும் வாசல் திறப்புக்குள்
நீராலானதோ நகரம்

மகாமழை வருகையைச் சொன்ன சூசகத்தும்பிகள்
இருள் பூசிய விளக்குகளுள்
கூடடைய
கழிவும் மழையும் கலந்த வீதியில்
களித்து நீந்தும் பேரானந்த நீர்நாக இணை.

- அன்பாதவன்

சொல்வனம்

அவளுறக்கம்

அயர்ந்துறங்கும் அவளுக்குப் பாதுகாவலனாக இருக்கிறது இரவு
எலும்புகள் சில்லிடும் பனியில்
கம்பளிப் போர்வையின் வெதுவெதுப்பென
மென் கனவுகளை ஆரத் தழுவுகிறாள்
ஆசையாய் நட்டுவைத்த மரக்கன்று வளர்ந்து
தன் இலைகளை சரசரப்புடன் உதிர்ப்பதை உணர்கிறாள்
எப்படியும் வடிந்துவிடக்கூடிய இரவின் விளிம்பில்
உதயமாகும் சூரியப் பரல்களைத் தாங்கியபடி
அவள் விழிகள் மினுமினுப்பதைக் காண்கிறாள்
சரசரவெனத் தீண்டும் சர்ப்பமென
சாளரங்களின் திரைச்சீலைகளை அசைத்துப் பார்க்கிற பனிக்காற்றில்
புரண்டு படுக்கிற அவளின் பேரழகில்
ஒரு மின்னல் வந்து போனது
நாளை வானிலை அறிக்கை
பெரும் புயலென வரலாம்
வதனம் மிகுந்த வசந்த காலத்திற்கென
ஒரு பெருமழையின் மையமிது
அந்த அறை அத்தனை அமைதியில்லை
பாலுக்கேங்கும் இரவுப் பூனைகளின்
ஏக்கம் நிறைந்திருக்கிறது
மார்பு ஏறிஇறங்கும் பெருமூச்சில்

அந்த இரவும் ஏறி இறங்குகிறது
அவளுக்கென ஒரு ராஜகுமாரன்
கையில் ஒற்றை ரோஜாவோடு அவள் காதில் கிசுகிசுக்கலாம்
மஞ்சங்கள் நிறைந்த இந்த இரவின்
அத்தனை அழகிலும் பேரழகி நீ என்று
வாலிபம் தாண்டியவள் இளவரசி ஆனாலும்
வசந்தகாலப் பூக்கள் அவளுக்காகப் பூக்கும்!

- வதிலை பிரபா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு