Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

தரையில் ஓதம் போகவில்லை கொடியில் துணிகள் காய்வதில்லை மரவட்டைகள் வேறு.

சொல்வனம்

தரையில் ஓதம் போகவில்லை கொடியில் துணிகள் காய்வதில்லை மரவட்டைகள் வேறு.

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பொம்மை

முதலில் ஒரு பொம்மையாகத்தான்

கையில் வைத்திருந்தான்

அதில் குருதிவாடையில்லை

ஜடைகள் பின்னியிருந்ததில்

காய்ந்த சருகுப்பூக்களை எடுத்துச்

சுற்றுகிறான்

அழுத்திப்பிடித்ததில்

நெற்றியிலிருந்த கிழிசலின் வழியே

சிறுபஞ்சு எட்டி நிற்கிறது

அழுக்கேறிய அதன் ஆடைகளில்

துர்நாற்றமில்லை

முட்டிக்காலில்

ஒரு நாயின் பற்கள் பதிவாகியிருந்தன அவ்வளவே

வெயில் கூசச்செய்யுகிற கண்களை

கைநிழலில் மறைத்தவனின் மூளைக்குள் இன்னமும்

அந்தப் பெண் பாவையை

தன் பிறப்பாகவே கையில் வைத்து

அணைத்துக்கொண்டிருப்பதை

போவோர் வருவோர் பார்த்துக்கொண்டிருக்கட்டும்

எளியோர்கள் கிடத்தப்படுகிற குப்பைத்தொட்டிகளுக்குள்

எல்லா பொம்மைகளும் ஒருநாள் வந்து விழும்.

- ராம் பெரியசாமி நெய்வேலி

கணை

ண்பர்கள் என்றால்

ஊர் சுற்றவும்

அரட்டையடிக்கவும்

பொழுதைக் கழிக்கவும்

காலத்தை விரயம் செய்பவர்கள் என

குற்றம் பட்டியலிட்டவர்கள் மீது

அக்னிப் பார்வை சிந்தும் எனக்கு

மரத்தில் மையமிடும் பறவைமீது

குறி செலுத்தும் வேடனின்

கால்களைப் பதம் பார்க்கும்

எறும்பின் ஆவேசம் நிறைத்தது

நட்பின் கணை.

- முகில் முருகேசன்

சொல்வனம்
சொல்வனம்

மழைக்கால வெயில்

ரையில் ஓதம் போகவில்லை

கொடியில் துணிகள் காய்வதில்லை

மரவட்டைகள் வேறு... உவ்வே...

கால் வைக்கும் இடமெல்லாம் நாக்குப் பூச்சி

ஒரு நாள்

காய்ந்தால் போதும்

போர்வைக்குள் என்னை மேயும் மிச்ச சூடு

விழித்துக்கொண்டபின் பார்க்கவென்றே

மெதுமெதுவாய் காய்ந்துவரும் நெற்றி முத்தம்

எழுந்து வாசல் வந்தால்

புத்துணர்ச்சியோடு மரம்

கோலமிடுகையில் அசைத்துவிட

இலைகளில் துளிகள்

ஒரு நாள் காய்ந்தாலும்

மழைக்கால வெயிலுக்கு

ஈரமிருக்கிறது.

- இயற்கை

இனி அந்தரங்கமானதில்லை காதல்

நேற்றுவரைக்கும்

தனிமனிதனின் சொத்தாக எஞ்சியிருந்தது

காதல் மட்டும்தான்

வெப்ப பூமியில் எப்போதாவது பெய்யும்

சிலீர் மழையைப்போல

காதல்தான் எம் தேசத்தை

ஆசுவாசப்படுத்தியது

மாற்றங்கள் குறித்த சின்னச் சின்ன

நம்பிக்கைப் புற்கள் அதில்தான் முளைத்தன

ஆனால் நீங்கள்

அதை வெறுக்கின்றீர்கள்

சட்டங்கள் கொண்டு

அன்பின் வேர்களை

கொடூரமான தோட்டக்காரன்போல

வெட்டத் துடிக்கிறீர்கள்

தன்னிச்சையாய்ப் படரும் கொடிகளை

அறுத்து எறிகிறீர்கள்

மலர்களுக்கும்

மகரந்த வண்டுகளுக்கும்

ஏது

சாதியும் மதங்களும்

அந்தரங்கமானது காதல் - அதை

அம்பலத்தில் ஏற்றி செய்தியாக்குகிறீர்கள்

பரிணாமம் கொண்ட காலங்களிலிருந்து

புழங்குகிறது எம் காதல்

மதங்களின் பேரில் அதை

மரணிக்க விடாதீர்கள்!

- காயத்ரி கணேஷ்