Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

வேறுவேறு மழை!

யாரோ ஒரு சிறுமி
கப்பல் விடவேண்டிப் பொழிகிறது
வீட்டுப்பாடம் முடிக்காத
ஒரு சிறுவனுக்காகக் கொட்டுகிறது
புழுக்கம் தாளாமல்
திண்ணையில் புரளும்
முதுகிழவிக்கெனச் சொட்டுகிறது
எப்போதும் குடையோடு சுற்றும்
கிழவனின் இறுதி ஊர்வலத்தில்
பூத்தூவலாகிறது
கடைசிச் சந்திப்பை
முடித்துத் திரும்புமொருவனின்
வெடித்து அழும் கண்ணீரை
மறைக்கப் பொழிகிறது பேய்மழை
எல்லாருக்கும் பெய்யும் மழைதானென்றாலும்
எல்லாருக்கும் ஒன்றுபோலில்லை!

- வெள்ளூர் ராஜா

****

உருமாற்றம்

மரத்தை வெட்டி
நிழலை விழுங்கி
கான்கிரீட் கூரையிட்டு
பஸ் நிறுத்தம்
அமைக்கப்போவதாகப்
பேச்சு
அதுவரையில்
அந்த மரத்தின் அடியில்
கிளைக்கொடை நிழலினூடே
தழுவிச் செல்லும் காற்றைச் சிலாகித்து
பல்வகைப் பறவைகளின்
இன்னிசையில் லயித்து
அரும்பும் வியர்வை நீங்கப்
பேருந்துக்காகக் காத்திருப்பர் மக்கள்.

- கிணத்துக்கடவு ரவி

******

சொல்வனம்

பறத்தலின் தத்துவம்

மரணத்தை வாலில்
கட்டிக்கொண்டு வானைக்கொஞ்ச
உயரப் பறக்கும் காற்றாடி
தலையை ஆட்டியபடியே
உதிர்க்கிறது
காற்றில் நெய்யும் ஜரிகைச் சிரிப்பை
பயமில்லாக் காற்றாடி
தன் ஒவ்வொரு
மரணத்தின் போதும்
ஒரு தத்துவத்தைத்
தத்துக்கொடுத்துவிட்டே
மறைகிறது.

- பாண்டிச்செல்வி விஸ்வநாதன்

குளப்பள்ளி

குளம் வரையச் சொன்னார்
புதிதாய் வந்த புவனா டீச்சர்
அரை மணி நேரம் கழித்து
காகிதங்களை வாங்கிப் பார்க்கையில்
குணவதியின் காகிதத்தில்
அந்தப் பள்ளியின் ஓவியம்
கடிந்துகொண்ட
புதிய டீச்சருக்குத் தெரியாது
குளம் இருந்த இடத்தில்தான்
அந்தப் பள்ளி இருக்கிறதென்பது.
- சுப்ரா.வே.சுப்ரமணியன்

காத்திருப்பு

மண்குதிரையொன்றைச்
செய்துவைத்த கையோடு
மகளின் பிரசவத்திற்குச்
சென்றுவிட்ட தகப்பனின்
வருகைக்கெனக்
காத்திருக்கிறது குதிரை
அடுத்த தலைமுறையின்
வயிற்றுப்பாட்டைச் சுமப்பதற்காக.
- கி.சரஸ்வதி