பிரீமியம் ஸ்டோரி

தவிப்பின் வலி

பெரிய மதில்களுக்குப் பின்னே

நீண்ட வராண்டாவில்

சற்றுமுன் யாரோ எழுந்து போன பிறகும்

ஆடிக்கொண்டிருக்கிறது

ஒரு சாய்வு நாற்காலி

துண்டு நூலோடு ஏதோவொரு குழந்தையின்

கையிலிருந்து நழுவி

காற்றில் மிதந்து உயர்கிறது

வண்ணங்கள் நிறைந்த ஒரு பலூன்

அழைத்தும் வராத காகத்தின் உணவுக்காக

மருண்டபடி மரத்தில் பதுங்கிக் காத்திருக்கிறது ஓர் அணில்

கான்க்ரீட் கட்டடங்களில் தன் குட்டியின்

பதில் குரலொன்றுக்கு ஏங்கி அழைத்தபடியே

விரைகிறது ஒரு சாம்பல் நிறப் பூனை

கழுத்துப் பட்டையோடு

தெருவின் திசையறியாமல்

ஓடிய தெருவிலேயே

மீண்டும் ஓடிக்கொண்டிருக்கிறது

யாரோ தொலைத்த வளர்ப்பு நாய்

ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து பிரிந்து

வேறொன்றில் தஞ்சமாகிப்போனாலும்

தொலைதலுக்கும் அடைதலுக்குமான

வெற்றிடத்தில்

தவிப்பின் வலி வரையும் சித்திரம்

வண்ணங்களற்று உறைகிறது அந்தரத்தில்.

-தக்ஷன்

*****

சோளக்காட்டுப் பொம்மை

சோளக்காட்டுக்காகத்தான்

தயாரிக்கப்படுகிறோம்

என்று அதற்குத் தெரியாது

வைக்கோல்பிரி கொண்டு

குச்சியில் பிணைத்தபோதும்

அன்பால் கட்டுண்டே கிடந்தது அது

பிய்ந்துபோன பழைய

கால்சட்டைக்குள் அமுக்கியபோதும்

சட்டை அதன் உடலுக்குப் பொருந்தவேயில்லை என்றாலும்

அதற்குக் குறைகளேதும் இல்லை

பானையொன்றைத்

தலையென்று ஆக்கி

கண்ணும் மூக்கும் வரைந்த பொழுதிலும்

நம்பிக்கை குறையாது நின்றது

கோரப்பற்களும் கொடுஞ்சிரிப்பும்

சித்திரிக்கப்பட்டு

வந்தமரும் பறவைகளை

விரட்டும் பணியிடப்பட்டபோது

மனம் நொந்து அழுதிருக்கக்கூடும்

அந்த அப்பாவி பொம்மை!

- கி. சரஸ்வதி

சொல்வனம்

நிசப்த இரவு

தன் இரு கண்களையும் பிடுங்கி

உருட்டி விளையாடும் பூனைக்கு

அங்குமிங்கும் ஒளிர்ந்து உருள்கிறது

அமானுஷ்யம்

யாராவது வெளிச்சத்தைப் பரப்பி

அதன் முகத்தில் இருளைப் பூசிவிடாதீர்கள்

நடுநிசிக் காரிருளில் குறுக்கும் நெடுக்குமாய்

அவை அரூபமாய் ஓடித்திரிவதை

நீங்கள் பார்த்துவிட்டீர்கள்தானே

கோரம் வழியும் அதன் பிடியிலிருந்து

இவ்விரவில் நீங்கள் தப்பிக்க

நிச்சயமாக குறுக்கே போகும்

மியாவ் சத்தத்துடன் ஓர் இருண்ட பூனை.

- வலங்கைமான் நூர்தீன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு