Published:Updated:

சொல்வனம்

மிளகாய் வத்தலை காயவைத்து ஒரு பையும் மல்லி சாமான்கள் ஒரு தூக்கும்

பிரீமியம் ஸ்டோரி

வேறுமுகம்

இந்த மழைதான்

துளிர்க்கச் செய்தது

கிளைகள் பரப்பத் தூண்டியது

பூக்கள் பூக்க ஊக்குவித்தது

பட்டாம்பூச்சிகள் பறக்க

பச்சையாய் மாற்றியது

பறவைகளை அவ்வப்போது

மணிகளாக்கி அதன் கைகளில்

கொடுத்து ஆட்டிப் பார்க்கவைத்து

அழகு பார்த்தது

ஈரம் இல்லாத இதேதான்

இப்போது

வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது.

- ச.ஜெய்

சொல்வனம்

நெடி

மிளகாய் வத்தலை

காயவைத்து ஒரு பையும்

மல்லி சாமான்கள் ஒரு தூக்கும்

கொடுத்து மில்லுக்கு அனுப்பிவிட்டு

பின்னயே வருவாள் அத்தை

இயந்திரத்தில் கட்டியிருக்கும்

துணித் தொம்பையை

அத்தனை உதறு உதறியபிறகே

அள்ளிப்போடுவாள் மிளகாயை

‘இத மாத்திக் கட்டேன்

நீ பொறந்தப்ப வாங்குனதா?’

கேலியா சண்டையா உரிமையா

எதுவும் யோசிக்காமல்

மேல்கூட்டைத் தட்டிவிட்டவாறே

மில்லுகாரர் சொல்வார்

‘ஆமா, பெரிய தேர்த் தொம்பை பாரு

வருசா வருசம் புதுசு கட்ட’

எப்படி சலிக்காமல்

ஒவ்வொரு முறையும்

இதையே சொல்லிக்கொள்கின்றனர்

என்று பார்ப்பேன்

அங்கேயே பரத்தி

ஆற்றிக் காணாமலடித்துவிட்டுதான்

வீடு வருவாள் அத்தை

எனக்குப் பிடித்த

மிளகாய்த்தூள் வாசனையையும் சேர்த்து.

- உமா மோகன்

****

பணியிலிருப்பவன்

காவல் சீருடையில்

விலைப்பட்டியலை வாங்கி

அச்சுக் குத்தியனுப்புபவன்

புதிதாய்த் தெரிகிறான்

பவுடர் பூசிய முகம்

சருமப் பிரச்சினைகளும்

சீருடையிலிருந்து கசியும்

வியர்வை நாற்றமுமற்ற

இஸ்திரி தோற்றம்

`மெல்லினமே' பாடலை

ஒலிக்கவிட்டுப்

பராக்குப் பார்ப்பவளின்

பாதங்களை ஆட வைத்தவன்

ஒருபோதும்

காத்திருப்பு நேரமாய் உட்கார்ந்திருந்த பெண்ணின் தனித்தன்மையை

ஏறிட்டும் பார்க்கவில்லை

அவன் பணியிலிருப்பவன்

அவனது வரவுகளெல்லாம்

கடையை விட்டு வெளியேறுபவர்கள் மட்டுமே.

- க.சி.அம்பிகாவர்ஷினி

சொல்வனம்

புதியதோர் உலகம்

உனது உலகத்திலிருந்து

யார் யாரோ எதை எதையோ

எடுத்துக்கொண்டிருக்கலாம்

நீ விரும்பியோ விரும்பாமலோ

யார் யாரோ எதை எதையோ

உன்னுலகுக்குக் கொண்டு வந்து

சேர்த்திருக்கலாம்

ஆனாலும்

உன் உள்ளங்கையில்

என் கையை வைத்து

நீயே என் உலகம் என்ற நாளில்

அவ்வளவு புத்தம் புதியதாக

இருந்தது நம் உலகம்.

- வெள்ளூர் ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு