பிரீமியம் ஸ்டோரி

கடைசி வசந்தம்

பூக்கள் உதிர்ந்திருந்தன

ஆற்றின் அருகில் வேரோடிய

ஒரு முதிர்ந்த மரத்தின்

உயிர் வாசத்தோடு

நீரோடு பிணைந்தோடிய வாசம்

நெடுந்தூரத்திலிருந்த

அதன் பழைய உறவு மரத்திற்குச்

சொல்லி முடித்தது

முதிர்ந்த மரத்தின் இருப்பையும்

நெருங்கிக்கொண்டிருக்கும்

அதன் இறப்பையும்

மரண வாசத்தை

வேர்களின் வழியாக உள்வாங்கி

உருவாக்கிய

புதிய மலர்களின்

வாசத்தைக் கொண்டு

அந்த உறவு மரம்

உள்ளார்ந்த நட்புகளுக்கெல்லாம்

காற்றில் கடத்திக்கொண்டிருந்தது

ஒரு பழங்கதையின்

நீள் வரலாற்றை.

- தமிழ் இயலன்

***

எதிர்பார்ப்புகள்

அரசமரத்துப் பிள்ளையாரிடத்தில்

நிறைவேற்றப்படாத

ஆயிரத்தெட்டு நேர்த்திக்கடன்கள்

இலையுதிர் காலத்து

உதிர்ந்தோடும் சருகுகள்போல்

காற்றில் அலையும்

நேர்த்திக்கடன்கள்

அதில்

ஒரு வெள்ளெருக்கு மாலை,

இருபத்தொரு மோதகங்கள்

மீதான எதிர்பார்ப்பில்

பொழுதுகள் கரைகின்றன

பிள்ளையாருக்கு!

- ஐ.கிருத்திகா

***

இரண்டடி தூர இடைவெளி

மகளின் திருமண நாளைச் சொன்ன நண்பர்

வாழ்த்துகளை அலைபேசியில் சொல்லுங்கள்

நேரில் வரவேண்டாம் என்றார்

நலம் விசாரித்த நண்பர்

ஒரு தேநீர்கூட இல்லாமல்

வீட்டு வாசலோடு

திரும்பிப் போனார்

இரண்டொரு வார்த்தையோடு

சந்திப்பைத் தவிர்த்த நண்பர்

பார்க்கலாம் என்றவாறு

கைகுலுக்காமல் நகர்ந்தார்

ஒரு கொழுத்த நகைச்சுவைக்கு

சிரிக்கிறாரா இல்லையா

என்பது தெரியாமல் நின்றிருந்த

நண்பர்

முகக் கவசத்துக்குள் மறைந்துகொண்டார்

பக்கத்து இருக்கையிலிருந்த நண்பர்

அலுவலகத்துக்குள்

சிற்றறைக்கு மாறினார்

நலம் கருதி

இடைவெளியோடு

முன்செல்லும் நண்பர்களை

நானும் இரண்டடி தூர இடைவெளியில்

மிதவேகத்தில் ஒரு வாகனம்போல்

பின்தொடர்கிறேன்.

- மு.மகுடீசுவரன்

***

சொல்வனம்

பேரம்

கிலோ இருபது எனக்

கத்திரிக்காய்களைக் குவித்துவைத்துக் கூவி

போணியாகாத கவலையில் அமர்ந்திருக்கிறாள்

பாட்டியொருத்தி

சொத்தை அதிகம்

இரண்டு கிலோ வாங்குகிறேன்

பக்கத்துத் தெருவில் அரை விலைதான்

மகள்போல நினைத்துக்கொள்

என்று ஏதேதோ காரணங்களை அடுக்கி

கணக்கு புரியாமல் தடுமாறச்செய்து

பாதி விலைக்கு வாங்கிக்கொண்டாள் ஒருத்தி

அவளின் வெற்றிச்சிரிப்பு

நொடிகூட நீடிக்கவில்லை

இன்னும் ஐந்தாறு காய்களை அள்ளி அவள் பையிலிட்ட

பாட்டியின் அன்பின் கைகளுக்கு முன்னால்.

- ந.சிவநேசன்

***

கதையும் நிலவும்

சலூன் கடையில்

வெட்ட வெட்ட வளர்கிறது

ஊர்க்கதை

கோயிலில் நுழைந்த

வேண்டுதலெல்லாம் ஒலிக்கிறது

வாசகனின் குரலாய்

எப்போதோ அடைத்து வைத்தேன்

தீப்பெட்டியில் பொன்வண்டுகளை

இன்னும் திறக்கவில்லை மனதிற்குள்ளிருந்து

வெடித்துச் சிதறியது

பட்டாசுத் தொழிற்சாலை

ஊரெல்லாம் அலறல் சத்தம்

ஒற்றையடிப்பாதை

பின்தொடர்ந்து வருகிறது

நிலவு.

- சுபி.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு