Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பூமியானவர்கள்

ஊரடங்கில்கூட

வீடு அடங்கவில்லை என்பதால்

வீட்டுக்குள் விடுமுறை அளித்து

மூன்று வேளைக்கும் ஓட்டலில் சொன்னேன்

பத்து மணிக்கு விழித்தபோது

ஒரு வாரத் துணியைத் துவைத்துக்கொண்டிருந்தாள் அம்மா

பிள்ளைகளின் பழைய துணிகளில்

தையல் பிரித்துக்கொண்டிருந்தார் அண்ணி

ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாதென

குழந்தைக்குக்

கூழ் காய்ச்சிக்கொண்டிருந்தாள் மச்சினி

விட்டுப்போன

அறுநூற்றுப் பத்தாவது

குறளிலிருந்து ஆரம்பித்துக்கொண்டிருந்தாள்

மனைவி பிள்ளைகளிடம்

இதுவரை ஒரு

பொருட்டாக நினைக்காத நான்

பூமி சுற்றுவதை முழுமையாக

உணர்ந்தேன் இப்போது.

- ராமவாசன்

***

சங்கின் பாடல்

ஆற்று வெள்ளத்தில்

அடித்துச் செல்லப்பட்ட

சிறு வெண்சங்கொன்று

வழிநெடுகிலும்

கடலைப் பற்றிய பாடலை

மட்டுமே பாடியது.

- தென்றல்

வானம் பார்க்கும் பூமி

நடவுப்பாட்டு பாடி

நாற்று நட்டு வானம் பார்த்து

கதிரவனைக் கைகூப்பி

வணங்குகிறான்

விவசாயி

குளுகுளு நட்சத்திரவிடுதியின்

கழிப்பறையில் நீங்கள்

கை நீட்டியதும் கொட்டும்

அதே நீருக்காகத்தான்.

- புதுகை விஜய் ஆனந்த்

சொல்வனம்

***

அகம்

நுழைவாயிலில் நின்று

வரவேற்கும் மிக்கி மவுஸின்

வயிற்றில் சுண்டல் காகிதங்கள்

ஐஸ்க்ரீம் கப்புகள்

வட்ட நடைபாதையின்

ஓரத்தில் நிற்கும் பென்குயினின்

கழுத்தை அறுத்துக்

கொட்டியதில்

பின்பகுதியில் கழிந்து கிடந்தன குப்பைகள்

விளையாட்டுப் பகுதியின்

மணலில் நிமிர்த்தப்பட்டிருக்கும்

மீனின் வாய்க்குள்

பாப்கார்ன் கவர்கள் பழங்களின் தோல்கள்

முயலின் முன்னங்கால்கள்

பிடித்திருக்கும் கூடைக்குள்

குல்பி குச்சிகள்

கூல்டிரிங்ஸ் பாட்டில்கள்

கூட வந்த செல்ல மகள்

மிக்கி மவுஸ்

பென்குயின், மீன், முயல்

அனைத்தையும் தழுவ இயலாத வருத்தத்தோடு

உடையும் குரலில் கேட்டாள்

குப்பைத் தொட்டிகள்

குப்பைத்தொட்டிகளாகவே

இருக்கக்கூடாதா அப்பா?

- சிவராஜ்

***

திடீர் வருகை

கலைந்து கிடந்த

வரவேற்பறை

நாற்காலிகள்

அதட்டி உட்காரவைத்த

குழந்தைகளாய்

இழுத்து வந்து

ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன

பலகோணக் கிழிசல்களோடு

நைந்துபோன திரைச்சீலையின் மேல்

அப்போதுதான் போர்த்தியிருக்கக்கூடும்

சிவப்புக் கட்டம் போட்ட

குற்றாலத் துண்டு

அவசரமாக

வீடு பெருக்கியதில்

குப்பையோடு கலந்துவந்த

கரப்பான் பூச்சி

நிலைக்கதவுக்குக் கீழ்

மல்லாந்து கிடப்பது

தூக்கச் சொல்லி அடம்பிடிக்கும்

மழலையாகத் தெரிந்தது

எனக்கு மட்டும்

விளிம்பு நெளிசலை மீறிச்

சிதறிய

காபித் துளிகளில்

நீராடும் சித்தெறும்பு

சூடு தாங்குமோ என்னவோ

வருகை உறுதியை

பத்து நிமிடத்திற்கு முன்

தெரியப்படுத்துவதற்குப் பதிலாக

யதேச்சையாக நிகழ்த்தியிருக்கலாம்

அவசரகதி வேலையின்

அலுப்பு

முகத்தில் பதிந்திருக்க

தொலைந்துபோயிருந்தது

அவர்களின் புன்னகை.

- கனகா பாலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!