Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

குருவிப் பாடம்

இருசக்கர வாகனத்தின்

பக்கக் கண்ணாடிகளில்

முகம் பார்த்து

தனக்குத்தானே

முத்தம் கொஞ்சி விளையாடுகிறது

சிறுகுருவி

எத்தனையோ முறை

முகம் பார்த்துக்கொண்ட

கண்ணாடிதான் என்றாலும்

ஒரு முத்தம் கொடுத்துக்கொள்ள

தோன்றியதேயில்லை

கண்ணாடி பார்த்து

விளையாடிய குழந்தைப் பருவத்தில்

அது நிகழ்ந்திருக்கலாமெனச்

சொல்லிப் பறக்கிறது பட்சி.

- சாமி கிரிஷ்

***

பிம்பம்

நீரில் விழும்

நிலவின் பிம்பத்தைக் கண்டுதான்

கண்ணாடி படைத்திருப்பான்

குட்டையில் விழும்

நிலவின் பிம்பம் கண்கூடு

குளத்தில் விழும் நிலவின் பிம்பத்தை

அனுமானிக்கலாம்

கடலில் நிலவின் பிம்பம்

எங்கே விழுகிறது என்பதைச்

சொல்ல முடியாது

பெரிய கண்ணாடியாகக்

கடல் தன் முன்னால்

விரிந்து கிடக்கும்போது

எந்த இடத்தில் முகம் பார்த்துக் கொள்வது

எனக் குழம்பிப்போகிறது நிலவு.

- மு.ஆறுமுகவிக்னேஷ்

***

சொல்வனம்

அது

அறச் சீற்றம் கொண்டு

வெகுண்டெழுந்தவன்

அடுக்கடுக்காய்

ஆயிரம் கேள்விகள் கேட்டான்

அமைதி காத்த சமூகம்

கடைசியாய்

ஒரு கேள்வி மட்டும் கேட்டது

‘சரி... சோத்துக்கு என்ன செய்கிறாய்?’

- வெள்ளூர் ராஜா

***

மிச்சம்

கதறி அழும் உறவுகளுக்கு நடுவில்

ஈவு இரக்கமின்றி சிரித்துக்கொண்டிருக்கிறது

இறந்துபோனவரின் புகைப்படம்

முன்னும் பின்னும்

சில தினங்கள்

இல்லத்தில் வாழ்கிறது

இறந்தவர்களின் நினைவுகள்

உறவுகள் ஒருவருக்கொருவர்

முகம் பார்த்துக்கொள்ள

ஆண்டுக்கு ஆண்டு தேவைப்படுகிறது

நினைவு நாள் விருந்து

விருந்தையும் நினைவையும்

அசைபோடும் பொழுதினில்

இறந்துபோன அப்பாவின்

சாயலிலேயே நடைபோட்டுக்

கடந்து செல்கிறது பேரக்குழந்தை.

- இளந்தென்றல் திரவியம்

****

இரண்டாவது அலை

கடை வைக்க முடியுமாவென

கவலையோடு விடிகிறது

பழக்கடைக்காரம்மாவின் காலை

வாயைக் கட்டி

வயிற்றைக் கட்டி ஜீவனம் செய்வதன் பொருள்

இப்போது விளங்குகிறது

மாஸ்க் விற்பனையாளனுக்கு

மலையாய்க் குவிந்த தர்ப்பூசணிகளை

எங்கே கொட்டுவதெனக் கலக்கத்தில்

ஆழ்ந்திருப்பவனுக்குத் தேவை

ஒரு கீற்று ஆறுதல்

விடுமுறை நீட்டிப்பு பெற்ற

குழந்தையின் மகிழ்வைக்

கொண்டாட முடிவதில்லை

வீட்டிலிருக்கும் அப்பாக்களால்

முதலாளி அழைக்கும்போதெல்லாம்

கடை மூடப்படும் செய்தியைப் படபடப்போடு

கற்பனை செய்கிறாள்

சூப்பர் மார்க்கெட் பணிப்பெண்

மூடாத மதுபானக் கடையால்

ஆசுவாசமடையும் ஒருவன்

எதற்கும் இருக்கட்டுமென

இப்போதே உருட்டத் தொடங்கிவிட்டான்

அஞ்சறைப் பெட்டியை.

- ந.சிவநேசன்