சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கவிதை

முகக்கவசம்

சிலர் வாய்க்கு மட்டும்

ஒருசிலர் மூக்குக்கு மட்டும்

இன்னும் சிலர் ஒற்றைக் காதில் தொங்கவிட்டும்

பலர் தாடைகளில் இறக்கிவிட்டும்

இளைஞர்கள் பேன்ட் பாக்கெட்டிலும்

பெரும்பாலோர் கைப்பையில் திணித்தும்

வைத்திருக்கிறார்கள்

முகக்கவசத்தை

சாப்பிடும்போது மட்டும்

கழற்றுவதாய்

சத்தியப்பிரமாணம் எடுத்து

இருசக்கர வாகனங்களில்

விரைகையில்

கைநீட்டி லிப்ட் கேட்கும்

வயதானவர்களைத் தவிர்த்து

இதயத்தையும்

இழுத்துப் போர்த்திக்கொண்டு

மன உளைச்சலுடனேயே

கடக்கவேண்டியிருக்கிறது

சாலைகளை.

-காசாவயல் கண்ணன்

***

தீப அணைப்பு

கடைசி நேரத்

தடுமாற்றத்தையும்

தவிப்பையும் காண

மனமில்லாமல்தான்

பூக்களால் குளிர வைக்கிறோம்

இது நிச்சயம்

இரக்கம் அற்றது அல்ல

மெழுகுவத்தியை

ஊதி அணைப்பதைப் போல.

- மு.ஆறுமுகவிக்னேஷ்

***

என் விழிகளை மூடிவிடாதீர்கள்

நான் மரணித்தது உறுதியானதும்

அவசர அவசரமாக

விழிகளை மூடிவிட வேண்டாம்

இறுதியாகக் காண வருபவர்களுக்காக

இருந்தபடியே இருக்கட்டும்

இமை மூடா விழிகள்

விழிகளில் வழியும் கருணை

சிலரின் தீராப்பகையோடு உறவாடக்கூடும்

விழியோரத்து உலராத ஈரம்

சில மனங்களின்

விடாப்பிடி மௌனம் உடைத்து

பகையனைத்தையும் கரைக்கக்கூடும்

இதுவரை சந்திக்காமலேயே

உணர்வால் உறவாடிய எவரேனும்

விழியோடு விழி பார்த்து

முதன்முறை சந்திக்கக்கூடும்

விழிகளில் வழியும் அன்பு

இறுதிவரை சொல்லவியலா

காதலையோ, ஈர்ப்பையோ

இறுதியாக விழிவழி கடத்தக்கூடும்

மூடப்படா விழிகளின் ஏக்கம்

சிலரின் இரக்கத்தைத் தூண்டக்கூடும்

இன்னும் இன்னும்

யார் யாருக்கோ ஏதேனுமிருக்கலாம்

என் விழிகளில் தேட

சிதையில் கிடத்தும்போது மட்டும்

விழிகளை மூடினால் போதும்

உடல் மூடும் விறகுகள் கீறிடாதபடி.

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

***

மரணம்

ஒரு மரணம் என்ன செய்யும்

சிலர் புரொபைலில் கறுப்பு வைப்பார்கள்

சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்

சிலர் ஆர்.ஐ.பியுடன் கடந்து போவார்கள்

சிலர் ஆழ்ந்த இரங்கல்களை தட்டச்சிடுவார்கள்

சிலர் கண்ணீர்க் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்

ஓர் உண்மையான ஜீவன்

உலகுக்குத் தெரியாமல் அழுது கொண்டிருக்கும்

எங்கேயாவது.

- கீழை அ.கதிர்வேல்

சொல்வனம்

***

அணை உடையும் நேரம்

கல்யாண மண்டபங்களில்

எச்சிலை எடுக்கும் மூதாட்டியிடமோ

அடுக்கக வாசலில்

இறுகிய முகத்தோடும்

பொருந்தா உடையோடும்

அமர்ந்திருக்கும் முதியவரிடமோ

தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள்

நல்லா இருக்கீங்களா

ஊர்ல மழ எப்படி

பேரன் பேத்திய பாத்து நாளோச்சோ

பிள்ளைங்க நல்லபடியா கவனிச்சிக்கிறாங்களா

என்று

பின் உடையுமோர் அணையில்

மூழ்கிவிடக்கூடும்

நீங்களும் இந்த உலகமும்.

- அன்பாதவன்