கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

அம்மன் வீதி உலா

ஹல்க்கின் துரதிர்ஷ்டம்

நான்கைந்து ஸ்பைடர் மேன்களுக்கு மத்தியில்

ஒரு ஹல்கிற்கு

ஹல்க்காகவே இருக்க முடிவதில்லை...

ஸ்பைடர் மேன்கள்

ஹல்க்கின் தடித்த புஜங்களைப் பார்த்துவிட்டு

``இந்த புஜங்கள் காற்றின் வேகத்தை

சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்காது’’

என்று குறை சொன்னார்கள்...

ஹல்க் ஆக்ரோஷமாக வன்மத்துடன் கர்ஜிக்கையில்

``ஹல்க்கிற்கு புத்தியைப் பயன்படுத்தத் தெரியவில்லை’’

என்றார்கள்...

ஹல்க், ஒரு கண்டத்திலிருந்து

மற்றொரு கண்டத்திற்குத் தாவுகையில்

``தடித்த உடலால் அவனால் தொடர்ந்து

பறக்க முடியாது’’

என்றார்கள்...

ஹல்க்கின் துரதிர்ஷ்டம்,

அவனை

ஸ்பைடர் மேன்களின் கூடாரத்தை விட்டு

வெளியே தள்ளுவதுமில்லை...

- ராம்பிரசாத்

சொல்வனம்
சொல்வனம்

அம்மன் வீதி உலா

வீதிப்பெண்களுக்கு

அம்மன் வீதி உலாவென்றால்

அலாதிப் பிரியம்.

மனசின் ஆசையெல்லாம்

குழைத்து மாக்கோலம் தீட்டுவார்கள்.

இன்று எந்த வாகனத்திலென்று

தவிப்போடு

தெருமுக்குவரை தேடுவார்கள்

அருகே வந்ததும்

உருகித்தான் போவார்கள்

சிங்க வாகனத்தில் அம்மன்கூட

மங்கலாய்த்தான் தெரிவாள்

பிரியமானவா்களின்

பவனி கடக்கும்வரை.

- காசாவயல்கண்ணன்

இனி எல்லோரும் நடக்கவிருக்கிறோம்

தணியாத பசியைத்

தின்றுகொண்டிருக்கும்

குடிநீர் பாட்டில்களில்

கண்ணீரால் காய்ந்த

வியர்வையின் உப்புகள்...

சும்மாடு இல்லாத் தலையில்

வாழ்க்கை மூட்டையும்

உதடுசப்பும்பிள்ளையின்

கூட்டையும் சேர்த்துச் சுமப்பவனின்

உடல் முழுக்க வியர்வையின் உப்புகள்...

ஐவகை நிலங்களையும்

பிழைப்புக்கெனக் கடந்தவன் கால்களில்

வீக்கமாய் அப்பிக்கிடக்கிறது

பாத்தியமிட்டுக் காயவைக்காத

வியர்வையின் உப்புகள்...

நடைப்பயணமாயும்

நடைப்பிணமாயும் கடந்துகொண்டிருப்பவனின்

இறுகிய மூட்டையில்

தொங்கியபடி பயணிக்கும்

அனுமன் வாலிலும் ராமன் வில்லிலும்

வியர்வையின் உப்புகள்...

இனி எல்லோருமாய் நடக்கவிருக்கிறோம் ஏதோவொன்றிற்காய்...

வியர்வையின் உப்புகளே ஊழியமென்பதால்

எறும்புகளின் வரிசைகளை

எதுவழித்தாலும் தவறில்லை - ஆம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

- பன்னீர்.மு