பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஒருநாள்

நறுக்கிய சிறகுகளை

அடித்தவாறு நடந்து

போன்சாய் மரங்களில் ஏறிய கிளிக்குஞ்சொன்று

தன் வனத்தை அடைந்த திருப்தியில் திரும்புகிறது கூண்டுக்குள்.

நீட்டும் தானியங்களைத்

தின்பதாக நடித்து

முழுநேரமும் களிப்பதோடு

தூரத்துப் பறவைகளின் குரலுக்கேற்ப மீட்டுகிறது

தன் அலகை.

வேடிக்கை காட்டும்

மாலை வெயிலை

தலைசாய்த்து கோபித்து

தினசரி வளர்வதாக நம்பும் கனவுகளைக் கோதிவிடுகிறது.

வீடு அடங்கியபின்

கம்பிகளுக்கிடையே

பிரிந்து போன வானத்தை செல்லமாய் சண்டைக்கிழுத்து விளையாடியபடி

கொறிக்கத் தொடங்குகிறது மிச்சத்தனிமையை.

- ந.சிவநேசன்

சொல்வனம்

பச்சைப் பம்பரம்

அணில் கடிக்கும்போது

முந்திக்கொண்டு அனிதா

கடிக்கையில் அது

பச்சைப் பம்பரம் என்றிருக்கிறேன்

பெருங்கிழவிகளின் கூடையில்

நிறைந்திருக்கையில்

பச்சைப் பம்பரம்தான்

பழுத்திருக்கிறது என்பதை

பலர் ஏற்றுக்கொண்டார்கள்

கைக்கெட்டும் உயரத்தில் இருப்பினும்

பிடுங்கி எறிந்து விளையாட

பச்சைக் கல்லாக்கி

படக்கெனப் பிடிக்க ஏதுவாகியிருந்ததை

மனதார நம்புகிறேன்

பழுத்த காற்றோடு வரும்

நறுமணத்தை

பம்பரங்களாய்ப் பிரித்து

வாரே வா ரகங்களாக்கியிருக்கிறேன்

பிஞ்சுகளின் துவர்ப்பில்

இனிக்க இனிக்க சுவை கூட்டியிருக்கிறேன்

பம்பரம் சுற்றும் சாமி எறும்பு

ஊர்ந்த வேகம் அதற்கு

மற்றபடி கொய்தபழங்கள் பற்றிச்

சொல்ல என்ன இருக்கிறது

கடகடவென ஏறி அமரத் தோதுவானது

கொய்யா மரங்கள்

அவ்வளவே...!

- கவிஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு