சொற்களின் தயக்கம்
உணர்ச்சிகளை
வெளிப்படுத்தும்
ஆசையோடுதான்
நிற்கின்றன
சொற்கள்
உன் முன்.
ஏனோ
பதற்றத்தின் நூலிழைகள்
பின்னுகின்றன
அதனை
சிலந்தி வலையைப்போல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனுடல் நடுங்குகிறது
சட்டென
காற்று அசைத்த
இலையைப்போல.
இயல்பின்
லயத்திலிருந்து
விலகித் துடிக்கிறது
அதன் இதயம்
அறுபட்ட பல்லியின்
வாலைப்போல.
பயத்தில் அமிழ்ந்த
சொற்கள்
தடுமாறுகின்றன
நேரெதிர்
உன் கண்களைச்
சந்திக்கும்
திராணியற்று.
ஏற்பாயோ
மறுப்பாயோ
என்பதற்கிடையே
சிக்கித் தவிக்கிறது.
எப்படித்தான்
சொல்லும்
சொற்கள்?
தயக்கத்தின்பால்
தன்னையே
கைவிட்டுவிட்ட
சொற்கள்
திரும்புகின்றன
சொல்ல இயலா
வலியோடு.
- வேல்முருகன்

தரையிறங்கும் வானம்
வானம் மிகப்பெரியது
அதன் உயரம் எல்லையற்றது
இந்த அண்டமே அதன் கீழ்தான் சுழல்கிறது.
ஆனால்,
ஒரு சிட்டுக்குருவி பறக்கும்போது
வானம் உற்றுக்கவனிக்கிறது.
ஒரு தும்பி பறக்கும்போது
மேலும் வளைந்து ஆர்வத்துடன் நோக்குகிறது.
ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கும்போது
வானம் தரையில் இறங்கி
ஒரு சிறுமியைப்போல் அதைத் துரத்துகிறது.
– தென்பாண்டியன்
பூச்சரக் குழந்தை
தோட்டத்திலிருந்து பறித்து வந்த
கனகாம்பரம் பூக்களை
எதிரும் புதிருமாய்
இரண்டிரண்டாய் அடுக்கி எடுத்து
சரம் தொடுக்கும் நூல் கொண்டு
அழகாய்த் தொடுக்கிறாள் அம்மா.
சமைத்து, துவைத்து, பாத்திரம் துலக்கி,
வீடுவாசல் கழுவித் துடைத்து எனக்
காய்த்துப்போன கைகளால்
அழுந்தப்பிடித்து சேதாரமாகிடாமல்
குட்டியைக் கவ்வும் தாய்ப்பூனையின்
லாகவத்தோடு கையாளுகிறாள்.
காற்றில் கலையும்
ஒன்றிரண்டு பூக்களையும்
குறும்புக்காரப் பிள்ளைகளை
செல்ல அதட்டலோடு சீர்திருத்தும்
தாயின் மனப்பாங்கில்
நேர்ப்படுத்தி எடுத்துக்கொள்கிறாள்.
மொத்தப்பூக்களையும்
வரிசையாய்த் தொடுத்து முடித்த பின்
அவள் கரங்களில் எடுத்துப்போவது
பிரசவித்த குழந்தையைக்
கைகளில் ஏந்தியதைப்போல இருக்கிறது.
-தி.சிவசங்கரி
நுட்பத்தில் நுழைந்து
ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் கேட்கிறது
விடுமுறைக்காக கிராமத்திற்கு வந்த
நகரத்தில் வசிக்கும் சிறுமி.
வெள்ளந்திச் சிரிப்பில்
சலிக்காது கற்றுத்தருகிறாள் நுட்பத்தை
தோழிகள் புடைசூழ கிராமத்துச் சிறுமி.
அடுத்தடுத்த முறையிலும் ஏற்பட்ட பிழையில்
‘ஓ மை காட்’ என நடு நெற்றியில்
பட்டென்று அடித்த ஓசையில்
பறந்தது பூவரச மரக்கிளையில்
இளைப்பாறிக்கொண்டிருந்த பறவை.
கற்ற நுட்பம் கைதந்ததில் இறுதியில் சரியாகப்போடுகிறாள்
சா பூ த்ரீயையும்
ஒத்தையா ரெட்டையாவையும்.
- துரை. நந்தகுமார்