எங்கள் வீட்டின்
முதல் மரணம்
மர்ஃபி ரேடியோவை
விற்றபோது நிகழ்ந்தது.
மேலெழும்பிக்
கீழிறங்கும்
விமான ஓசைகளை
திருகு குமிழின்
சுற்றுக்கேற்ப
மினியேச்சர்களாய்த்
தந்துகொண்டிருந்தது.
செவிவழி சென்ற
செய்திகளால்
அகலத் திறந்த
விழிகளில்
உலகை விரித்தது.
கிரிக்கெட் போட்டிகளின்போது
உள்ளொளிர்ந்த
மங்கலான மஞ்சள்
ஒளியில்
வீரர்களைத் தேடச் செய்தது
இசையைப்
பிடிப்பதற்கென்று
ஏரியலில்
சிலந்தியை
வலை கட்டச் செய்தது
விருப்பப் பாடலுக்காய்
டியூனர் திருப்ப
மிட்டாய்களைப்
பரிசளிக்க வைத்தது
தேசத் தலைவர்கள்
மரணித்தபோது
ஊரையே குழும வைத்தது.
ஹை டெஃபனிசன்
ஆடியோ
ஹோம் தியேட்டரில்
வீடதிர இறங்கும்
இசையின்
இரைச்சலுக்கிடையே
மயிலிறகின் வருடலாய்
மனதில் இறங்குகின்றன
மர்ஃபி நினைவுகள்.
- பா.ரமேஷ்

மழைக்கு என்ன தெரியும்!
எப்போதாவது பெய்யும் சிறியமழைக்கு
அமிர்தவர்ஷினி இராகம்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்போதாவது பெய்யும் சிறியமழைக்கு
யாகங்களில் உச்சரிக்கப்படும்
சம்ஸ்கிருத மந்திரங்கள்
புரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்போதாவது பெய்யும் சிறியமழைக்கும்
நுரை பொங்கச் சுழித்தோடும்
நதிக்கும் தொடர்பில்லை.
எப்போதாவது பெய்யும் சிறியமழை
சாலையில் கிடக்கிறது
பிரசவித்த வானத்தைச் சுமந்தபடி.
எப்போதாவது பெய்யும் சிறிய மழை
சாலையில் தேங்கி
காக்கைகளின் தாகம் தணிக்கிறது.
எப்போதாவது பெய்யும் சிறியமழை
சாலையில் உறங்கும்
சிறுகற்களைத் துயிலெழுப்புகிறது.
எப்போதாவது பெய்யும் சிறியமழை
தொலைக்காட்சிகளில்
தலைப்புச் செய்தியாகிறது.
எப்போதாவது பெய்யும் சிறியமழையில்
காகிதக் கப்பல்கள்
தரைதட்டி நிற்கின்றன.
எப்போதாவது பெய்யும் சிறியமழை
வாரம் முழுதும் அடைத்துப் பெய்யும் பெருமழைக்கான
ஏக்கங்களைக் கிளறுகிறது.
- முத்துக்குமார் இருளப்பன்
வனத்தின் கேள்வி
ஒரு துயரத்தின்போதோ சண்டையிடும்போதோ
அல்லது கூடும்போதோகூட
உதறப்பட்டிருக்கலாம்.
முதுகிலிருந்தோ முன்கழுத்திலிருந்தோ
அல்லது அடிவயிற்றிலிருந்தோகூட
விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கறுப்பு வெள்ளை இளமஞ்சள் சாம்பல் சிவப்பு
நிறமெனத் தனித்தனியே சிதறிக்கிடக்கின்றன
வனமெங்கும்.
எந்தப் பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த
இறகென்று வனமும்,
ஏன் நிராகரிக்கப்பட்டோமென்று இறகுகளும்
இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கின்றன
காற்றிடம்.
- திருவெங்கட்