பிரீமியம் ஸ்டோரி

அழகாகும் கோலம்

முந்தைய நாள் ஈரம் உலர்ந்து

காற்றில் புழுதி பறக்க

குடிசை முன் விரிந்திருக்கும்

மண் தரையில் நீர் தெளித்து

மீண்டும் ஈரம் படரவைத்த பின்

சிலையெனக் குனிந்து

அன்றைய கோலத்திற்கான

அத்தனை புள்ளிகளையும்

அழகாய் முதலில் வைத்து முடித்து

அடுத்து கோடு வரைபவளின்

கோலத்தை அழகாக்கிடப்

போட்டி போடுகின்றனர்

மாவைச் சிதறவிடும் சிறுமிகளும்

பூக்களை நழுவவிடும்

அருகில் நிற்கும் மரமல்லியும்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

அம்மாவின் மூக்குத்தி

ற்றைக்கல் மூக்குத்தியோடு

அம்மாவைப் பார்க்கும்போது

எங்களூர் அம்மனின் சாயல் தெரியும்.

அவள் அண்மையை

வாசம் உணர்த்துமென்றால்

தொலைவில் அவள் வருகையை

அம்மூக்குத்தியின் பளபளப்பே

காட்டிக் கொடுத்துவிடும்.

சீட்டாட்டத் தேவைக்காக

வாங்கிப் போய் அடகு வைத்த அப்பா

தோற்றுவிட்டுத் திரும்பிய பின்

மீட்க முடியாமலேயே விட்டுவிட

அன்றோடு மறைந்துபோனது

மூக்குத்தி ஒளியும்

அம்மாவின் முகப்பொலிவும்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யசோதரையின் கண்ணீர்

  • போன்சாய் மரமே போன்சாய் மரமே

அவ்வப்போது உன் அடியிலமர்ந்து

சற்று இளைப்பாறுகிறேன்

யாரிடமும் சொல்லிவிடாதே

அந்நேரங்களில்

நான் உன்னைவிடச் சிறிதாகிவிடுவதை.

சொல்வனம்
சொல்வனம்
  • மரபணு மாற்றத்தில்

வளர்ச்சி குறைக்கப்பட்ட

அரச மரத்தின் அடியில்

சிறு புத்தர் சிலையை அமர்த்தினேன்

இப்போதெல்லாம் நீர் ஊற்றாமலே

சிறு தொட்டியின் மண்

ஈரப்பதத்துடன் காணமுடிகிறது

யசோதரையின் கண்ணீராயிருக்கலாம்.

  • எவ்வளவு பெரிய ஆலமரம்

இப்படி சுருக்கப்பட்டு வரவேற்பரையில்...

என் வீட்டிற்கு வரும்போது

அதன் விழுதுகளைப்பற்றி

யாரும் ஆடிவிடாதீர்கள்

விழுந்து நொறுங்கிவிடும்

உங்கள் பால்யமும்.

  • தொகுப்பகங்களில்

ஆசை ஆசையாய் வளர்க்கப்படுகின்றன

போன்சாய் காடுகள்

அதில் பதுங்கியிருக்கும்

கொடிய வகை மிருகங்கள்

வெளியே போய் வேட்டையாடுகின்றன.

- வலங்கைமான் நூர்தீன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு