
தனித்தலையும் கேள்விகள்
படையல்
ஒளி புகாத அடர் குறுவனத்துள்
துருவேறிய சூலாயுத வடிவில்
ஆண்டுக்கொருமுறை படையல் பெற்றுவந்தது
குலசாமி
முதல் பள்ளயம் எடுக்கும் உரிமைப் போட்டியில்
கைகலப்பாகி மூன்றாண்டுகளாக
நின்றுபோனது படையல்
நேர்த்திக் கடனாய் விட்ட கடாக்கள்
பருவம் தாண்டி நிற்க
ஆளரவம் இல்லாததால் உட்செல்லும்
ஒற்றையடிப் பாதையும் மூடி நிற்க
பூசாரியின் பெருமுயற்சியால்
மீண்டும் ஆரம்பமானது
படையல் திருவிழா
பலிகடாக்கள் சிலுப்பிக்கொண்டு நிற்க
கூட்டம் கையெடுத்து
வணங்கி நிற்க
சாம்பிராணிப் புகை
எங்கும் பரவ
சாமியை அழைத்துக்கொண்டிருந்தார் பூசாரி
வராவிட்டால்
உனக்குப் பூசையே கிடையாது சோதிக்காமல் வா
என்று ஆணையிட்டார் ஊர்ப் பெரியவர்
சாமியாடியின்மேல் வந்திறங்கி
அங்குமிங்கும் ஓடி ஆடி
ஓங்கிப் பெருங்குரலெடுத்து
முழக்கமிட்டு உறுமிக்கொண்டிருந்த சாமி
தன் குறைகளைச் சொல்லியது பக்தர்களிடம்.
- ஆலங்குடி வெள்ளைச்சாமி

தனித்தலையும் கேள்விகள்
அவ்வப்போது அப்படித்தான்
என் வெறுமைப் பொழுதுகளின்
துயர் களைந்து விடுவிக்க
ஒரு சிட்டுக்குருவி
ஒரு பட்டாம்பூச்சிபோல
துறுதுறுவென
சிரித்துப் பேசித் திரியும்
எதிர்வீட்டுக் குட்டிப்பாப்பாவின்
வருகை அவசியப்படுகிறது.
வரும்போதே வாய்நிறைய
கேள்விகளை அள்ளி வருபவள்
ஒவ்வொன்றாய் என்னிடம்
எடுத்து வைப்பாள்.
ஒன்று முடிந்து இன்னொரு கேள்வி
அது கடந்ததும் அடுத்த கேள்வியென
முடிவிலியாய்
கேள்வி பதில் தொடரும் கணம்
அவளுக்கான திடீர் அழைப்பில்
விடைபெற்றுப் போவாள்.
போகும் முன் அவள் கேட்ட கேள்வி
அப்பாவியாய் என் பதிலுக்கு
அங்கேயே
தனித்தலைந்துகொண்டிருக்கும்.
- தி.சிவசங்கரி
நகர வாகன வாழ்க்கை
பின்தொடரும் வாகனங்கள்
விரட்ட
வாகன வேகத்தைக்
கூட்ட வேண்டியுள்ளது.
முன் செல்லும்
வாகனங்களைத் தொடர
வேகத்தைக்
குறைக்கவேண்டியுள்ளது.
குறுக்கில் கடக்க
முயலும் வாகனங்களுக்குக்
குறுக்கில் கடக்க
அவசரப்பட வேண்டியுள்ளது.
குறுக்கில் கடக்கும் வாகனங்களை
சகிக்க வேண்டியுள்ளது.
முந்தும் வாகனங்களை
முந்தப் போராடுவதும்
வேகமாய்ச் செல்லும் வாகனங்களை
மிஞ்ச முயல்வதும்
தவிர்க்க இயல்வதில்லை.
பல ரக வாகனங்களுக்கு
நடுவே வாகனத்தைச்
செலுத்தவேண்டியிருக்கும்
இந்தப் பெரு நகரத்தில்
வாகன ஓய்வுக்கு இடம்
தேடல் என்பது நகரத்தில்
வாகனம் ஓட்டுவதைவிட
சிரமமாக இருக்கிறது.
- வீ.விஷ்ணுகுமார்