Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சரிவிகித தக திமிதா

கடத்தப்படுவதன் நன்மை

என்னைக் கடத்திச் சென்று விடேன் எனக் கெஞ்சும்

ஒருத்தியை

உறுத்து முறைக்கிறாய்

ஸ்டாக்ஹோம் சின்றோமால் பாதிக்கப்பட

வேண்டும் என்றால்

கடத்தப்படாமல் பின் எப்படி?

இப்போதோ சற்றே குழம்பி

உறுத்து முறைக்கிறாய்

நாம்தான் ஏற்கெனவே

நேசித்துக்கொண்டுதானே

இருக்கிறோம், அதுவும்

பரஸ்பரம்.

கடத்தப்படுதலில் உள்ள

நம்பிக்கையின் நிச்சயமின்மை

இல்லையே இதில்.

நான் தப்பித்துவிடுவேனோ என நீயும்

நீ தாக்கும் நேரங்களை

எதிர்கொள்ள நானும்

தயாராய் இருப்போம் இல்லையா.

கடத்திச் செல் அன்பே

அந்நிச்சயமின்மையின்

தனிமையை

வன்மையை

பற்றிக்கொள்ள வேறு

யாருமிலா

வெறுமையின் இனிப்பினை.

- தேவசீமா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சொல்வனம்

இனிப்பு பூசிய வலை

மிகக் கனமான சொற்களின் மீது சர்க்கரை தூவித் தருகிறாய்

இனிப்பின் பிசுபிசுப்பு தாளாமல்

அவசர அவசரமாய்

ஓடி வந்த சிலந்தியொன்று

முதலில் கொறிக்கிறது

ஒரு சொல்லில்

சிக்கிய தன் காலினை.

- தேவசீமா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரிவிகித தக திமிதா

மிகவும் பிரயாசைப்பட்டு

பலகட்ட தீர்வுகளுக்காக

சமைக்க முடிவெடுத்தபோது

கிரீடம் கட்டிக்கொண்டேன்

நறுமணம் பெருக இவ்வையகம்

என சமையலறைக் கதவு

திறந்திருந்தது

எல்லாவற்றையும்

சரிசெய்துவிட

இந்த முடிவு அவசியமாகிறது

அருகிலிருக்கும் என்பொருட்டு

கறிவேப்பிலையும் பட்டை கிராம்பும்

சரிசமமாக்கப்பட்டிருக்கிறது

பாத்திரங்களைக் கைவிடாத

பக்குவம் வாய்த்ததை

பிறகொரு முறை சொல்கிறேன்

கேரட் கதை பீன்ஸ் சிறுகுறிப்பு

பச்சடி கட்டுரை

எல்லாமே சரி விகித தக திமிதா

விசிலடிக்கும் குதூகலத்தோடு

குக்கர் பறக்க

மதியம் வந்துவிட்டது

யாருக்கான ஆலாபனை இது

வீணைச் சத்தமென

பூனை கத்துகிறது

பொறு பொறு

பிரியாணியின் முதல் கவளம்

உனக்குத்தான்..!

- கவிஜி

சொல்வனம்

பிரமிப்பு

கோவிலினுள் நுழைந்து

அசையாமல் நின்றுவிடாதே

வாய் திறக்கக்கூடும்

அகன்றவிழிச் சிற்பங்கள்.

-பாணால்.சாயிராம்