பிரீமியம் ஸ்டோரி

ஒரு ‘பாவம்’ விடிகிறது

ஞாயிறு இரவு விடியக் கூடாதென்று

உறங்கும்முன் வேண்டுவாள் வெண்பா

வாரத்தின் ஏழு நாள்களும்

ஞாயிறாக வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான் முகில்

`என்னவாகப் போகிறாய்...’ என்றால்

`ஞாயிறுவாகப் போகிறேன்’ என்பாள் கயல்

எந்தக் கிழமை பிடிக்குமெனக் கேட்டால் சந்தேகமின்றி ஞாயிறென்று

ராகம் போடுவான் பரிதி

இந்த ஞாயிற்றுக்கிழமையையும்

குழந்தைகளையும் பிரிக்க முடியாமல் விடிகிற திங்கள்கிழமைக்கு ஒரு மாற்றுப்பெயர் வைக்கச்சொன்னால் `பாவம்’ என்கிறாள் பூவிழி.

- மகுடீசுவரன் மு

சொல்வனம்
சொல்வனம்

வனப்பட்சியின் வல்லமை

கூடு நீங்கிப் பறக்கும் அச்சிறு வனப்பட்சிக்கு

கழுத்தை உறுத்தும் நுகத்தடியோ

கடிவாளமோ ஏதுமில்லை.

அதன் சிறகுகளில்

அடர்த்தியாய் உறைந்திருக்கிறது

காற்றைக் கையாளும் லாகவம்.

வானேகும் வழியில் எதிர்ப்படும் புள்ளினங்கள் பற்றிய புகார்கள் ஏதும்

அதன் கைவசமில்லை.

ஆகாயப்பார்வையில் அகப்பட்டு

இரையாகும் விதைகளை

மரமாக வனமாக மாற்றிவிடும்

வல்லமை பற்றிய அறியாமையோடே

கொத்திக்கொண்டிருக்கிறது தன் குறு அலகால்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒற்றையடிப்பாதை

நீரற்ற ஓடையில்

நீா்ப்பாம்பாய்

நெளிந்து செல்கிறது

ஒற்றையடிப்பாதை...

- வெள்ளூர் ராஜா.

தாயுறக்கம்

பேருந்துப் பயணத்தில்

என் தோள்மீது

சாய்ந்து உறங்குகிறாள் அம்மா

கண்களைத் திறக்காத

பூனைக்குட்டியைப்போல.

மார்பிலும்

மடியிலும்

இடுப்பிலும்

கிடத்திச் சீராட்டியவளின்

சூடான மூச்சுக்காற்று

உடலைக் கூசச் செய்கிறது.

சன்னலின் வெளியில்

கடந்து செல்லும் நிலக்காட்சிகள்

அவளது தலைமுடியைக் கோதிவிடுகின்றன.

பேருந்தின் குலுங்கல்களுக்கு

அவள் விழித்துவிடாதவாறு

சமன் செய்து

அந்த தேவ கணத்தை

உயிர்ப்போடு வைத்திருக்கிறேன்.

அம்மாக்கள் மகள்களாக

ஒரு பேருந்துப் பயணமே போதும்.

எனது மனத்தொட்டிலில்

அவளைத்

தாலட்டிக்கொண்டிருந்தேன்.

ரோ... ரோ...ரோ...ரோ... ரோ...

- முத்துக்குமார் இருளப்பன்

அதே தும்பிகள்

ஒரு மழைநாளின் முன்னறிவிப்போடு குட்டிக்குட்டி விமானங்களாய்

வளைய வந்து மனசெல்லாம் மகிழ்ச்சியை நிரப்பிச் சென்ற அதே தும்பிகள்தான் இதயத்தில் துக்கம் நிறைத்து

அன்றைய மழைவெள்ளம் நிரப்பிய கிணற்றில் செத்துக்கிடந்தன.

- தி.சிவசங்கரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு