குருதிக் கூறுகள்
மென் இறக்கைகள்
பிய்த்தெறியும்
வன் கரங்களுக்கு
நிறமிகளைப்
பரிசளித்துச் சாகும்
சிறு பட்டாம்பூச்சியாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்...
ஒட்டிய நிறமிகளின்
ஓராயிரம்
உணர்வுத் துணுக்குகளில்
உருப்பெறும் என்னை
மீண்டும்
பிய்த்தெறிய முற்படாதீர்கள்...
உங்கள் விரல்களிலிருந்தும்
வழியக் கூடும்
குருதிக் கூறுகள்...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- கீர்த்தி கிருஷ்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅமையாது உலகு
காட்டாறு வந்து கலந்தபோது
துழந்தும் தொட்டும்
அருள் வந்து ஆடிய
குலசாமிகள் நதிகள்
கொள்ளை நோய்கள் வந்து
கொத்துக் கொத்தாய்
குலசாமிகளை
அள்ளிப் போனது
அம்மா தேய்த்துக் குளித்த
அரப்புப் பொடி கலந்த
ஆற்று மணலையெல்லாம்
சிட்டிகை அள்ளி வாயிலிட்டதும்
நாட்டுச் சர்க்கரையாய் இனித்த
ஆற்று மணலையெல்லாம்
தொடர்ந்து லாரி லாரியாய்
வாரிக் கொண்டிருந்தபோது
மீன்கொத்தியின் சோடிக் கண்களைப் போலவும்
உலர்ந்துபோன உழிஞைக்கொடியின்
சல்லி வேர்களைப் போலவும்
வெறுமனே நின்று
வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தேன்.

- ஜெயநதி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
துரோகத்தின் பிம்பம்
வெள்ளிக்காசுகளை
எண்ணிக்கொண்டிருந்த
யூதாசைக் காணநேர்ந்தது.
“கொஞ்சம்கூட
வெட்கமில்லையா?” என்றேன்.
நிமிர்ந்தென்னைப் பார்த்து
எங்கிருந்து வருகிறாய்
என்றான்.
சொன்னேன்...
என் பின்னால் எட்டிப்பார்த்தவன்
வெள்ளிக்காசுகளை
என் கையில் திணித்துவிட்டுப்
போனான்.
திரும்பிப் பார்த்தேன்...
நெஞ்சில் பதிந்துகிடந்த
தோட்டாக்களோடு
பாலசந்திரன் புன்னகைத்தான்.

- சூர்ய பாரதி
ஆசை
பறக்கத்தான்
ஆசை.
யுக துக்கத்தைச்
செயலிழக்கச் செய்து
சல்லிவேர் உறவைத்
தவிர்த்து
சம்பிரதாயக் கடமைகளைக்
கத்தரித்து
துயரமற்ற பொழுதை
ஏந்தி
மனக்கீற்றை விலக்கி
வெறுமைப்படலக் காட்சிகளைத்
தணிக்கையாக்கி
பறப்பதற்கு
சாத்தியமில்லாக்
கால்களுக்கு
பறக்கத்தான் ஆசை.

- நலங்கிள்ளி