தேசிய விற்பனை
ஒரு ரொட்டித் துண்டுக்காக வானத்தை விற்றவனும்
நட்சத்திரங்களை நம்பி
தன் வீட்டின் சுடர்களை அணைத்தவனும்
சந்தித்துக்கொள்ளும்
ஒரு புள்ளியில்
அவர்களுக்கான பூமி களவாடப்பட்டிருந்தது.
கண்மூடித்தனமான பக்தியில் கடவுளே விற்கப்படுவதுபோல
தேசபக்தியின் பெயரால்தான் தேசமும் விற்கப்படுகிறது.
போராட்டக்காரர்களின்
குரல்வளையில்
பதுங்கி இருந்த
துப்பாக்கித் தோட்டாக்கள்தான்
ஆள்பவர்களின் அதிகாரத்தை
உறுதி செய்கிறது.
கடல் அலைகளைத் தாண்டிய
கணக்கற்ற பொய்கள்தான்
ஆளுகிற தந்திரங்கள் என்று
ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.
ஆலயங்களில் மட்டுமா
ஆராதனைகள்?
அரசியல் கூட்டங்களுக்குச்
சென்று பாருங்கள்.
பக்தியைத் தாண்டி நிற்கிறது
பகுத்தறிவின் அர்ச்சனைகள்.
மின்விளக்குகளால் மறைக்கப்படுகின்றன
பௌர்ணமிப்பொழுதுகள்
- அமீர் அப்பாஸ்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமீன்களாய்த் துள்ளும் ஜீவனம்
பாம்பு வளர்க்க ஆசைப்பட்டவன்
சுருண்டு படுத்திருக்கிறான்.
அவன் ஊதும் மகுடிக்கு
அவனே அவ்வப்போது
படம் எடுத்து ஆடுவான்.
பயத்தில் நெளியாமல்
அந்த ஓலைப்பெட்டியைக்
கொஞ்சம் திறந்துபாருங்கள்.
இல்லாத அரவமொன்று
நீலம்பாரித்துக் கிடப்பதை.
- வலங்கைமான் நூர்தீன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மிடையே...
நம்மிடையே இருப்பது
சிறு குன்று
பெரு மலை
சிற்றாறு
பெரு வெள்ளம் சுழித்தோடும் பேராறு
குறைந்தபட்சம் ஒரு சுவர்
இவை எதுவுமில்லை
உன் மீதும்
என் மீதும் கால் போட்டபடி
உறக்கத்தில் சிரிக்கும்
குழந்தையைப் போலொரு காலம்
அவ்வளவுதான்.
- வெள்ளூர் ராஜா
கதவுகள்
சில கதவுகளைத் திறக்க தள்ளு
சில கதவுகளைத் திறக்க இழு
சில கதவுகள் தானே திறந்து மூடும்
சில கதவுகள் திறக்கும்போதே சப்தமிடும்
கதவுகள் எப்போதும் திறந்து
மூடிக்கொண்டே இருக்கின்றன கவிதைகள்போல.
திறக்கப்பட்ட அறைகளைப்போல
கவிதைகளின் நீளம் அகலம் உயரம்
மாறிக்கொண்டே இருக்கின்றன.
வாசிப்பவனின் மனக்கதவுகளை
கவிதைகள்
திறந்து மூடுகின்றன
கதவுகளைப்போல.
- ஏந்தல் இளங்கோ