இடபத்தின் கண்கள்
அந்தக் கண்களை
ஒருமுறையேனும்
உற்று நோக்கியுள்ளீர்களா
தோழர்களே
கொழிப்பாய் வளர்ந்து
கொம்பு சீவி
தினவெடுத்து
திமில் சிலுப்பி
வாடிவாசலில் களமாடும்
அடங்காத இளங்காளையின்
அக்கினி விழிகளைச் சொல்லவில்லை
வரிவரியாய் எலும்பு தெரிய
வாகனத்தில் நெருக்கியடைத்து
இறுதிப்பயணம் செல்லும்
இறைச்சி மாடுகளின்
பரிதாபக் கண்களைப்
பற்றிக் கேட்கவில்லை
இடை வாழ்க்கையில்
வீரியம் அடங்கி
குளம்புகளில் லாடமேற்று
சூட்டுத் தழும்புகளுடன்
தார்க்குச்சிக் குத்துகள்
பிட்டத்தில் வாங்கி
சொரணை சுண்டிப்போய்
வயிற்றுக்கு இரையிடுபவருக்கு
வஞ்சனையில்லாமல்
வாய் நுரைத்து மூச்சிரைக்கப்
பெரும்பாரம் சுமக்கும்
எருதுகளின் கண்களைச்
சுட்டிக் கேட்கிறேன்
ஆயிரம் காரணங்கள்
அடங்கிப் பொதிந்து
பேரமைதி குடிகொள்ளும்
புத்தரின் கண்களையொத்த அதனை நீவீர் ஒரு முறையேனும்
பார்த்திருக்கிறீர்களா
முன்வழுக்கையேறி
சிறு தொந்தி சரிய
அடையாள அட்டை கழுத்திலாட
பணிக்குக் கிளம்பிய
ஒரு திங்களன்று காலையில்
முகம் பார்க்கும் கண்ணாடியில்
அக்கண்களைப் பார்த்தேன் நான்.
- நாராயணபுரம் கணேசவீரன்
****

செடிகளின் பசியறிந்தவன்
நகரத்தின் பூங்கா ஒன்றின் முன்பு
பூங்கன்றுகளை விற்பனைக்கு
அடுக்கி வைத்திருக்கிறான் ஒருவன்
பள்ளியில் காலை வழிபாட்டுக்கூட்டத்தில்
வரிசைகட்டி நிற்கும் மழலைகளென
கடந்துசெல்வோரின் கண்களிலும் பேச்சிலும் இடம்பிடித்தன
சிரித்துக்கொண்டேயிருக்கும் செடிகள்
விடாது பெய்யும் சூரிய வெப்பத்தில்
வாடிப்போகும் என
மணிக்கொரு முறை
தண்ணீரைத் தெளிக்கிறான் செடிகளின் பசியறிந்தவன்
மதியம் வரையிலும் ஒரு செடிகூட விற்கவில்லை
இப்போது வாடிப்போய்க் கிடந்தது அவன் மனம்!
- நேசன் மகதி
***
விடியல் கோலம்
விடிவெள்ளி மறைக்கும்
கருமேகத் திரள் வெட்டி
விடாமல் கொட்டுகிறது
குளிர்கால மழை
விட்டு விட்டு எரியும்
நட்சத்திரப் பந்தணைத்து
பூஜைக்கு ஏங்குகிறது
ஒரு பௌர்ணமி
விடுதலைக் கனவு கலைந்து
வேகமாக காலைக் கடன்
முடிக்கிறது சூரியன்
சொதசொதவென
நனைந்துவிட்ட
வாசல் பெருக்கி
புள்ளி வைக்கிறாள்
பூமகள்.
- சாய்வைஷ்ணவி
