Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

மீன் தொட்டியின் கண்ணாடிச் சுவருக்குள் வீசப்படும் உணவுத்துணுக்குகள்

சொல்வனம்

மீன் தொட்டியின் கண்ணாடிச் சுவருக்குள் வீசப்படும் உணவுத்துணுக்குகள்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

புராதனம்

கூட்டம் கூட்டமாகப்

புறாக்கள் படபடத்த புராதன வீட்டில்

இப்போது ஆட்கள் வசிக்கவில்லை

எப்போது வேண்டுமானாலும்

நொறுங்கி உடைந்து விழலாம்

என்ற கையறு நிலையில்

தேக்கு உத்திரங்களில்

தொங்குகின்றன வௌவால்கள்

ஆதிகாலத்து வீடு

பூட்டியே கிடக்கிறது

அதன் துருப்பிடித்த சாவி

வௌவால்களிடம் இருக்கிறது

பூட்டுடைத்தோ கதவுடைத்தோ

உள்ளே நுழைவதற்குத்தான்

இப்படித் தலைகீழாக நிற்கிறீர்கள்

குறுக்கும் நெடுக்குமாக

அங்குமிங்கும் சடசடத்துப் பறக்கும்

வௌவால்களைக் கட்டுப்படுத்துவது

அவ்வளவு சிரமம்

உடைந்துவிடாமல்

எப்படி தலைகீழாக நிறுத்தப்போகிறீர்கள்

அந்த புத்தர் சிலையை

இருளைப் பூசிக்கொண்டு

அங்கலாய்த்து அலைந்த வௌவால்களே

விடிந்துவிட்டது

காகங்கள் சுமந்து பறக்கின்றன

நீங்கள் இறக்கி வைத்த இரவை.

- வலங்கைமான் நூர்தீன்

சொல்வனம்

பழி பாவம்

மீன் தொட்டியின்

கண்ணாடிச் சுவருக்குள்

வீசப்படும் உணவுத்துணுக்குகள்

குவி கரண்டியின் நிமித்தம்

முன்பே தீர்மானிக்கப்பட்டவை

மீன் அவ்வப்போது ஒதுங்கி

முத்தமிடும் தொட்டி விளிம்புகள்

இதற்கு முன் ஓராயிரம் முறை

முத்தத்தின் நிமித்தம்

அண்மிக்கப்பட்டவை

மீன்

இதற்கு முன் ஓராயிரம் முறை

தேர்வு செய்திருக்கிறது

இளைப்பாறும் இடத்தை

இதையெல்லாம் சொல்லிவிட்டு

பழி பாவமெல்லாம்

காட்சிப்பிழைகள்தாம் என்றால்

அதில்

உங்கள் யாருக்குமே

ஒப்புமை இருப்பதில்லை.

- ராம்பிரசாத்

சைக்கிளெனும் காற்றுப்பை

வீட்டில் நிற்கும் சைக்கிள்

இதயம் போல்

பல மில்லியன் சுற்றுகள்

காற்று வாங்கியதால் ஓய்வெடுக்கிறது

ஏப்ரல் மேயில்

சைக்கிளுக்காக

ஏங்கிய காலங்கள்

என் பிள்ளைகளுக்கு

இப்போது இல்லை

வெயிலோடு திரிந்த

காலங்களை

என் கறுப்புத்தோல்

சைக்கிளோடு பேசுகிறது

என்

வெயிலும் காற்றும்

ஏசியாக இருக்கிறது

பிள்ளைகளுக்கு

நான் பார்த்த வெயில்

அவர்களை வேடிக்கை பார்க்கிறது

சைக்கிளின் காற்றுப்பை

மெதுவாய் இறங்கிக்கொண்டிருக்கிறது.

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்