Published:Updated:

சொல்வனம்

தாவாங்கட்டையைப் பிடித்து தலையில் வகிடு எடுத்து இரட்டைப் பின்னலிட்டு

பிரீமியம் ஸ்டோரி

ஏற்றம்

உச்சிமரத்துக் கிளையேறி

அடுத்த விநாடி

விழுந்துவிடுகிற மாதிரியே

விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது

மந்திக்கூட்டம்!

உச்சிமலை மீதேறி

அடுத்த நொடி

பெய்துவிடுகிற மாதிரியே

போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது

மேகக்கூட்டம்!

உச்சிமண்டை ஏறிவிட்டு

அடுத்த கணம்

காதலில் விழுந்து விடுகிற மாதிரியே

மாயாஜாலம் செய்யும் வித்தையைக்

கற்றிருக்கிறாள் தோழி!

- அ.வேளாங்கண்ணி

***

காத்திருப்பு

தாவாங்கட்டையைப் பிடித்து

தலையில் வகிடு எடுத்து

இரட்டைப் பின்னலிட்டு

பான்ஸ் பௌடரை அளவாகப் பூசி

பழிப்பு காட்டியபடியே

கண்ணில் மை தீட்டி

சிவப்பு நிற சாந்துப்பொட்டால்

நெத்தியிட்டு

மல்லி கனகாம்பரத்தைத்

தலையில் சூட்டி

அழகை ரசித்துக் கன்னம் தடவி

நெட்டி எடுத்துக்கொண்டிருக்கின்றாள் அம்மா

இன்னும் சற்று நேரம்

என்னை உறங்க விடுங்கள்

அம்மாவின் முத்தம் ஒன்று

பாக்கி இருக்கின்றது.

- சரண்யா சத்தியநாராயணன்

*****

சொல்வனம்

அவளின் சாயல்

ஒரு கிளிஞ்சலைப் பார்க்கிறேன்

அதிலுன் கண்களின் சாயல்

உதிர்ந்த ஒற்றை இறகில்

உன் கூந்தலின் மென்மை

மலையடிவாரத்திலிருந்து கேட்ட பறவையின் ஓசை

உன் குரல்

கோடை உடுத்திய வெம்மை

உன் ஆடை

நீ இல்லாத இத்தனிமை

அரவப் புற்றருகே

அகழ்ந்துகொண்டிருக்கும்

வெள்ளெலியின் வளை.

- கோவிந்த்

உருமாற்றம்!

வங்கியைப் பொறுத்தவரை

நானெனப்படுவது

கஸ்டமர் ஐ.டி

ஏ.டி.எம்-மைப் பொறுத்தவரை

நானெனப்படுவது

நான்கு இலக்க பின்

சூப்பர் மார்க்கெட்டைப் பொறுத்தவரை

நானெனப்படுவது

எனது மொபைல் எண்

இணையப் பணப் பரிமாற்றத்தில்

நானெனப்படுவது

ஓ.டி.பி

கணினியைப் பொறுத்தவரை

நானெனப்படுவது

எனது பாஸ்வேர்டு

என்னிலிருந்தே

நானல்லாத

என்னை உருவாக்குகின்ற

மாயக்கரங்களால் ஆனது

டிஜிட்டல் உலகம்!

- ப்ரணா

****

முரண்

சாமி படத்தின் அருகே

வைக்கப்பட்ட கற்கண்டுகளை

பூசை மாடத்தில் இருந்து

எறும்புகள் இழுத்துப் போவதை

ரசித்துக்கொண்டிருந்த

அதே சமையல் அறையில்தான்

முன்னிரவு

நான் கிழித்திருந்த

பூச்சிக்கொல்லி சாக்பீஸ்

கோடுகளுக்கு

பலியாகிக் கிடந்தன

கரப்பான் பூச்சிகள்.

- தி.கலையரசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு