உருமாற்றம்
அந்த நிலம்தான் எங்களுக்கு
சோறு போட்டது
சோறு போடும் நிலத்தை விற்கவே கூடாது என்று
உறுதியோடு இருந்தேன்
ஆனாலும் வாங்கிய கடனுக்கு
விற்க வேண்டியதாகிவிட்டது
நீண்ட வருடங்களுக்குப் பிறகு
இன்றுதான் அவ்வழி செல்கிறேன்
அடையாளம் தெரியாத அளவு
மாறி இருந்தது நிலம்
புதிதாக ஓட்டல் கட்டியிருந்தார்கள்
`இங்கே சாப்பாடு கிடைக்கும்'
என்று எழுதி இருந்தது.
- கோ.மோகன்ராம்
அந்நியம்
நீளப் பொட்டு
நன்றாக இருக்குமென்றார்கள்
இட்டுக்கொண்டேன்
அடர் நிறங்களுக்கு மாறச் சொன்னார்கள்
கரும்பச்சை தேர்ந்தெடுத்தேன்
தலைவெளுப்பை வெறுத்தார்கள்
சாயமிட்டேன்
கால்தொடும் கூந்தல் பழைமை என்றார்கள்
கத்தரித்தேன்
அடி முடி வரை மாற்றிய என்னை
அந்நியமாய்ப் பார்க்கும்
மனசாட்சியை மாற்றும் கடையினைத் தேடியலைகிறேன்
வெகு நாள்களாய்.
- கி.சரஸ்வதி
சருகெனும் நிரந்தரம்
சருகுகளின் இசையை
இலைகளால் ஒருபோதும்
தர முடிவதில்லை
இலையுதிர் காலமென்பது
இரக்கம் தாங்கிய சொல்லாகவேயிருக்கிறது
சருகு துளிர் காலம் என்றிருந்தால்
எவ்வளவு அழகியல் தெறித்திருக்கும்
சருகுகளின் சுதந்திரம்கூட
இலைகளுக்கு வாய்ப்பதில்லை
சருகுகளின் அசைவுகள் துள்ளலானது
இலைகளின் அசைவுகளோ
சோகம் தழுவியதாகவே படுகிறது
இலைகள் பிணைப்பில் தனித்தலைபவை
சருகுகளோ கட்டிப்புரண்டு களிப்பவை
இலைகளாய்த் திகழ்வது
தற்காலிகப் பசுமையென்றால்
சருகுகளாய் வாழ்வது
நிரந்தர நிறமியாலானது.
- சாமி கிரிஷ்

மகன் மிதிவண்டி பழகுகிறான்
இருக்கையின் கீழ் இருக்கும்
உலோகச் சுருளுக்குள் வலக்கை
விரல்களை இறுக்குகிறேன்
சீட்டில் அமர்ந்துவிட்டான்
சுருள் சுமைக்கேற்ப இறங்கி ஏறுகிறது
பிரசவத்தில் விலகிக் கொடுத்த
இடுப்பெலும்பு நினைவிற்கு வருகிறது
அழுத்தமாய்ப் பிடித்த கையை
விடுவித்துத் தள்ளி விடுகிறேன்
பேறுகால மூச்சாக...
இடை தாண்டி இறங்கும் குழந்தை
வெளி காண்பதைப்போல்
சக்கரங்கள் சுழல சுழல
சமுதாய வெளியில் உலவத் தொடங்குகிறான்
கருவறை வாசனையுடன்
மிதிவண்டியின் மணிச் சத்தம்
உங்களுக்கும் கேட்கலாம்
குவா குவாவென...
- அகராதி
மன ஊசல்
ரீசார்ஜ்
செய்ய முடியாத கடைசி நாளில்
தாமதப்படும் அவசரச்செய்தி
அளவுச்சாப்பாடு போதாத போது
கேட்க முடியாத கரண்டிச்சாதம்
சரியான சில்லறையோடு
சாதாரணப் பேருந்திற்காகக்
காத்திருத்தல்
பிடித்த டிசைனின் விலை
கையிருப்பைவிடக் கூடுதலாயிருத்தல்
பிள்ளைகளின் ஐஸ்கிரீம்
கோரிக்கையினை நிராகரித்து உருகுதல்
மனவூசல்களில்
ஏற்படும் இக்கணங்களின் நிறுத்தங்களை
அழகாய் இலக்கணப்படுத்துகிறது
வெற்றுக் காகிதத்தின் சட்டைப்பை உரசல்!
- ரகுநாத் வ