Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பாரம்

கனத்துக் கிடக்கிறது மனம்

பசியால் தவித்துக்கிடக்கிறது

எப்போதும்

அமைதி கோரும் அதற்கு

எப்போதும் துன்பங்களையே தருகிறேன்

அது

வசந்தம் தேடும்பொழுதெல்லாம்

வாரி இறைக்கிறேன் வருத்தங்களை

தூக்கம் மறந்து துக்கம் நிரம்பிய

இரவுகளில்

மனத்தின் கனம் எவ்வளவு என்று

சொல்லத் தெரியவில்லை

நிச்சயமாக அது

பிரபஞ்சத்தைக் காட்டிலும்

அதிக கனமாக இருக்கலாம்.

- சார்லி

***

சொப்பனத்தில் உதிரும் தாரகைகள்

மாயங்கள் செய்யும் இரவு வானில்

இறைந்துகிடக்கும் நட்சத்திரங்கள்

உன்னிலிருந்து உதிர்ந்திருக்கக்கூடும்

ஒவ்வொன்றாகப் பொறுக்கியெடுத்து

சேமித்துக்கொண்டிருக்கிறேன்

இன்னும் நிறைந்தபாடில்லை

கனவுக்கூடை.

- வலங்கைமான் நூர்தீன்

***

சொல்வனம்

தனித்திருத்தல்

மாணவர் விடுதி வாயிலில்

கலவையாய்க் கிடக்கும்

உயர்ரக செருப்புகளுக்கிடையே

தனித்து விடப்பட்டிருக்கிறது

ஒரு சோடி ரப்பர் செருப்பு

யாருடைய அப்பாவோ

பிள்ளையைப் பார்க்க வந்திருக்கிறார்!

- திருப்பூர் சாரதி

****

கோமாளி வனம்

வாய்க்குள் தலையிட்டும்

நுனிப்பல் உரசாமல்

அரிமா

தீப்பந்த வளையம்

தாண்டுகிறது வாலற்ற

வானரம்

பைங்கிளிகளின்

உச்சரிப்பில் திக்குகிறது

சுட்டுப் பிழை

வெவ்வேறு திசையில்

விழிக்கின்றன

லவ் பேர்ட்ஸ்

முன்னிருகால்

தூக்கிய வலியில்

பிளிறும் குண்டன்

நாலாபுறமும் விரித்துத் தொங்க விடப்பட்டிருக்கும்

திரைச்சீலைகளில் வரையப்பட்டிருக்கின்றன

வேரற்ற செடிகளும் கொடிகளும்

இறுதியாக

ஒரு வனம்

கோமாளி வேடமிட்டு

புலனாகாமல்

அலைந்துகொண்டிருக்கிறது!

- ரகுநாத். வ

அவதி பறக்கும் சாலை

பச்சை விழுவதற்குள்

பூங்கொத்துகளை

கண்களாலே விற்றுச்சென்றாள்

முகக்கவசம் அணிந்த சிறுமி...

- க. கார்த்திகேயன்