சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கொண்டை முடியும் கூந்தல் நுனி மாதிரி குளிர்ந்து அமர்ந்திருக்கின்றன

பரோட்டா மாஸ்டர் என்னும் கலைஞன்

உருண்டைகளைத் தட்டையாக்கும்

மாஸ்டர்களை

எங்கிருந்தோ கவனிக்கிறார் கலீலியோ

சூரியக் குடும்பத்தின்

சுழற்சியைப்போல்

தட்டைகளை நீள்வட்டமாகச்

சுழல விடுகிறான்

எங்கேனும் விரியும் ஒரு துளை

ஓசோனை நினைவுபடுத்துகிறது

கொண்டை முடியும்

கூந்தல் நுனி மாதிரி

குளிர்ந்து அமர்ந்திருக்கின்றன

பரோட்டாக் காளான்கள்

வெந்து சிவந்து மறுபக்கமாய்

துள்ளி விழுகின்றன

அடுக்கி வைத்த பரோட்டாக்களை

நான்கு பக்கமுமாய் இறுக்கி

நெகிழ்த்தி விடுகிறான்

அவையோ

அணைக்க அணைக்க விரிந்து

வெட்கத்தை உதிர்க்கின்றன.

- யாழிசை மணிவண்ணன்

சொல்வனம்

****

இருப்பு

வெற்றுப் படகில்

என்ன இருக்கிறது

வெறுமை தனிமை

அமைதி சூனியம்

கூடவே

கரை ஒதுங்கத் தவிக்கும்

குட்டிக் கடலும்.

- கவிஜி

****

மறைபொருள்

குடிநீர்ப் பாத்திரம் வைக்கப்படாத

மினரல் வாட்டர் பாட்டில்கள் மின்னுகின்ற

தேநீர் கேட்கையில்

கூடவே பப்ஸையும் நீட்டுகின்ற

ஐந்து ரூபாய் சில்லறைக்கு

பிஸ்கட் பொட்டலமொன்றைத்

திணித்து அனுப்புகின்ற

தேநீர்க் கடையில்

எச்சரிக்கையாய்

எழுதப்பட்டிருக்கிறது

`அரசியல் பேசாதீர்.'

- ந.சிவநேசன்

****

சமமின்மை

மணியடித்ததும்

அவசர அவசரமாய்

வகுப்பிற்கு ஓடிவந்தவன்

தாமதமாகத்தான் பார்த்தான்

ஆயா ஒரு ரூபாய் தருவதற்கு

தவறுதலாய் ஐந்து ரூபாயைத்

தந்திருப்பதை

கணித ஆசிரியர்

பாடம் நடத்திவிட்டு

இடப்பக்கமும் வலப்பக்கமும்

சமமாக இருப்பதாய்ச் சொன்னார்

தனது கால்சட்டையில்

உறுத்திக்கொண்டிருக்கும்

ஐந்து ரூபாய் நாணயத்தைத்

தடவிக்கொண்டிருப்பவனுக்கு

எல்லாம் எப்போதும்

சமமாய் இருப்பதில்லை

என்று தோன்றியது.

- கே.ஸ்டாலின்