சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

‘ஏதாவது படியேன்டா...’ என்று ஒருமுறைகூடச் சொல்ல இயலாத எனக்குத்தான் புழுக்கமாக இருக்கிறது அறைக்குள்.

ஏன் ஹோட்டல் அறைகள் பிடித்திருக்கின்றன?

வீட்டைவிடச் சிறிய அறை
நடமாடக்கூட இடம் இல்லை
ஆனாலும்
மனைவிக்கும் மகனுக்கும்
அவ்வளவு பிடித்திருக்கிறது
ஹோட்டல் அறைகளை
நுழைந்ததுமே இருவருக்கும்
புதிய உலகம் பிறந்துவிடுகிறது
பின்னலை அவிழ்த்துவிட்டு
ஓய்வெடுப்பாள் மனைவி
மகனோ
படுக்கையில் குதிப்பான்
டி.வி-யை அலறவிடுவான்
ரிசப்ஷனை அழைத்து
வேண்டியதை ஆர்டர் செய்வான்
வெளியே சுற்றித் திரியும் நேரங்களைவிட
அறையில் அடங்கிக் கிடக்கும் நேரங்களை
ரசிக்கிறார்கள் இருவரும்
அப்படி என்னதான் இருக்கிறதோ ஹோட்டல் அறைகளில்
‘ஒரு டீ போடுறியா...’
‘ஏதாவது படியேன்டா...’
என்று ஒருமுறைகூடச் சொல்ல இயலாத
எனக்குத்தான் புழுக்கமாக இருக்கிறது
அறைக்குள்.

- அன்பு சிவம்

சொல்வனம்

*******

பகல் கனவு

வீட்டிற்குள் செழித்திருக்கிறது
பச்சையம் நிறைந்திருக்கும்
இலைகள்

தரையில் முழு விட்டம்
காட்டுகின்றன உயர் ரக
பளிங்குக் கற்கள்

கண்ணாடித் தட்டில் மிஞ்சியிருக்கிறது
முக்கால்வாசி பீட்சா

படியேறும் சுவரில்
பாதி முகத்தில் சிரிக்கிறார்
வெர்மீல் புத்தர்

பழைய சோற்றினை
விரும்பிச் சாப்பிடுகையில்
கீறலிட்ட தொலைக்காட்சியில்
படர்கிறது அபேட்சை

வளர அடம்பிடிக்கும்
மணி பிளான்ட் செடியில்
பகல் கனவினைக்
கை கழுவி விடுகிறாள்
மகாலெட்சுமி!

- ரகுநாத்.வ

*****

ஒளி

குளிரிரவில்
பீடி இழுத்துக்கொண்டிருப்பவன்
தன்னையறியாமலே
மின்மினிப் பூச்சியாகிப்போகிறான்
தூரத்துச் சிறுவனின் பார்வைக்கு.

- கௌதம் கனவுகள்

****

உரையாடல்

கிறங்கி நடக்கிறான்
தெருவோரத்தில் தங்கியிருக்கும்
வீடற்ற இளைஞன்
காதருகில் கைப்பேசியைப்போல
வலதுகையை
வைத்துப் பேசிப் போகிறான்
யாரிடமோ நலம் விசாரிக்கிறான்
சாப்பிடச் சொல்வதற்கும்
சாப்பிட்டாயா என்று கேட்பதற்கும்
யாருமற்றவன்
அரூபமான கைப்பேசியில்
ஞாபகத் தகப்பனிடம்
பசியில் கிறங்கியபடி
கேட்கிறான்
‘சாப்பிட்டியா அப்பா...’

- ஜெயாபுதீன்

*****

சுற்றம் தழால்

வெகு நாள் கழித்து சந்திக்கையில்...
அவ்வளவு நாள்
காணாமல் போனதற்கு
காரணங்கள் கேட்காமல்

அவ்வளவு நாள்
தேடாமல் போனதற்கு
காரணங்கள் சொல்லாமல்

அலைபேசியையும்
அழைப்பெண்ணையும்
மாற்றிய கதைகள் பேசாமல்

அந்த நேரத்துச் சந்திப்பை
உயிர்ப்பாக்கி
நலம் விசாரிக்கும் உறவுகள்
ஒருமுறையேனும்
வந்து போகிறார்கள்
அந்நாளின் நினைவுகளில்.

- அலர்மேல்மங்கை