சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

விசும்பல்

முகவரியின் கதை

முகவரியற்றவர்களால்

நிரம்பியிருக்கிறது நகரம்

பழைய முகவரியைத் தொலைத்துவிட்டு

புதுமுகவரியைத் தேடியபடி

திரிந்துகொண்டிருக்கிறது ஒரு கூட்டம்

இத்தனை நாள் வசித்தது

உண்மையென உறுதிப்படுத்த

இன்னொரு கூட்டம்

அலைந்துகொண்டிருக்கிறது

எட்டாத விலையில்

வாடகைக்காகவும், விற்பனைக்காகவும்

நிறைய முகவரிகளும்

முகவரிக்கான சான்றுகளும்

காத்துக்கிடக்கின்றன

நெருக்கடியான சாலையில்

கட்டில், மெத்தை, பீரோக்களோடு

முகவரி மாற்றும் வேன் ஒன்று

கடந்துசெல்கிறது

அதிலிருந்த தொட்டிச்செடியொன்றில்

அன்று மலர்ந்த ரோஜா

மலங்கமலங்க விழிக்கிறது

வழக்கமான தேனீக்களின்றி...

நகரின் முக்கிய சந்திப்பொன்றில்

தங்கள் முகவரியை உறுதிசெய்திட

பெருந்திரள் பேரணி நடந்துசெல்கிறது

பள்ளிக்குழந்தைகள் முதல்

கார்ப்பரேட் பணியாளர்கள்வரை

வாக்கப்பட்ட பெருமையோடு

முகவரிகளைக்

கழுத்தில் கட்டியபடி திரிகிறார்கள்

சிலர் கூச்சப்பட்டு

இடுப்பிலும் கட்டியிருக்கிறார்கள்

ஆதிகாலம் முதல்

புழங்கிய முகவரிகள் அழிக்கப்பட்டு

வலுக்கட்டாயமாக

நகருக்கப்பால் நெடுந்தொலைவிலிருக்கும்

புதிய முகவரிக்குத் துரத்தியடிக்கப்பட்டவர்கள்

புகாரளித்துக்கொண்டிருக்கிறார்கள்

அந்த அலுவலகத்துக்கு

புதிதாய் வந்த முகவரியற்ற அதிகாரியிடம்.

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

சொல்வனம்
சொல்வனம்

தண்ணீரில் தத்தளிக்கும் பாலைவனம்

இன்னுமொருமுறை

சொல்லிக் கொடுத்தால்

நூறாவதை எட்டிவிடும்

பிறகு இன்னும் இப்படிப் பிழையென

உலகப்படத்தில் × சிவப்புமைக் குறியிட்டார் ஆசிரியர்

இனியாவது சரிசெய்து வாவென்று விரட்டுகிறார்

பத்து இடங்களைச் சரியாகக் குறித்தவள்

இம்முறையும் தார்ப்பாலைவனத்தை

பசிபிக் கடலில் மூழ்கடித்தாள்

கண்ணில் நீர்மல்க

சிறுமி அதிஸ்யா

தார்ப்பாலைவனத்துக்குப் பெருங்கொண்டாட்டம்

தன்னிடம் பசிபிக்கடல் இருப்பதில்.

- க.அம்சப்ரியா

விசும்பல்

கூண்டிலிருந்து எடுத்து

புறாவை வருடுவதுபோல்

மனதை வருடிக்கொடுக்கிறேன்

யாருக்குமே நான் தேவையில்லை

என்றாலும்

குறைந்த பட்சம் எனக்கு

நான் தேவையாக இருக்கிறேன்

கட்டிலின் அடியில்

ஒளிந்திருக்கும் பூனையின்

மஞ்சள் கண்களாய்

எங்கோ ஒளிர்ந்துகொண்டிருக்கிறது அன்பு.

- என். சுபாஷினி

அவள்

என்றோ நான்

அசைத்து விட்டுப்போன

அந்த ஊஞ்சலில்

இப்போது

ஆடிக்கொண்டிருக்கிறாள்

ஒரு பெண்

என்றோ நான்

வரைந்து வைத்த ஒரு

ஓவியப் பெண்ணின் சாயலும்

அவளுக்கு என்பதே வியப்பெனக்கு!

- கிருத்திகா தாஸ்