பிரீமியம் ஸ்டோரி

யானை வேட்டை

மூச்சடக்கி

கட்டை விரலுக்கும்

ஆட்காட்டி விரலுக்கும்

நூலளவு இடைவெளியோடு

பூனை நடையில் நகர்ந்து,

சுவர்ப் பக்கவாட்டில்

இருந்த தட்டான் பிடித்த

அன்றைய சிறுகணம்

ஒரு யானைவேட்டையை

ஒத்ததாயிருந்தது என்றால்

ஏற்பீர்கள் அல்லவா...

- மதுசூதன்.S

வரமே சாபம் ஆனால்...

தேர்ந்தெடுத்த மரத்தை வெட்டி

ஒன்றன்மீீது ஒன்றாக

செவ்வனே அடுக்கி

கற்பூர ஜூவாலையில்

தகிக்கும் பூப்பரப்பி

வேண்டுதலுக்காகக்

குண்டம் இறங்கியவர்கள்தான்

குறி கேட்கிறார்கள்

மழை வர வேண்டியும்...

- பிறைநிலா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நினைவுப்பசி

செழித்த வயலும்

எலியும் தவளையும்

நினைவில் சுமந்துகொண்டு புறநகர் சாலையில்

நெளியும் பாம்பின்

துயரத்தில்

அலகு பாய்ச்சுகிறது

காகம்!

- அஜித்

சொல்வனம்

விளையாட்டு

யானையைப் பிடிப்பதற்கு

எலிப்பொந்துகளைத்

தோண்டுகிறார்கள்...

சிறுத்தைகளுக்குத் தேர்ந்து

எடுத்திருப்பதோ மீன் வலைகள்

நரிகளுக்குக் கொசுவலைகள்

போதுமென்கிறார்கள்...

புறாக்களும் மைனாக்களும்

சிக்கிக்கொள்கின்றன...

புறாக்களை யானைகளாகவும்

மைனாக்களை நரிகளாகவும்

மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

காலங்காலமாக

ஜனநாயகப்படி வினையாற்றுகிறோம்

என்கிற பிரகடனத்துடன்.

- ஹரணி

கோடைப் புராணம்

பிரதியை எழுதத் தொடங்கும்போதெல்லாம்

சொற்களின் நடுவே வெயில் வந்து உட்கார்ந்துகொள்கிறது

அதன் அடிப்படையில்

புதிய வானத்தை வரையத் தொடங்குகிறேன்

ஆங்காங்கே மேகங்களைப் பரப்பி

ஒரு கணப்பொழுதினுள்

மழை பெய்யத் தொடங்குகிறது

எனவே இன்றிலிருந்து

வழியும் நீரைக் குடித்த பூமி

வெகுநாள்களின் பின்

புற்களும் மரங்களும் உயர்வதைப் பார்த்து மழை வேண்டிய தனது தியானத்தை மெல்ல அழிக்கத் தொடங்குகிறது

தியானத்தின் அடையாளம்

அழியும் இறுதிப்பகுதியில்

பிரதி இப்படி முடிகிறது...

வெயில் தனக்கான இடங்களை

மீண்டும் கைப்பற்ற பகலை அழைக்கின்றது.

- ஏ.நஸ்புள்ளாஹ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு