கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

வெற்றிடத்தை நிரப்பாதவை

நொடிகள் விழுங்கும் கொக்குகள்

அரூப மீன்களைக்

கொத்த முயன்று

நொடிகளை

விழுங்குகின்றன

மேசையில்

இரண்டு கொக்குகள்

- பா.ரமேஷ்

சிவப்புப் பறவை

வரைந்த சுவரிலிருந்து

பறக்கத் தொடங்குகிறது

ஒரு சிவப்புப் பறவை

அதனை என் கண்கள்

நிலைக்குத்திப் பார்க்கின்றன

வானம் பறவையை அழைத்து

தன் கதவைத் திறந்து

அதன் வெளியில்

பறக்கும்படி கட்டளையிடுகிறது

பறவை எனது பெயர் சொல்லி அழைத்து

அதன் முதுகில் அமர்த்துகிறது

காற்றின் கிளர்ச்சியில்

ஆதாமின் புல்லாங்குழலை

இசைக்கத் தொடங்குகிறேன்.

- ஏ.நஸ்புள்ளாஹ்

சொல்வனம்

இரவு

இரவின் தனிமையில்

புவியை

நீந்திக் கடக்கும்

வெண்கொக்கு நிலா

அதன் பிம்பம்

உடைத்து வீசப்பட்டதில்

வானெங்கும் உதிர்ந்த

நட்சத்திரங்கள்

சில்வண்டின் ஓசை

மொட்டுவிடும்

நிசப்தவெளி

ஆழ்நதியில் தாளமிட்டுச்

செல்லும் நீர்க்குமிழியின்

வயிற்றுக்குள் நிச்சலனமாய்

துயில்கின்றன மீன்குஞ்சுகள்.

- ஹேமலதா

வெற்றிடத்தை நிரப்பாதவை

இந்த வகுப்பறைக்குள்

திரும்பத் திரும்ப

எதையோ தேடியலைகிறது அணிலொன்று

யாருமற்ற வெற்றிடத்தை

தன் முதுகில் சுமந்து

மரத்தடி நோக்கி நகர்கிறது

திரும்பத் திரும்பத்

தன் கிளைகளை

அசைக்குமாறு

காற்றிடம் கெஞ்சி

பின் ஏமாறுகிறது

மதியங்கள் கடந்தும்

இளைப்பாற யாருமற்ற

வெற்றிடத்தை

திரும்ப காற்றிடமே ஒப்படைக்கிறது

மைதான மரம்

கோபத்தில் வெடிக்கும்

சொற்களற்று

வெற்றியில் அணைத்துக்கொள்ளும் அன்பற்று

வெறுமையைச் சுமந்து

அல்லாடுகிறது விளையாட்டு மைதானம்

மதியக் காக்கைகள்

யாரிடம் விசாரிப்பதென அறியாமல்

தனக்குத்தானே கரைந்துகொள்கின்றன

தனிமைப்பட்டுப்போன

நீள் விடுமுறை நாளை

தாங்கள் எப்படிக் கடந்தோமெனப்

பகிர்ந்துகொள்ள

ஆயிரம் கதைகளோடு

காத்திருக்கின்றன வகுப்பறைகள்...

- க.அம்சப்ரியா