Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

நிழல்

மாலைநேரச் சந்திப்பில்

ஐயனாரின் நீண்டு மெலிந்த

நிழலொன்று என் மடியில்

என்னவென்று

புரியமறுக்கும் விதமாக

எதையோ

தேடியலைந்தபடி

ஊர்ந்தோடுகின்றன எறும்புகள்

தொங்கிக்கொண்டிருக்கும்

எங்கள் கால்களின் பிரமாண்டங்களை

அவை பொருட்படுத்தவில்லை

பிரசாத உருண்டையிலிருந்து

உதிர்ந்த துகள்கள் குறித்து அவை

பிற எறும்புகளுக்கும்

சொல்லியிருக்கக் கூடும்

`ஐயனார் சிலைக்குப் பின்னால

சீக்கிரம் வந்து சேரு...'

சந்திப்பின் உரையாடலைத் தொடர்ந்து

பிரியங்கள் வடிவத்தினின்றும் உதிர்கின்றன.

-தக்ஷன்

***

ஆத்தா

எதற்கென்றும் இல்லாமல்

புன்னகைத்தபடியே இருக்கிறாள் ஆத்தா

முகமே அப்படியாகிவிட்டது

பிடித்த நிறச் சிற்றாடை கட்டிச் சிரிக்க நினைத்தது

பிடித்தவனைக் கட்டிச் சிரிக்க நினைத்தது

மழலைகளோடு சிரிக்க நினைத்தது

எதுவும் நடந்ததா தெரியாது

கரகரவென்று சாம்பலையள்ளி

கரிப்பாத்திரம் தேய்க்கவே பிறந்ததுபோலக்

கடந்த ஆண்டுகளும்

தேய்ந்த கைகளும்கூட நினைவின்றி

சிரித்துக்கொண்டிருக்கிறாள்

அவ்வப்போது எதையோ சரிபார்ப்பதுபோலக்

கையை விரித்தபடி வீட்டில் சாவு விழுந்தாலும்

சிரித்தபடி இருக்கும் ஆத்தாவைத்

திட்டும் உறவுகளுக்கும் இல்லாமலில்லை

என்றாவது ஒருநாள் சிரித்துவிடும் ஆசை.

- உமா மோகன்

***

பார்வைக்கு அப்பால்

செல்போனும் இன்டெர்நெட்டும் இல்லாம

எப்படித்தான் படிச்சீங்க என்று மகள் கேட்கிறாள்

டிவியும் ப்ரிட்ஜும் இல்லாம

எப்படித்தான் சமாளிச்சீங்க எனத்

தந்தையைக் கேட்டது நினைவில் இருக்கிறது

ரேடியோவும் சினிமாவும் இல்லாம

எப்படித்தான் இருந்தீங்க எனத் தந்தை

தாத்தாவிடம் கேட்டதாய்ச் சொல்லியதுண்டு

செய்தித்தாளும் காபியும் இல்லாத

பொழுது எப்படி விடிஞ்சது என

அவர் தன் தந்தையைக் கேட்டிருக்கலாம்

நாம் இல்லாதிருந்த சூழலின்

இல்லாதனவற்றைக் குறித்தே

சுழலுகின்றன கேள்விகள்

சிறகில்லாத மனுசன் பாவம்

தினமும் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான் என வருந்திக்கொண்டே

பறந்துகொண்டிருக்கலாம்

இரை தேடும் ஏதேனும் ஒரு பறவை!

- ப்ரணா

சொல்வனம்

மலர்ச் சாலை

அந்தி நடைப் பொழுதில்

சட்டெனக் குறுக்கிடுகிறது

கொன்றைப்பூக்கள் மூடிய மஞ்சள்சாலை

காலை வைக்கத் தயங்கிய

சிறு காத்திருப்புக்குப் பிறகு

காற்றைச் சாக்கு வைத்து

வழிவிட்டுச் சிரிக்கின்றன

குறும்பு மலர்கள்.

- கி.சரஸ்வதி

***

வெயிலற்ற பகல்

இடப் பக்கம்

திரும்பி முடிவதற்குள்

வலப் பக்கமும் திரும்பிவிடுகிறது

பட்டை பட்டையாய் வெயிலற்ற பகல்

செய்வதறியாது வீதியில்

ஒரு மலைப்பாம்பைக்

கற்பனை செய்துகொண்டிருப்பதை

உடல் உதற உணர்ந்திருக்கலாம்

திடுமென செவிக்குள் நுழையும்

செருப்புச் சத்தத்துக்கு

முகம் இல்லை

உடல்கூட சொல்லுமளவு இல்லை

உண்மையில் தரையொட்டி

கழுத்திருக்கையில்

அவ்வளவுதான் கவனம்

தியானம் கலைந்ததற்கு

சற்று முந்தைய கணம்

பசியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது

பரிமாறச் செய்திகள் இல்லாதபோது

வாலாட்டிப் பயனில்லை

வேகமாய் எழுந்து நின்று

அரைநொடி அந்தப் பக்கம்

மறுநொடி இந்தப் பக்கம் பார்த்துவிட்டு

வெட்டி முறித்ததுபோல நடக்கையில்

நாயிலும் ராஜ நடை.

- கவிஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism