பெருவெடிப்பும் காதலும்
ஒரு கண்ணில்
ஹீலியமும்
மறு கண்ணில்
ஹைட்ரஜனும் உமிழும்
உன் கண்களில்
யுகம் யுகமாய் எரியும்
பரிதியின் சாயல்
இதோ என்னுள்
பெருவெடிப்பொன்று
சிதறுகிறது
நீங்கள் அதை ஒரு பிரபஞ்சம்
என்கிறீர்கள்
நான் அதை
காதல் என்கிறேன்.
- விஜய் ஆனந்த்
***
துரத்திய இயந்திரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வழக்கமாய்
கதிர் அரிவாள் சத்தங்களை
சந்தங்களாகக் கேட்டு
நெல் கொத்திப் பழகி
வரப்புமேல் வந்தமரும் பறவைகளை விரட்டியபடி
இரைச்சலோடு இயங்கிக்கொண்டிருக்கிறது
கதிர் அறுக்கும் இயந்திரம்
நிலமற்று பிழைத்து வந்த விவசாயக்கூலிகளை
வயல்விட்டு
துரத்தியதுபோலவே
- சாமி கிரிஷ்

அவர்களுக்குத் தெரியும்
நான் அழைக்கும்
நேரத்தை சரியாக
அறிந்துவைத்திருக்கின்றது
அந்தக் காகம்
நான் உறங்கும் தருணத்தைத்
துல்லியமாகக் கணிக்கிறது
என் சமையலறையை
உருட்டும் அந்தப் பூனை
நான் வீட்டு வாயிற்கதவைத்
திறக்கும் சத்தம்
இப்படித்தானிருக்குமென்று
அறிந்து அசையாமல் கிடக்கும்
என் வீட்டு நாய்
என் இருப்பை உணர்ந்தே
அழைக்கும் ம்மா...வென்று
என் வீட்டு லட்சுமி
ஐந்தறிவுதானேயென்று
எண்ணாதீர்கள்
நேற்று இரவும் சமையலறை
தாளிப்பு நெடியில்லாத
என் இருமலை
கவனிக்காமல் கடந்தவர்களுக்கு
அதில் ஒன்று அதிகம்தான்.
- சரண்யா சத்தியநாராயணன்
இன்னும் இரவின் மடியில்
அசதியோடு
தூங்கிக்கொண்டிருக்கிறது காலை
அதனை எழுப்பும் முனைப்பில்
விதவிதமான பாடல்களை
இடைவிடாது பாடுகின்றன பறவைகள்
தனக்கான பாடல்களைக் கேட்டுக்கொண்டே
சோம்பல் முறித்தெழும் காலை
புல்மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிகளில் முகம் கழுவி
ஓர் ஊதாப்பூவில் புத்துணர்ச்சி கொள்கிறது
இந்த நாளிற்கான முதல் தேநீரை
காற்றுக் கோப்பைகளில் நிரப்புகின்றன பறவைகள்
இப்போது மிடறுமிடறாய்த் தேநீர் பருக
ஆரம்பித்துவிட்டது காலை
நானும் ஒரு குவளையை
பறவைகள் முன் நீட்டுகிறேன்.
- மகேஷ் சிபி
நான் யாரா..?
மிக கவனமாக இருக்கிறேன்
அறுபட்ட காதோடு வான்காவின்
சோகம் எனைத் தாக்கக்கூடும்
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகளை
நான் தெரியாமல்கூட
பொருத்திக்கொள்வதில்லை
அனல் படிக்கும் அக்னிக்குஞ்சுக்கு
சுழன்றடிக்கும் தத்தகிட தெரியும்
நகர்ந்துவிடுகிறேன்
காப்காவின் வண்டோடு
எனக்கென்ன சண்டை
வண்டுக்கும் வாழ்வுண்டு ஒதுங்குகிறேன்
காம்யூவின் அந்நியத்தன்மைக்கு
என்னிடம் இடமில்லை
உள்வாங்கல் தெரியாதெனக்கு
ஸ்டெல்லாப்ரூஸின் தற்கொலைக்கு
நான் என்ன செய்ய முடியும்
வேடிக்கை மட்டும்தான் எனது பங்கு
மிகைல் நெய்மிக்கு
என்னைப் பற்றி எப்படித் தெரியும்
மிர்தாத் என்பது என் பெயரில்லையே
ஆனைமலைக் காடுகளில்
சுள்ளி பொறுக்குகிறேன்
மாலை வீடு திரும்புகையில்
கையளவு கவிதை கிடைக்கிறது
அவ்வளவுதான் நான்..!
- கவிஜி
இரவுக்குறி
மிளகின் நிறம் வாய்த்திருக்கிறது
இவ்விரவுக்கு
குறித்த நேரம் கடந்தும்
இன்னும் வராமை நினைவு வலி
மிளகின் காரமாய் ஆகிருதியில் நிரம்பும்
ஓவர்டைம் வேலையில் பிய்ந்து தொங்கும் இரவு.
- பூர்ணா