பிரீமியம் ஸ்டோரி

ஓயாத அலை

கடற்கரைக்குச் சென்றேன்

அமைதியாக இல்லை கடல்

பேசிக்கொண்டேயிருக்கிறது
அலை

மணல் துகளில் காலத்தை மீட்டுக்கொண்டு

நரைக்காமல் இசைக்கிறது அலை


ராட்சஸ அலை ஒன்று

மிரட்டிப்போகிறது அவ்வப்பொழுது


எத்தனையோ மனிதர்கள்

வந்தார்கள் போனார்கள்

பேசிக்கொண்டேயிருந்தது அலை


சற்று யோசித்துவிட்டு

என் அமைதியைக் கடலிடம் கொடுத்துவிட்டு

கடலின் ஓயாத அலையை

நான் எடுத்துக்கொண்டேன்

அலையொன்றைத் துரத்துகிறது

மனது.

- ப.தனஞ்ஜெயன்

சொல்வனம்

தீமூட்டத் தூண்டும் இரவுபோதை பொங்கும்

இந்த நடுநிசி

இரவொன்றில்

புங்கைமர சுள்ளிகளை

எரித்து உன்

கதகதப்பை நாடுகிறேன்என் தேடல்களின்

பரிகாசத்தை

இந்த ஓர் இரவில் பூர்த்திசெய்யமுடியாத

சுள்ளிகளை பாதி இரவில்

நீரூற்றி அணைத்து

உன் வருகையின் தாகம்

நீடித்து நகரவேறுவழியில்லாமல்

என்னையே தீமூட்டி

கதகதத்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது

இந்த இரவு!- ஷாலினி கணேசன்

அம்மாவின் பெயர்

யானைத் தட்டான்

எம்ஜிஆர் தட்டான்

கண்ணாடித் தட்டான்

ஊசித் தட்டான் என்று

தட்டான்களுக்குப் பெயரிருந்தது எங்களூரில்

ஆனால்

எங்கள் வீட்டில் பெயரோடிருந்த அம்மாவைத்தான்

கடைசி வரை பெயர் சொல்லி

அழைத்ததேயில்லை அப்பா.


- மணி அமரன்

காற்றின் செதில்கள்

புத்தகத்தைப் புரட்டிப் படித்துக்

கொண்டிருக்கிறது காற்று

தன் நிராசைகளின் பட்டியலை

ஏதேனும் ஒரு பக்கத்தில் கண்டடைவதற்கான

பெருமுயற்சியில் இருந்தது அதுஒரு கண்ணாடிக் குடுவைக்குள் நீந்தும் மீனின்

படத்தைப் பார்த்ததும்

தன்னை அந்த அடைபட்ட மீனாக உருவகித்துக்கொண்டது


புறம்தோறும் அலைந்த காற்று

இப்போது கண்ணாடிக் குடுவைக்குள்

ஒரு மீனாக


அந்தப் புத்தகத்தைக்

கையில் ஏந்திய குழந்தையொன்று

மீனின் படத்தைப் பார்த்ததும்

புறங்கையின் மேல் புறங்கை வைத்து

கட்டை விரல்களை அசைத்து

காற்றில் பறக்கச் செய்கிறது மீனைமீனாகத் தன்னை உருவகித்துக்கொண்ட

காற்று தன் உரு மீண்டு

குழந்தையின் கைகளிலிருந்து

உந்திப் பறக்கிறது.

- அ.க.இராஜாராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு