Published:Updated:

5 நாள்கள்... 5 மொழிகள்... 500 கலைஞர்கள்... சென்னையை மையம்கொண்ட நாடகவிழா!

நாடக விழா
நாடக விழா

சென்னையில் தென்னிந்திய மக்கள் நாடக விழா கடந்த வாரம் முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரள சமாஜமும் இணைந்து, தென்னிந்திய மக்கள் நாடக விழாவை கடந்த வாரம் நடத்தினர். மொத்தம் 32 நாடகங்கள். எளிய மக்கள் சந்திக்கும் துயர்கள், நாட்டுபுறக் கதைகள், ஆணவக் கொலை, அரசியல் சமத்துவமின்மை, தேர்ந்த சிறுகதைகள் எனப் பலவும் அரங்கு வடிவம் கொண்டன. அரங்கில் தம் உடலால், குரலால் அதை சாத்தியப்படுத்தினர் 5 மொழிகளைச் சேர்ந்த 500 கலைஞர்கள். மொத்தம் 5 நாள்களில் 32 நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொன்றும் வெவ்வேறு களம், வெவ்வேறு சமூகப்பிரச்னை குறித்தன. கலையை சமூகப் பொறுப்பாக்குதல் என்ற ஒற்றைப் புள்ளியில் அனைத்தும் இணைந்தன. மறைந்த நாடக ஆளுமைகள் கிரிஷ் கர்னாட், ஞாநி, முகில், நா.முத்துசாமி, நடிகை மனோரமா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் அவர்கள் பெயரில் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நாடக விழா
நாடக விழா

முதல் நாள் முதல் நாடகமாக கவிஞர் தமிழ் ஒளியின் 'வீராயி' நாடகம் நிகழ்த்தப்பட்டது. காலம் காலமாக நிகழும் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து கம்பீரமாக ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் 'வீராயி.' நாடகவியலாளர் பிரளயனின் சென்னை கலைக் குழுவால் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது. சாதியத்தை மட்டுமல்லாது பண்ணையடிமை முறையையும் சாடியது நாடகம். நாடகத்தில் விளிம்பு நிலை மக்கள் சாதியம் மற்றும் வர்க்கத்தால் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதை துயரத்துடன் அரங்கேற்றி கண்ணீரை தழும்ப வைத்துவிட்டாள் வீராயி. யாழ் கலை மையத்தின் 'நான் சாவித்திரியைப் படிக்கிறேன்', கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் 'அப்பாவும் பிள்ளையும்', திரைக்கலைஞர் நாசரின் ஓராள் நாடகம் எனத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பல நாடகங்கள் கவனம் பெற்றன. திருச்சூர் பஞ்சமி தியேட்டர்ஸின் மலையாள நாடகம் 'மாலி', சி.எஸ்.கோளேவின் 'காந்தியும் அம்பேத்கரும்' என்ற கன்னட நாடகம் எனப் பிற மொழி நாடகங்களும் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை அளித்தன.

மாற்று நாடக இயக்கத்தின் 'விசாரணை', களரி மக்கள் பண்பாட்டு இயக்கத்தின் 'இனி', மதுரைக் கூடல் அரங்கின் 'மந்தையன் செத்துப் போனான்', இன்குலாப்பின் 'அவ்வை', புகழ்பெற்ற செயின்ட் அந்த்வான் எக்சுபெரியின் 'குட்டி இளவரசன்', புன்னகை பூக்களின் 'எஜூகேசனும் XY யும்', கோவில்பட்டி மணல் மகுடியின் 'புழுதிமரப் பறவைகள்' ஆகிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அடுக்களையில் அடக்கி வைக்கப்படும் பெண்கள் மீதான அடிமைத்தனத்துக்கு எதிரான காத்திரக் குரல் எழுப்பியது 'அவ்வை.' நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் செறிவான வசனமும், நாடகத்தின் மையமும் 'அவ்வையை' தனிக்கவனம் பெறச் செய்தன. அரங்கு-எதிர்ப்புணர்வு-ஜனநாயகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மூன்றாம் நாளின் தொடக்க நிகழ்வாக அமைந்தது. கல்வி, அதிகார வர்க்கத்தினரின் கைகளில் சிக்கி காலம்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. கதைகளில் அறியப்படும் ஏகலைவன் முதல் இன்றைய மாணவர்கள் வரை அந்தந்த காலத்தின் சாட்சிகளாக நிற்கின்றனர்.

நாடக விழா
நாடக விழா

'உங்கள் மௌனம் இவர்கள் பிழைப்புக்கான சம்மதம்' என்று நமது மௌனத்தை உடைத்து, அடக்க நினைக்கும் சர்வாதிகார மனநிலையைத் தோலுரிக்கும் 'கோ' நாடகத்தை கன்னியாகுமரி விடியல் குழுவினர் அரங்கேற்றினர். கரிசல் காட்டு வாசனை அறை முழுவதும் நிரம்ப கி.ரா தாத்தாவின் நாட்டுப்புற கதைகளை நகைச்சுவை கலந்து சொல்ல ஆரம்பித்தனர். பாட்டும் நடிப்பும், சஸ்பென்ஸ் கதைகளுமாக அட்டகாசப்படுத்தினர் 'பெர்ச் 'குழுவினர். அன்றைய நாளில் நிகழ்த்தப்பட்ட இந்திரா பார்த்தசாரதியின் 'ஔரங்கசீப்' மிக முக்கியமான நாடகமாக அமைந்தது. ஒரே நாடு ஒரே மொழி, ஷாஜகானுக்கும் ஔரங்கசீப்புக்குமான அழகுணர்ச்சி சார்ந்த முரண்கள், ஆட்சியைப் பிடிக்க நடக்கும் சூழ்ச்சிகள் என சமகாலத்தின் அரசியலை சாடியது. குடுகுடுப்பைக்காரி குழுவினரின் 'பேட் ஹிந்து', சலம் எழுதிய 'மைதானம்' என்ற தெலுங்கு நாடகம் போன்றவையும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன.

நாடக விழா
நாடக விழா

பாரதிதாசனின் 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் தனி கவனத்தைப் பெற்றது. நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்து அரங்கேற்றப்படுவதன் மூலம் இன்றைய வளர்ந்த சமூகத்தின் நிலையும் கேள்விக்குள்ளாகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் 'நீர் மாலை', வடசென்னை விடியல் குழுவினரின் 'டிஜிட்டல் திண்ணைகள்' உள்ளிட்ட பலவும் வித்தியாசமான நெறியாள்கையில் பேசப்பட வேண்டிய விஷயங்களைப் பேசின.

வேடிக்கையும் சமூக விமர்சனமும் அடங்கிய கி.ரா தாத்தாவின் நாட்டுப்புறக் கதைகள், புகிரி ஆட்டம் குழுவினரால் 'நாற்காலி' நாடகமாக நிகழ்த்தப்பட்டது. பிரளயன் மற்றும் கலைராணி நெறியாளுகையில் 'நிலம்' மற்றும் 'எழுந்திரி' ஆகிய ஓராள் நாடகங்களும் நிகழ்த்தப்பட்டு வரவேற்பைப் பெற்றன. எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் கதை சொல்லல் நிகழ்வும் இரவு நடைபெற்றது. சுஜாதாவின் 'அனுமதி', செல்லம் கலாலயம் வழங்கும் 'காவேரி', பப்பர மிட்டாய்க் குழுவின் 'கனாக்காலம்', தாமிரபரணி கலைக்குழுவின் 'ஒரு பறவையின் குரலோசை' உள்ளிட்ட பல நாடகங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. சமகால அரசியலை, அதிகாரத்தின் கிடுக்குப்பிடியை எள்ளி நகையாடியது 'நாட்டிலொரு நாடகம் நடக்குது' நாடகம். ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதையின் நாடக வடிவம் தேனி செவக்காட்டு கலைக்குழுவின் 'பரிட்சைக்கு படிக்கணும்', திணைநிலவாசிகளின் 'துளிர் தின்னும் வேலிகள்', ஆஃப்டெர் ஆலின் 'ஜிப்புகள் ஜாக்கிரதை', கிருஷ்ணகிரி மக்கள் கலைக்குழுவின் 'பொதுச்சொத்து' ஆகியவை குறுநாடகங்களாக நிகழ்த்தப்பட்டன.

அறிவு
அறிவு

பிளேஸ் அகாடெமியின் 'விசில் போடு' எனும் 'மைம்' நிகழ்ச்சியும் நடந்தது. 'இப்போலாம் யாருங்க சாதி பாக்குறா...' என்ற சமாளிப்புக்கான பதிலாக எழுத்தாளர் இமையம் எழுதிய 'போலீஸ்' சிறுகதை, பிரசன்னா ராமசாமியின் நெறியாள்கையில் நாடக வடிவம் பெற்றது. சாதியவாதிகளின் நுட்பமான சாதிய மனநிலையை, சமூகத்தில் சமகாலத்தில் நிலவும் சாதி அரசியலை அப்பட்டமாகப் பதிவுசெய்தது 'போலீஸ்.' தொடர்ந்து ஜெயமோகன் கதையை மையப்படுத்திய 'கைதி' நாடகமும் அரங்கேற்றப்பட்டது. நாடகங்களின் இடையே நாட்டுப்புற பாடகர்கள் பாடல்களை பாடி அசத்தினர். விழாவில் நடிகர் குரு சோமசுந்தரத்தின் வில்லிசைப்பாட்டு தனிக்கவனம் பெற்றது. 'கேஸ்ட்லஸ் கலெக்டிவ்' அறிவு மற்றும் குழுவினர் பாடிய பாடல் எழுச்சியாக அமைந்தது.

அடுத்த கட்டுரைக்கு