Published:Updated:

பொய்யும் பொய்களும்! - சிறுகதை #MyVikatan

விகடன் வாசகர்

பொய்யைச் சொல்ல நேர்ந்தாலும் யாருக்கு எதைச் சொன்னோம் என்பதை என்னால் ஞாபகத்தில் வைத்திருக்க முடிவதேயில்லை.

Representational Image
Representational Image

சும்மா தமாஷுக்காக ஏதும் சின்னப் பொய்யாகச் சொன்னால் சரி, பொதுவாக நான் பொய்கள் சொல்லுவதில்லை. அதற்கான முதல் காரணம், நான் ஒரு கலியுக அரிச்சந்திரன் என்பதல்ல. ஒரு சின்னப் பொய்யைச் சொல்ல நேர்ந்தாலும் யாருக்கு எதைச் சொன்னோம் என்பதை என்னால் ஞாபகத்தில் வைத்திருக்க முடிவதேயில்லை. அதனால், பொய்சொல்லித்தான் எனக்கு ஏதும் காரியங்கள் ஆகவேண்டுமென்ற வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளவுமில்லை.

சிலவேளைகளில், முதற்சொன்ன பொய்யைக் காப்பதற்கு மேலும் பல பொய்களை அவிழ்க்கவேண்டிவரும், அதைத் தொடரும் துன்பங்கள் அதிகம்.

இரண்டாவது ஒரு பொய்யைச் சொன்னால், அடுத்த கணம் நானாகவே மாட்டிக்கொண்டுவிடுவேன், தப்பிக்க வேறுவழிகள் தோணாது. சில வேளைகளில், முதற்சொன்ன பொய்யைக் காப்பதற்கு மேலும் பல பொய்களை அவிழ்க்கவேண்டிவரும், அதைத் தொடரும் துன்பங்கள் அதிகம். அதைவிட முதற்பொய்யை ஒத்துக்கொண்டுவிட்டால், அதனால் நடந்த உற்பாதங்கள் தீர்ந்துவிடும்.

80-களில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கையாகிய ஆசிய நாடுகளிலிருந்து மக்கள் ஐரோப்பாவை நோக்கி மிக அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்துவந்து தஞ்சமடைந்துகொண்டிருந்தார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. எம்மைக் காணும் சுதேசிகள் சிலர், “ உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை ” என்று அனுதாபத்துடன் விசாரிப்பார்கள். எம்மைப் பொருளாதார அகதிகளெனக் கருதுவோர், இதே கேள்வியைக் கிண்டலாகவும் கேட்பார்கள். இலங்கையின் சுதந்திரத்திலிருந்து தேசத்தின் நிலமைகளையும் தமிழர்கள் போராட்டத்தையும் விவரிக்க எமது ஜெர்மன்மொழி அறிவும் இடந்தராது.

1980-ம் ஆண்டு, நானும் என்னுடன் வந்திருந்த அறை நண்பன் ராஜாவும் Uelzen எனும் இடத்துக்கு, அங்கு வாழ்ந்த என் சகோதரர் ஒருவரை பார்க்கப் போயிருந்தோம். Hamburg தொடரி நிலையத்தில் இறங்கி Uelzen-இன் திசையிலான பிராந்தியத் தொடரியைப் பிடிப்பதற்காகக் காத்திருந்தோம்.

Uelzen
Uelzen

நன்றாக உடுத்தியிருந்த ஒரு முதியவர், எமக்கு முகமன் செய்தபடி எதிரிலிருந்த இருக்கைகளில் வந்தமர்ந்தார். பின் எம்மை நோக்கி அடிக்கடி புன்னகைத்தபடி இருந்தார். எதையோ எம்மிடம் கேட்பதற்கு விரும்புகிறார் போலிருந்தன அவரது பாவனைகள். கடைசியில் அவர் கேட்டேவிட்டார். ``துடிப்பான இளைஞர்களே... எங்கிருந்து வருகின்றீர்கள்?” ஸ்ரீலங்காவென்று சொல்லிவிட்டால் ‘ஓஹோ அகதிகளா...’ என்று கேட்டுவிடுவாரோவென்ற அநாவசியப் பயம் எமக்கு எழவும், “மொஸ்கோவிலிருந்து வருகிறோம்…” என்று துணிந்து புழுகினோம். மாஸ்கோவில் கற்கும் பிறநாட்டு மாணவர்கள், விடுமுறைக் காலங்களின்போது ஐக்கிய ரஷ்யத்துக்குச் செல்வதுவும், அங்கே சிற்றூழியங்கள் செய்து பணம் சம்பாதிப்பதுவும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இரண்டாவது கேள்வியும் அவரிடம் ஜனித்தது. “ அப்படியா… இனிய தோழர்களே இப்போது எங்கே போகிறீர்கள்?” “ லண்டன் போவதற்கான தொடரிக்குக் காத்திருக்கிறோம்” என்றோம். “அப்படியா” என்றவர், எழுந்துபோய் தொடரிமேடையிலிருந்த Boutique-ல் இரண்டு காப்பி வாங்கிவந்து எம்மிடம் நீட்டினார்.

உள்ளூரக்கூசியது, எனினும் மரியாதைக்காக மறுக்காமல் வாங்கிக்கொண்டோம். மீண்டும் எதிரில் அமர்ந்துகொண்டு எம்மிடம் சரளமாகப் பிறிதொரு பாஷையில் உரையாட ஆரம்பித்தார். ஒரு அக்ஷரம் புரியாமல் நாம் விழிக்கவும், ‘ஏன் ஒன்றும் பேசுகிறீர்களில்லை’ என்று திரும்பவும் ஜெர்மனில் கேட்டார். அப்போதுதான், அவர் பேசியது ரஷ்யன் மொழியென்று எமக்குப் புரிந்தது.

Representational Image
Representational Image

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில்தான் 12 வருடங்கள் ரஷ்யாவில் கட்டுமானப் பொறியாளராகப் பணிபுரிந்ததாகச் சொன்னார். நாம் சுதாகரித்து உள்ளூர அசடுவழிந்துகொண்டு தப்பிப்பதற்காக அடுத்த பொய்களையும் இறக்கினோம். “ பெரியவர் எம்மை மன்னிக்க வேண்டும்… நாங்கள் மொஸ்கோவுக்கு வந்து இரண்டொரு மாதங்கள்தான், நாங்கள் இப்போதுதான் அடிப்படை ரஷ்யன் கற்றுக்கொண்டிருக்கிறோம் உங்கள் வேகமான ரஷ்யன் எமக்குப் புரியவில்லை” என்றோம். நாம் அகதிகள்தான் என்பதை மறுதலித்து எதைச்சாதித்தோம்? அந்நல்லமனிதர், நாம் சொன்னதை நம்பியதைப் போலத்தான் இருந்தது!

-பொன்னையா கருணாகரமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/