Published:Updated:

ஓவியர், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்: கல்லிலே கலைவண்ணம் கண்டவர் | இவர்கள்| பகுதி – 12

இவர்கள்: காந்திராஜன்
News
இவர்கள்: காந்திராஜன்

`பாறை ஓவியங்களின் மீது வரலாற்றியலாளர்களுக்கு கவனம் திரும்பியது மிக சமீபகாலங்களில்தான்’ என்றோர் இடத்தில் காந்திராஜன் குறிப்பிடுகிறார். அதற்கு முன்பு வரை கல்வெட்டுகளும், நாணயங்களும், நடுகல்களும், சிலைகளும் மட்டுமே தொல்லியல் சின்னங்களாக கருதப்பட்டுவந்தன.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

2009-ம் வருடம் ஈழத்தமிழர் தோழமைக் குரலின் சார்பில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்களென பெரும் எண்ணிக்கையில் ஒரு குழு தலைநகர் புதுடெல்லியில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதன் வழியாகத்தான் எனக்கு காந்திராஜன் அறிமுகமானார். பக்கத்து ஊர்க்காரர்கள் என்ற அளவில் உடனே நெருக்கமாகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் அவரைத் தேடிச் சென்று சந்திப்பதற்கான காரணம்,

வரலாற்றின் மீதும் பண்பாட்டின் மீதும் அவருக்கிருக்கும் அளப்பரிய ஞானம்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவருடனான ஒவ்வொரு உரையாடலிலிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். மதுரை மாவட்டத்திலுள்ள மலைகளின் வரலாறுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்தான் `கானகன்’ என்னும் நாவலை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தன.

தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வுகள் இந்திய அளவில் கவனிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. தொல்லியல்துறை ஆய்வுகளின் மிக முக்கியமான முன்னோடிகளில் ஒருவர் காந்திராஜன். இவர் பாறை ஓவியங்களைக் கண்டறிந்து, ஆய்வு செய்து அவற்றின் தன்மையிலிருந்து ஆதிமனிதனின் வாழ்வியல் சூழல் குறித்த பல அரிய தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறா. மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்திராஜன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் புத்தகங்கள் வடிவமைப்பிலும் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆய்வாளருமான திரு. ஐராவதம் மகாதேவன் ஐயாவின் பல ஆய்வுக்குழுக்களில் காந்திராஜன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கரூர் மாவட்டத்து புகளூர் கல்வெட்டுகள் ஆய்வுக்குழுவிலும் இடம்பெற்று முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால ஓவியங்களை அடையாளம் கண்டுள்ள காந்திராஜன், 12 புதிய குகை ஓவியங்களைக் கண்டுபிடித்திருக்கிறார். அவரது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள கவணம்பட்டியைச் சுற்றிலும் மலைகள்தான். திருவிழாக் காலங்களில் ஊர் மக்களோடு மலையேறிச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாகக்கொண்டிருந்தவருக்கு ஒரு வயதுக்குப் பிறகு யாரும் செல்லாத பாதைகளில் பயணிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. ஒருமுறை பளியர் இன மக்களின் பகுதிக்குச் செல்லும்போது அந்த மக்கள் தங்களின் மலையின் ஒரு பகுதியைச் `சித்திரக் கல் பொடவு’ என்று குறிப்பிடுவதைக் கேட்டு வியக்கிறார். அந்தப் பெயர் எப்படி வந்திருக்கக் கூடுமென்கிற ஆர்வத்தில் அவர்களோடு மலையேறிச் சென்றிருக்கிறார். பளியர் இனமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே மலையில் மிகப்பெரியதொரு குகை இருந்திருக்கிறது. ஒரே சமயத்தில் நூறு பேர் வரை அமரக்கூடிய அளவுக்கு பிரமாண்டமான அந்தக் குகையின் உள்ளே ஏராளமான ஓவியங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறார்.

மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அந்த ஓவியங்களைக் கண்டதுதான் அவரது வாழ்வின் முக்கியமான திருப்புமுனை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள சுவரோவியங்கள் குறித்து ஆய்வு செய்தவர், அதன் பிறகு பாறை ஓவியங்களைத் தேடி பயணிக்கத் தொடங்கிவிட்டார்.

தொல்லியல் ஆய்வு முயற்சிகள் யாவும் காலப்போக்கில் தொலைந்துபோன அல்லது மனித இனம் மறந்துபோன வரலாற்று உண்மைகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் மீட்டுத் தருவனவாகவும், கலாசாரங்களின் பரிணாம வளர்ச்சியை ஆவணப்படுத்துவனவாகவும், மனித இனத்தின் குணாதிசயங்களை ஆய்வு செய்யும் கருவிகளாகவும் இருக்கின்றன. கால ஓட்டத்தில் மனிதர்களாகிய நாம் எதையெல்லாம் தொலைத்தோம் அல்லது மீட்டுக்கொண்டோம் என்பதையும் தொல்லியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளே உணர்த்துகின்றன.

இவர்கள்
இவர்கள்

`பாறை ஓவியங்களின் மீது வரலாற்றியலாளர்களுக்கு கவனம் திரும்பியது மிகச் சமீபகாலங்களில்தான்’ என்றோர் இடத்தில் காந்திராஜன் குறிப்பிடுகிறார். அதற்கு முன்பு வரை கல்வெட்டுகளும், நாணயங்களும், நடுகல்களும், சிலைகளும் மட்டுமே தொல்லியல் சின்னங்களாக கருதப்பட்டுவந்தன. உலகின் முதல் பாறை ஓவியங்கள் 1851-ம் ஆண்டு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் எனும் சிற்றூரில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே ஆய்வாளர்களின் பார்வை பாறை ஓவியங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.

தமிழகத்தில் 1978-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லப்பாடி எனும் ஊரில் முதன்முறையாக பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இங்கு குதிரையின் மீது அமர்ந்துள்ள இருவர் நீண்ட மூங்கில்களால் ஆநிரைகளை ஓட்டுதல், ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே வருவது போன்று வெண்சாந்தினால் தீட்டப்பட்ட ஓவியம் அது. மாடுகளைப் பட்டிக்கு ஓட்ட இப்படிப்பட்ட நீண்ட கழிகளை அக்கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம். குதிரை ஓவியத்தில் குதிரைமீது அமர்ந்திருப்பவர் ஒரு கையால் குதிரையைப் பிடித்திருக்கிறார். அவர் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடும் என்பது வரை துல்லியமாக கணிக்கக்கூடிய விதத்தில் ஓவியம் கச்சிதமாக வரையப்பட்டுள்ளது. ஓவியத்தில் தொப்பை காட்டப்பட்டுள்ளது. ஒரு கையில் நீண்ட கோலை பிடித்திருக்கிறார். தலையில் உருமால் கட்டியிருக்கிறார். குதிரையின் இரு காதுகள் முன்பகுதி நோக்கி இருப்பதும், குதிரையின் வாய் திறந்திருப்பதும் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது.

குதிரையின் ஓவியத்தை தமிழகத்தில் சிறப்பானதாக இங்கேதான் காண முடியும்.

இதே போன்று அச்சு அசலாக ஓவியம் அரேபிய பாலைவனத்தின் மண்திட்டுகளில் வரையப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இங்கு உருவங்களைக் கோட்டோவியங்களாக வரைந்த பின்னர் உட்புறம் வெள்ளை வண்ணத்தால் நிரப்பியுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இத்தகு பாறை ஓவியங்களின் முக்கியத்துவத்தை தனது நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் திரு.காந்திராஜன் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார்.

பாறை ஓவியங்களுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்ற கலை வடிவங்களும்ச் கைவினைச் சின்னங்களும் மனிதர்களின் கூட்டு முயற்சியால் உருவாகின்றன. ஆனால் ஓவியங்கள் மட்டுமே தனிமனிதச் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உதிப்பனவாக இருக்கின்றன. அவ்வகையில் அவற்றின் தனித்தன்மையையும், ஒரு மனிதனின் சிந்தனை மற்றொரு மனிதனின் சிந்தனையிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்ததென்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மிகத் தொன்மையான காலங்களில் வேட்டைச் சமூகத்தைச் சேர்ந்த மனிதர்கள், தங்களை அச்சுறுத்தும் காட்டு மிருகங்களைக் குறித்த குறியீடுகளை மற்றவர்களை எச்சரிக்கும்விதமாக பாறைகளில் வரைந்து வைத்தனர். பின்னர் காலப்போக்கில் இன்னுமே விரிவாக மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையேயான உறவு, இயற்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள் என வகைப்படுத்தி வரைந்தனர்.

இவர்கள்
இவர்கள்

பாறை ஓவியங்கள் மற்ற ஓவியங்களைப்போலவே மூன்று கோணங்களில் இயற்றப்பட்டன (Three perspectives to draw). அவை நேர்க்கோட்டு கோணம், பக்கவாட்டு கோணம், பறவைக் கோணம் ஆகியவை. இதில் வியப்பான விஷயமாக காந்திராஜன் குறிப்பிடுவது எதுவென்றால், ஆதிமனிதனும் இதே கோணங்களின் அடிப்படையிலேயே ஓவியங்கள் வரைந்திருக்கிறான் என்பதுதான்.

சமகால ஓவியனைப்போலவே ஆதி மனிதனும் சிந்தித்திருக்கிறான்.

பாறை ஓவியங்களில் விலங்குகள் பெரும்பாலும் பக்கவாட்டு கோணத்திலும், மனித உருவங்கள் நேர்க்கோட்டுத் தோற்றத்திலும், மீன் மற்றும் ஊர்வனவை பறவைக் கோணத்திலும் வரையப்பட்டிருந்தன. இதுவே பாறை ஓவியங்களின் பொதுவான கட்டமைப்பு அல்லது உருவாக்க முறையாக இருந்துவந்திருக்கிறது. மனிதன், தனது பார்வையில் பதிந்த கோணத்தையே ஒவியங்களிலும் பிரதிபலித்தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் இவற்றின் மூலம் அதிகபட்சம் மூவாயிரம் வருட வரலாற்றை மட்டுமே நம்மால் அறிய முடியும், ஆனால் குகை ஓவியங்கள், பல்லாயிரம் வருட பழைமையான வரலாற்றை அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. உலகின் மிகப் பழைமையான குகை ஓவியங்கள் நாற்பதாயிரம் ஆண்டுகள் பழைமையானவை.

தமிழ்நாட்டிலிருக்கும் சில பாறை ஓவியங்களுக்கே இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான வரலாறு உண்டெனச் சொல்லப்படுகிறது.

ஆதி மனிதனின் சொத்துகளாக இருந்தவை ஆடு, மாடுகள்தான். இதற்காகக் கொள்ளைகளும் யுத்தங்களும் நடந்திருக்கின்றன. இந்தக் கொள்ளைகளையும் யுத்தங்களையுமே அவர்களின் பெரும்பாலான பாறை ஓவியங்கள் அடையாளப்படுத்துவதாக இருக்கின்றன.

இவர்கள்
இவர்கள்

ஒரு சமூகத்தின் கலாசார மாற்றங்களையும், பண்பாட்டு எழுச்சியையும் காந்திராஜன் போன்ற ஆய்வாளர்களின் பங்களிப்பின் வழியாகத்தான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடிகளைத் தேடிச் சென்று அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு பதிவுசெய்வதையும் நீண்டகாலமாகச் செய்துவருகிறார். எந்த அமைப்பின் உதவியையும் எதிர்பாராமல், நண்பர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணிப்பதுதான் இவரது தனிச்சிறப்பு. பழங்குடி மக்களின் பாறை ஓவியங்களை ஓர் ஆவணப்படமாகவும் தொகுத்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னால் மதுரை புத்தகத் திருவிழாவில் `நான்மாடக் கூடல்’ என்னும் தலைப்பில் தமிழர்களின் வரலாறு, பண்பாட்டை விளக்கும்படியான புகைப்படக் கண்காட்சியை நடத்திய பெருமை இவருக்கு உண்டு. இவர் கண்டுபிடித்த கரிக்கியூர் பாறை ஓவியங்கள் ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சமீபத்தில் திருவண்ணமாலை மாவட்டம், வேட்டவலம் அருகிலுள்ள பன்னியூர் கிராமத்தில் கிழக்குப் பகுதி குன்றில் புதிய பாறை ஓவியம் ஒன்றை இவரும், இவரது குழுவினருமாகச் சேர்ந்து கண்டுபிடித்திருந்தனர்.

உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாறை ஓவியங்களுக்கென தனித்துறையே அமைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் பேராசிரியர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் கற்றவற்றையே வரலாறெனக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது காந்திராஜனின் ஆதங்கம். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைப்பகுதியில் சுற்றியலைந்தவன் என்கிற முறையில் எனக்குச் சில ஆதங்கங்கள் உண்டு. சமண, பெளத்த அடையாளங்களைத் தாங்கி உலகத்தின்பார்வைக்கு எட்டாமல் விலகியிருக்கும் மலைகளில்கூட அந்த ஓவியங்களைப் பார்க்கச் செல்கிறவர்கள், தங்களின் பெயர்களைக் கிறுக்கிவைத்துவிட்டு வருகிற அளவுக்குத்தான் அவற்றின் பராமரிப்பு இருந்துவருகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்த அளவிலேனும் வரலாற்று உணர்வு இருக்க வேண்டும்.

குகைகளிலும் பாறைகளிலும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் நமது பெரும் அறிவுப் பொக்கிஷங்கள். அவற்றைச் சிதைக்காமல் பாதுகாக்கவேண்டியது நமது கடமை. கீழடி ஆய்வுக்குப் பிறகு பொதுமக்கள், ஊடகங்கள் மட்டுமல்லாமல் அரசுக்குமே வரலாற்று ஆய்வுகளின் மீது தனித்த கவனம் வந்திருப்பது ஆரோக்கியமான விடயம். சமீபத்தில்கூட நமது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கீழடி ஆய்வுகளின் தற்போதைய நிலையை அறிய நேரடியாக ஒரு நாள் முழுக்க அங்கு செலவழித்ததை நாம் செய்திகள் வழியாக அறிந்தோம். தமது வரலாறுகள் மற்றும் பண்பாடு குறித்த அக்கறை கொண்டதொரு சமூகம்தான் ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொண்டதாக இருக்க முடியும்!