Published:Updated:

ச.முருகபூபதி: நாடக நிலத்திலிருந்து ஒரு தொல்குடி பாடகன் | இவர்கள் | பகுதி - 9

முருகபூபதியின் படைப்புகளைப் பற்றி விவரிப்பதைக் காட்டிலும், அவரின் கலை அணுகுமுறையே என்னைப் பெரிதும் கவர்ந்தது எனலாம். ஒரு கதைக்கு, படைப்பவனின் கோணம் மட்டுமல்லாமல், பார்வையாளனின் கோணம், வரலாற்றுக் கோணம் என்று பல்வேறு கோணங்களுண்டு.

``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்

தமிழின் நவீன நாடக உலகில் தனித்த அடையாளங்களுடன், இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டுவருபவர் ச.முருகபூபதி. சடங்குகளையும் உடல்மொழிகளையும் மரபின் அடையாளங்களோடு நிகழ்த்திக்காட்டும் இவரின் நாடகங்கள் பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்குபவை. கலை குறித்து ஒருவருக்கு இருக்கும் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவை பூபதியின் நாடகங்கள்.

தமிழின் தலைசிறந்த நாடக ஆளுமையான மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் மகள் வழிப் பேரனான ச.முருகபூபதியின் குடும்பம் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படும் எழுத்தாளர்களையும்கொண்டது. ச.தமிழ்ச்செலவன், கோணங்கி என்னும் இரு பெரும் எழுத்தாளுமைகளுக்கு உடன்பிறந்த தம்பி ச.முருகபூபதி.

கோவில்பட்டி இந்திரா நகரிலுள்ள அவர்களின் வீடு எப்போதும் கலைஞர்களால் நிரம்பியிருக்கும்.

எழுத்தாளர்கள், ஓவியர்கள், நாடகக் கலைஞர்களென அங்கு வந்து செல்லாதவர்கள் இல்லை. உரையாடல்களால் நிரம்பிய அந்த வீடு பொருளியல் வாழ்வை பொருட்படுத்தாத எளிய கலைஞர்களுக்கான புகலிடம். எனது பதினெட்டாவது வயதில் கோணங்கியும் அவரின் எழுத்துகளும் அறிமுகமாகின. கோவில்பட்டியில் உள்ள இந்திரா நகர் வீடு, சில வருடங்கள் எனக்கும் புகலிடமாக இருந்ததுண்டு.

நடிகர், நாடக இயக்குநர், இசைக்கலைஞர், எழுத்தாளரென முருகபூபதிக்கு ஏராளமான முகங்களுண்டு. நாம் எதையெல்லாம் கைவிட்டோமோ அவற்றின் குரலாக ஒலிப்பதுதான் பூபதியின் நாடகங்களும் எழுத்துகளும். அறிவின் அகங்காரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, பித்துநிலையின் தீவிரத்தைப் பேசவல்லவை அவரின் நாடகங்கள். பித்துநிலையில் உள்ளவர்கள், நாடோடிகள், தெருப்பாடகர்கள், சபிக்கப்பட்டவர்கள், சொந்த நிலத்தில் வாழ முடியாமல் துரத்தப்பட்டவர்களின் ஓலங்களே அவரின் நாடகங்கள். பூமி, எல்லா உயிர்களுக்குமானதென்பதை நாம் திரும்பத் திரும்பப் பேசவேண்டியிருக்கிறது.

அறிவியலின் அகங்காரம் மனிதனைப் பேராசைமிக்கவனாகவும், எல்லாவற்றையும் சுரண்டக்கூடியவனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது.

அந்தச் சுரண்டலுக்கும் அகங்காரத்துக்கும் எதிராக உரத்துப் பேச நாடோடிகளாலும் பித்துநிலையில் உள்ளவர்களாலும் மட்டுமே முடியும்.

சடங்குகளை மறத்தலென்பது நமது அடையாளங்களிலிருந்து நம்மைத் துண்டித்துக்கொள்வதைப்போல துயரமானது. ஒரு இனத்தின் மொழி, சடங்கின் வழியாகத்தான் உயிர்ப்போடு நிலைத்திருக்கிறது. கதைப்பாடல்களின் வழியாகத்தான் மகத்தான வரலாற்றை நாம் இன்றைக்கும் நினைவில்கொண்டிருக்கிறோம். பின்லாந்தியர்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் பெரும் அடையாளமாகக்கொண்ட `கலேவலா’ என்னும் வீரகாவியம் அவர்களது வாய்மொழி இலக்கியமே. செவ்வியல் கலைகளுக்கான புழங்கு வெளி ஒருபோதும் வெகுசன மக்கள் நெருங்குவதற்கானதாக இல்லை, மாறாக, நாட்டார் கலைகள் அந்த மக்களுடனேயே இருக்கின்றன. பல சமயங்களில் அவர்களும் அவற்றில் ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறார்கள். இதனாலேயே மக்களுக்கான கலை வடிவங்களை உருவாக்க நினைப்பவர்கள், நாட்டார் கலைகளிலிருந்து தங்களை உருவாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள்.

முருகபூபதி
முருகபூபதி

``அரங்கின் பகட்டற்ற தன்மையை ஏற்றுக்கொள்வதானது (சார்புத் தன்மைகளையெல்லாம் உரித்தகற்றுவது... அதற்கு அடிப்படையானதாக இல்லாதபோது) அரங்க ஊடகத்தின் முதுகெலும்பை மட்டுமல்லாமல் கலை வடிவத்தின் மிக இயல்பானதாக அமைந்த, மிக உள்ளார்ந்த வாய்ப்பு வளங்களையும் திரைநீக்கி வெளிப்படுத்துகிறது’’ என்கிறார் குரோட்டோவ்ஸ்கி. பூபதியின் நாடகங்கள் இந்தப் பகட்டிலிருந்து துண்டித்துக்கொண்டவையாக இருக்கின்றன.

1999-ம் வருடம் கோவில்பட்டியில் தொடங்கப்பட்ட `மணல்மகுடி நாடக்குழு’ இன்று கண்டிருக்கும் வளர்ச்சியும், தமிழ் அறிவுசார் சமூகத்தில் நிகழ்த்திய உரையாடல்களும் அசாதாரணமானவை. வனத்தாதி, கூந்தல் நகரம், செம்மூதாய், குற்றம் பற்றிய உடல், மிருக விதூஷகம், சூர்ப்பணங்கு, குகைமரவாசிகள் என அவரின் நாடகங்கள் ஒவ்வொன்றுமே பெரும் சலனங்களை உருவாக்கியவை. ஏராளமான சர்வதேச கலைவிழாக்களில் பங்குகொண்ட பெருமை இவர்களுக்குண்டு.

தமிழின் நவீன நாடகங்கள் ஐரோப்பியத் தன்மையோடும், சாயல்களோடும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மணல்மகுடியின் நாடகங்கள் நமது தொல்குடி அடையாளங்களை மீட்டெடுப்பதாக இருந்தன.

நமது வேர்களிலிருந்துதான் நமக்கான பிரத்யேக அடையாளங்களை நாம் உருவாக்க முடியும். எழுத்து, இசை, நாடகமென கலை வடிவம் எதுவாகினும் அதன் வளமை வேர்களில் இருக்கிறது.

கலைக்கு வடிவம் தருவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே காலப்போக்கில் அக்கலையின் அடையாளங்களாக மாறிவிடுகின்றன. காலம் வீசும் பாசக்கயிற்றின் முடிச்சுகளை அவிழ்த்தெறியும் வல்லமை கலைக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே கலை படைக்கும் கலைஞன் பல நேரங்களில் தன்னைக் கடவுள்போல் உணர்வதுண்டு. அவன் முன் விரியும் பிரபஞ்சத்துக்கு அவன் பூசும் வண்ணங்கள்தான் உண்மைகள்.

மு.ஹரிகிருஷ்ணன்: `கலையின் வேர்களை மீட்கும் கலைஞன்' | இவர்கள் | பகுதி - 8

முருகபூபதி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்தைப் பயின்றவர். தாத்தா, பாஸ்கரதாஸின் மீதுகொண்ட பெருமதிப்பின் காரணமாக புதிய வகையிலான நாடகப் போக்கை உருவாக்க வேண்டுமென்கிற தீராத வேட்கை அவருக்கிருந்தது. தமிழ் இசை நாடகங்களில் இன்றைக்கும் மேடைகளில் பாடப்படும் `மேயாத மான்...’ பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியது. நூறு வருடங்களாகியும் அந்தப் பாடல் இன்றளவும் பாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. முருகபூபதியை அவரின் தாத்தாவின் தொடர்ச்சியாகவே எப்போதும் பார்க்கத் தோன்றும்.

முருகபூபதி
முருகபூபதி

அவரின் அண்ணன் கோணங்கியைப்போலவே பூபதிக்கும் அலைச்சல்களின் மீதும், நாடோடித்தனத்தின் மீதும் அலாதியான பற்று உண்டு. வெவ்வேறு நிலங்களில் இசைக்கப்படும் இசைக்கருவிகளைச் சேகரித்துவந்து அவற்றைத் தமது நாடகங்களில் இசைக்கும் வழக்கமுடையவர் பூபதி. நாடோடிகளின் புல்லாங்குழல், ஆஸ்திரேலியப் பழங்குடியினரான அபாரிஜின்களின் டிஜிருடு, ஆப்பிரிக்கக் தோல் கருவியென வெவ்வேறு நிலங்களின் இசைகளை அவரின் நாடகங்களில் நாம் கேட்க முடியும்.

பல வருடங்களுக்கு முன் கைநிறைய கேள்விகளோடு மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நாள்களில், சென்னை கவின் கலை கல்லூரியில் தஞ்சம் புகுவது எனது வழக்கமாக இருந்தது. அங்கு மனிதர்கள் இருந்தனர். மனிதர்களோடு சேர்ந்து ஏகாந்தமும் நிரம்பியிருந்தது. ஒவ்வொருவரும் ஏதோவொரு படைப்பை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தனர். சிலர் சிற்பம் வடித்துக்கொண்டும், வேறு சிலர் ஓவியம் தீட்டிக்கொண்டும் மற்றும் சிலர் மரத்தச்சு வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். படைப்பாளிகள் ஒன்று கூடி தனித்திருந்தனர். அங்கு நூலகம் செல்லவேண்டியிருந்ததால் வழிகேட்டு ஒருவரை அணுகினேன். அவர் சிற்பம் வடித்துக்கொண்டிருந்தார். நாற்பது வயது இருக்கலாம் அவருக்கு. ஒரு முதிய உடலின் சிற்பம் அது. தலை மட்டும் வனையப்படாமலிருந்தது. உடல் முழுதும் கச்சிதமாக அமைந்திருந்தது. சிற்பி தலை குனிந்து அமர்ந்திருந்தார். நான் அவரை அணுகினேன். அவரிடம் பதிலில்லை. மீண்டும் அணுகினேன். அவர் பதிலளிக்கவில்லை. அவர் முதுகைத் தட்டி அழைத்தேன்.

சிவந்து கனிந்த கண்களால் என்னை ஏறெடுத்துப் பார்த்து ``நான் தலையில்லாமல் அமர்ந்திருப்பதை நீங்கள் காணவில்லையா?

தலை இருந்தால்தானே மூளை, கண், காது, மூக்கு, வாய் இவையெல்லாம் வேலை செய்யும்... நான் தலையில்லாமல் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்றார். என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருகியது. அவரை முதுகுடன் அணைத்து மன்னிப்பு வேண்டிவிட்டு அவரை விட்டகன்றேன். அங்கு ஒரு படைப்பவன், தன் ஊன் உயிருருக்கி படைத்துக் கொண்டிருந்தான். அவன் படைத்தல் சடங்கை அரங்கேற்றிக்கொண்டிருந்தான். அவனை அணுகியது பெரும்பாவமென்று புரிந்ததால், அவனைத் தொழுது விடைபெற்றேன். கலையை உயிரெனும் நிலையில் வைத்து அணுகுபவர்களில் ஒருவரென ச.முருகபூபதியைக் கூறலாம். `The Act’ என்று கூறப்படும் சடங்கு முறையை நாடகத்துறையில் பின்பற்றிவரும் இவரின் படைப்புகளில் உயிர்களின் உடல்தான் களம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்லாயிரக்கணக்கான விந்தணுக்கள் ஒன்றையொன்று வீழ்த்திப் போராடி, கருவறைக்குள் புகுந்து, கருவென சூல்கொண்டு ஊனுடல் தரித்து, வடிவம் பெற்று வெளிவரும் உயிர்களுக்கு வலியும் போராட்டமும் வேர்க்குணங்களாகும். அதை உணர்ந்து செயலாற்றும் மனிதன் வலியையும் போராட்டத்தையும் கூட்டுப்புழு மேற்கொள்ளும் மாற்றத்துக்கான வேட்கையாகவே பார்க்கிறான். தான் நிகழ்த்தும் கலைகளிலும் அவன் அவற்றையே நாடுகிறான். `எப்படியாவது நான் செய்யும் கலைக்குள் என் உயிரைக் கடத்திவிட மாட்டேனா?’ என்றே அவன் மனம் விழையும்.

ஆதி மனிதன் தொடர்பாடலை குறியீட்டுக் குறிகள்கொண்டே நிகழ்த்தினான்.

ஒலி, ஒளி வடிவங்களுக்கு முன்னரே மனதில் தோன்றிய உணர்வுகளைக்கொண்டு பாறைகளில் குறியீடுகள் பொறித்தான்.

அக வெளிப்பாடுகள் அப்படியே நிகழ்ந்தன. இப்படி எழுத்துப் பொறிப்புகளின் வழி தொடர்பாடுதல் சாத்தியமான பிறகு ஒலி வழியாகவும், பனுவல் வழியாகவும் மனிதன் கூத்துச் சடங்குகளை இயற்றினான். ச.முருகபூபதி இன்றளவும் தனது நாடகங்களில் ஆதி மனித மனத்தின் தொடர்பாடலை மையமாகக்கொண்டே காட்சிகள் புனைகிறார்.

ச.முருகபூபதி
ச.முருகபூபதி

முருகபூபதியின் படைப்புகளைப் பற்றி விவரிப்பதைக் காட்டிலும் அவரின் கலை அணுகுமுறையே என்னைப் பெரிதும் கவர்ந்தது எனலாம். ஒரு கதைக்கு, படைப்பவன் கோணம் மட்டுமல்லாமல் பார்வையாளனின் கோணம், வரலாற்றுக் கோணம் என்று பல்வேறு கோணங்களுண்டு. அவ்வனைத்துக் கோணங்களிலிருந்தும் ஒரு கதையை அல்லது ஒரு நிகழ்வை அணுகும்போது அதன் முழுமையில் அந்தக் கதை ஒரு சடங்காக உருமாறுகிறது. நடிகர்கள் சாதனங்களாக மாறுகின்றனர். மேடைச் சாதனங்கள் உயிர்பெறுகின்றன. இதையே `Collective Conscious Act' என்று நாடகத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். முருகபூபதியின் நாடகங்களும் அக்கூற்றை பிரதிபலிக்கும் படைப்புகளாக இருக்கின்றன.

நாடகங்கள் மட்டுமின்றி, மரபுசார் தொல் சடங்குகளை, இசை வடிவங்களை கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து புதிய நாடகமொழியை உருவாக்கிவருகிறார்கள். நாடக வரலாறு, நாடகக் கல்வி, பண்பாடும் நாடகமும், நாடகக்கலையின் இன்றைய தேவை, பார்வையாளர் பண்பாடு போன்ற நாடகம் தொடர்பான வெவ்வேறு கருத்தாக்கங்களில் கருத்தரங்குகளை நடத்திவருகிறார்கள். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நாடகக் கலைஞர்களைக் கொண்டு கதை சொல்லும் கலை, கதைவழி கற்பித்தல், ஓவியம் இயற்கைச் செயல்பாட்டுவழிக் கற்றல் குறித்த பயிற்சி பட்டறைகளையும் நடத்திவருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் எப்போதெல்லாம் நான் சோர்வுறுகிறேனோ, அப்போதெல்லாம் யோசிக்காமல் செல்வது கோவில்பட்டிக்குத்தான். கலையின் கரங்களை பற்றிக்கொண்டு ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாமென்கிற நம்பிக்கையை எனக்குள் விதைத்தது கோணங்கியின் எழுத்துகளும், பூபதியின் நாடகங்களும்தான். சில நாள்களுக்கு முன்பு, நீண்ட ஊரடங்கு காலத்தின் அழுத்தம் தாளாமல் கோவில்பட்டிக்குச் சென்றபோது பூபதியின் குழுவினர் ‘இடாகினி கதாய அரத்தம்’ என்னும் தங்களது புதிய நாடகத்துக்கான ஒத்திகையில் இருந்தனர். அந்த நாடகக் காட்சிகளும், அடுத்த நாள் அந்தக் கலைஞர்களோடு உரையாடியதும் பெரும் ஆறுதலாகயிருந்தன. கலையிடம் தஞ்சம் புகும் மனிதன் ஒருபோதும் சோர்வடைவதில்லை, வீழ்ந்துவிடுவதில்லை!

(வருவார்கள்...)

சசிந்திரன்:  ``ஆச்சர்யங்களின் பூமியில் ஓர் அதிசயத் தமிழன்” | இவர்கள் | பகுதி - 7
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு