Published:Updated:

மதிசுதா: தமிழ் ஈழ சினிமாவின் அடையாளம் | இவர்கள் | பகுதி - 22

மதிசுதா

``குறும்படங்கள் தயாரிப்பதற்குப் பொருட் செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில், ஒரு கைப்பேசியும், தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை திரையில் கொணர முடியும், அதை உலகம் காணவும் செய்ய முடியும்” என்கிறார் திரு.மதிசுதா.

மதிசுதா: தமிழ் ஈழ சினிமாவின் அடையாளம் | இவர்கள் | பகுதி - 22

``குறும்படங்கள் தயாரிப்பதற்குப் பொருட் செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில், ஒரு கைப்பேசியும், தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை திரையில் கொணர முடியும், அதை உலகம் காணவும் செய்ய முடியும்” என்கிறார் திரு.மதிசுதா.

Published:Updated:
மதிசுதா
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

``ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. ஆனால் ஒரு நாள் நிச்சயம் எல்லாம் மாறும்" என்று ஒரு நேர்காணலில் திரு.மதிசுதா புன்னகைத்தபடி கூறுகிறார். தமிழ் ஈழத் திரையுலகின் முக்கியமான முகங்களுள் ஒன்றாகத் திகழும் இவர், தனது குறும்படங்கள், ஆவணப்படங்கள் மூலமாக ஈழத்தின் வாழ்வியலை, போராட்டக் களத்தை, போர் வன்முறைகளை, ஈழம் இழந்த அடையாளங்களைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

கலையெனும் ஆயுதத்தால் மட்டுமே மனிதனின் உடலை, மூளையை மீறிச் சென்று அவனது உணர்வுகளைத் துளைக்கவியலும் என்ற கருத்துக்கேற்ப தனது படைப்புகளின் மூலம் தமிழினத்தின் அடையாளமான ஈழத்தின் பெயரை உலக அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்துவருகிறார் மதிசுதா.

ஆவணப்படங்களின் வருகைக்குப் பிறகு தமிழுலகில் மிக அதிகமாக ஆவணப்படுத்தப்படுவது ஈழத்தமிழர்களின் வாழ்வும், அவர்களது போராட்டங்களும்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆவணப்படங்களே அடுத்த தலைமுறைக்கான வரலாற்றுப் பெட்டகம்’ என்னும் ஆய்வாளர்களின் கருத்தை உறுதிசெய்யும்விதத்தில், மதிசுதாவின் குறும்படங்கள் வரலாற்று ஆவணங்களாகும். புனைவுகளில் வருவதுபோல் எந்த மிகைப்படுத்துதலுமின்றி உண்மையை உரக்கக் கூறுவதால் மட்டுமே வரலாறு களங்கப்படாமலிருக்கும். அடுத்த தலைமுறைக்கு உண்மை தெரிய வேண்டுமென்றால் இத்தகு முயற்சிகள் அவசியம். அந்த விதத்தில் திரு.மதிசுதா போன்றோரின் முயற்சிகள் மெச்சுதற்குரியவையாகும்.

மதிசுதா
மதிசுதா

புரட்சியும் மறுமலர்ச்சியும் உணர்வுகளுக்கப்பாற்பட்டவை என்றாலும், அவை விளையும் இடம் ஏதோவொரு தீவிர உணர்வின் மடியில்தான். கலையும் அப்படித்தான் உயிர்பெறுகிறது. அதனால்தான் கலை கொண்டு புரட்சிகள் அரங்கேற்றுவது சாத்தியமாகிறது.

மதிசுதாவின் வலைப்பக்கமான 'மதியோடை'க்குள் நுழைந்து அவரின் பதிவுகளை வாசிக்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரிவதில்லை. ஒரு கலைஞனின் அறிவு வேட்கை, அவனது மன உளைச்சல், அவன் சந்திக்கும் அவமானங்கள் என அனைத்தையும் தனது பதிவுகளின் மூலமாக மதிசுதா வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடியும்.

``குறும்படங்கள் தயாரிப்பதற்கு பொருட்செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில், ஒரு கைப்பேசியும் தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும்... நாம் நினைத்ததைத் திரையில் கொணர முடியும், அதை உலகம் காணவும் செய்ய முடியும்” என்கிறார் திரு.மதிசுதா.

அவரின் பெரும்பாலான குறும்படங்களும், ஆவணப்படங்களும் அலைபேசியில் படமாக்கப்பட்டவை என்பதையறியும்போது வியப்பு மேலிடுகிறது.

'பாதுகை, தாத்தா, ரொக்கெட், ராஜா, துலைக்கோ போறியள், மிச்சக்காசு, வெடி மணியமும் இடியன் துவக்கும், வெந்து தணிந்தது காடு' ஆகிய குறும்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனிச்சிறப்பு மிக்கவை.

மதிசுதா
மதிசுதா

``இந்த உலகுக்குச் சொல்லவேண்டிய ஆயிரம் கதைகள் எம்மிடம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதைச் சொல்ல தனி ஒருவனிடம் அதற்கான பண முதலீடு இல்லை.

எமக்கு ஏன் சினிமா தேவை?

எம்மிடம் உள்ள வாழ்வியல், பேச்சு மொழி, பண்பாடு என்பவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம். இதை இன்னொரு சந்ததிக்குக் கடத்தவோ அல்லது எம் வாழ்வியலை இன்னொரு சமூகத்தக்குக் காட்டவோ எம்மிடம் இருக்கும் ஒரே ஓர் ஆயுதம் சினிமா மட்டும்தான்.

எமக்கிருக்கும் பிரச்னை இங்கு தயாரிப்பாளர்கள் இல்லாமையே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களது 10 டோலரால் அல்லது 1,000 ரூபாவால் ஓர் இனத்தின் சினிமா கட்டமைக்கப்படுமென்றால், ஏன் இந்த முயற்சியை ஒரு சில நிமிடங்கள் செலவழித்துப் படித்துப் பார்க்கக் கூடாது..?" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் திரு.மதிசுதா கையிலிருக்கும் அலைபேசியிலேயே படம்பிடித்துத் தனது குறும்படங்களை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறார்.

`ரொக்கெட் ராஜா, துலைக்கோ போறியள், மிச்சக்காசு, வெடிமணியமும் இடியன் துவக்கும்...’ ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த, என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாகும். ஆழமான உணர்வுகளை உணர்வுபூர்வமான காட்சிகள் மூலமாக மட்டுமே வெளிப்படுத்த முடியுமென்கிற பொதுக்கருத்தை உடைத்து, அவரின் அனைத்துப் படைப்புகளிலும் நகைச்சுவையுணர்வைத் திறம்படக் கையாள்வது மதிசுதாவின் சிறப்பம்சமாகும்.

அவரின் குறும்படங்கள் satire என்கிற எள்ளல் ரசம் மிகுந்து நகைச்சுவையாகவே மனிதனை சிந்திக்க வைக்கும் வல்லமை பெற்றவையாக இருப்பதைப் பார்க்க முடியும்.

'வெடிமணியமும் இடியன் துவக்கும்' என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் வடிய சில நாள்களாகினவென்றே கூற வேண்டும். எத்தனை முறை அப்படத்தைக் கண்டிருப்பேன் என்று கணக்குத் தெரியாத அளவுக்கு அப்படம் எனக்குப் பழக்கம். ஈழ மக்களின் வாழ்வியல், வீரம், வேட்டையாடுவதில் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு என்று அனைத்தையும் அழகான காட்சியமைப்பு மற்றும் வசனங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பார் திரு.மதிசுதா. குறும்படத்தின் ஒரு காட்சியில் தாத்தா, தனது பேரனுக்கு வேட்டைக்கு வேண்டிய துப்பாக்கிச் சூடு கற்றுக் கொடுக்கையில் அவர் பேசும் வசனம் அற்புதமாக இருக்கும். ஒட்டுமொத்த தமிழனத்துக்குமான செய்தி அது எனலாம்.

மதிசுதா
மதிசுதா

"மூச்ச அடக்கி வெக்கணும் கேட்டியா, மூச்ச விட்டியண்டா இலக்கு மாறிப்போய்ரும் கேட்டியா" என்று கதை நாயகன் கூறும் இடம் சிறப்பான காட்சியமைப்பின் சான்றாகும். ஒரு முறை மட்டுமே கண்டு கடந்துவிட முடியாத உணர்வுபூர்வமான படைப்புகளை வழங்கிவரும் திரு.மதிசுதாவின் வருங்காலத் திட்டங்கள் முழுநீளத் திரைப்படங்கள் இயக்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகக் கூறும் அவர், ``ஒரு கதையை இயக்கவோ நடிக்கவோ தேர்வு செய்யும்போது அதை முதலில் துறைசார்ந்த நண்பர்களிடம் பகிர்வது முக்கியம். கதை வெளியாவதால் சிக்கல் ஒன்றுமில்லை. ஏனென்றால், ஒரே கதை இரு வேறு நபர்கள் இயக்கும்போது முற்றிலும் வெவ்வேறு வடிவம் கொள்கின்றன. ஒரு கதை கதையாக இருக்கும்போது ஒரு மாதிரியும், காட்சிகளாக உருமாறும்போது வேறு மாதிரியும் இருக்கும். அதனால் ஒரு கதையில் காட்சியமைப்பும் வசனங்களும் விளையாட இடமிருக்கிறதா என்று உறுதி செய்துகொண்ட பின்னரே கதையைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று மதிசுதா கூறுகையில் அவரின் துறைசார்ந்த நிபுணத்துவம் விளங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த அங்கீகாரமும், அடையாளமும் இன்று பன்மடங்கு பெருகி, சமகால ரசிகர்களின் மத்தியில் ஈழப்படைப்புகள் பெரும் கவனம் பெற்றுவருவதாக மகிழ்வுறும் திரு.மதிசுதா, வில்லுப்பாட்டும் தெருக்கூத்தும் பழகிய எம்மக்களின் ரசனை எமக்கு தெரிந்தவையே.

பொறுமையும் நிதானமும் மட்டும் படைப்பாளர்களுக்குத் தேவை.

"பாலிவுட் கொலிவுட் என்று எவ்வளவுதான் ரசித்தாலும் மண்மணம் மாறாத படைப்புகளிடமே மனிதர்கள் தஞ்சமடைவர். அண்டை வீட்டானின் உணவை ருசிக்கலாம், போற்றலாம். ஆனால், ஒருபோதும் அது அம்மாவின் கைப்பக்குவத்துக்கு ஈடாகாதல்லவா" என்று புன்னகையுடன் கூறுகிறார் மதிசுதா.

தனது குறும்படத்தின் தலைப்பும், தென்னிந்திய திரைப்படமொன்றின் தலைப்பும் ஒன்றாக இருந்ததால் கிளம்பிய சர்ச்சைகளையும் சிக்கல்களையும் ஒருவாறு சமாளித்து வெற்றிப்பெற்றுள்ள திரு.மதிசுதா, ``சினிமா எங்களது ஆயுதம் மட்டுமல்ல அது எங்களது உரிமையும்கூட. இலங்கையில் தமிழ்ப் படங்களுக்கு சரியான வரவேற்பில்லாத சூழலில், தென்னிந்திய திரைப்பட உலகின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் தேவை’’ என்று வலியுறுத்துகிறார்.

மதிசுதா
மதிசுதா

"எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை.

மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா?"

போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்களின் கருத்தும் அண்மைக் காலங்களில் மாறிவருவதைக் காண முடிகிறது என்று குறிப்பிடும் திரு.மதிசுதா, இனிவரும் காலங்களில் தனது கலைப்படைப்புகளின் மூலமாக தமிழ் ஈழம் இழந்த குரலை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறார். வியாபார நோக்கத்தை மட்டுமே பிரதானப்படுத்தி சமரசங்களுக்கு அடிப்பணியச் செய்யும் திரைத்துரை வேதாளங்களிடமிருந்து இந்த விக்ரமாதித்யன் ஈழ சினிமாவைக் காப்பாற்றி பயணித்துக் கொண்டேயிருப்பான் என்று மதிசுதா தனது பதிவொன்றில் குறிப்பிட்டிருப்பார். அவரின் முயற்சிகளிலெல்லாம் அவர் வெற்றி கண்டு, ஈழத்தின் அடையாளத்தை திரையுலகில் நிச்சயம் பதித்திடுவார் என்ற நம்பிக்கை துளிர்ப்பதை உணர முடிகிறது. கலையெனும் ஆயுதம் ஏந்தி நிற்கும் மதிசுதாவுக்கு வாழ்த்துகள்.

(இவர்கள்... வருவார்கள்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism