``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்
காலம் உண்மையின் பொருளை மாற்றவல்லது. ஆனால் நிரந்தர உண்மைகள் என்று சில உண்டு. அவை காலத்தின் பருவநிலை மாற்றங்களால் உருமாற்றம் அடையாமல் நிலைத்து நிற்பவை. `Absolute truth' என்று வகைப்படுத்தப்படும் அத்தகைய உண்மைகளை சமூகத்துக்கு அவ்வப்போது நினைவூட்டிச் செல்வதில் கலை வடிவங்களுக்கு முக்கியப் பங்குண்டு. கலை பயிலும் ஒவ்வொரு கலைஞனும், தான் போற்றிப் பயிலும் கலையின் முழுமையை, அங்கீகாரத்தை பார்வையாளனின், வாசகனின் புரிதலில் காண்கிறான். புகழ்,பொருள் ஆகியவற்றை உபரிச் சேர்க்கைகளாக மட்டுமே அவன் கருதுகிறான். கலைஞர்களில் அத்தகைய ஆளுமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரும்போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமையும்போதெல்லாம் நான் புதுமனிதனாக மாறுவதாகவே உணர்ந்திருக்கிறேன்.
2006-ம் வருடம் ஓசூரில் த.மு.எ.க.ச நடத்திய இலக்கிய முகாமின் வழியாகத்தான் மு.ஹரிகிருஷ்ணன் எனக்கு அறிமுகமானார். ஓரிரு கதைகள் மட்டுமே எழுதத் தொடங்கியிருந்தபோதும் நான் இலக்கியவாதிகளின் மத்தியில் கவனிக்கப்பட்டவனாயிருந்தேன். இலக்கிய முகாம்களின் வழியாக உருவான நண்பர்களைச் சந்திக்க அவர்களது ஊர்களுக்குச் செல்வதும், வாரக் கணக்கில் அவர்களோடு ஊர் சுற்றுவதும் அந்த நாள்களை அழகாக வைத்திருந்தன. ஹரியும் அப்படியான நண்பர்களில் ஒருவர். பல சமயங்களில் இலக்கிய நண்பர்கள் என்னை ஹரியின் உறவினராகவும், அவரின் ஊரைச் சேர்ந்தவராகவும் நினைத்ததுண்டு. அந்தக் காலகட்டத்தில் நான் அதிகம் சுற்றிக்கொண்டிருந்தது மேட்டூருக்கு அருகிலிருக்கும் ஹரியின் ஊரில்தான். புதிதாக எழுத வருகிறவர்களின்மீது ஹரிகிருஷ்ணன் எப்போதும் அக்கறை செலுத்தக்கூடியவர். சரியான நூல்களை வாசிக்கவைப்பதோடு, அவர்கள் தொடர்ந்து எழுதுவதற்காக தனது சிற்றிதழையும் தளமாக அமைத்துக் கொடுப்பவர்.

வட்டார மொழியில் எழுதுகிறவர்களின் எண்ணிக்கை அருகிப்போய்விட்ட இந்தக் காலகட்டத்தில் ஹரியின் கதைகளும் கதை சொல்லல்முறையும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரின் `குடிநாசுவன்’, `மயில் ராவணன்’, `நாயிவாயிச்சீல’ போன்ற கதைகள் என்றென்றைக்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு எவரும் எழுதாத புதிய சித்திரங்களை உருக்கித் தந்திருக்கின்றன. கூத்துக்கலைஞர்களின் வாழ்வையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வையும் பிரதானமாகக்கொண்ட இக்கதைகள் சேலத்துக்கும் மேட்டூருக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியின் பேச்சுமொழியிலேயே அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. கதைக்குள் கதையென விரியும் அவரின் கதை சொல்லல் முறையிலிருக்கும் நாட்டார் வழக்காற்றியல் தன்மை, கோணங்கியின் ஆரம்பகாலக் கதைகளில் வெளிப்பட்டதைப் போன்றே அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. சிறுகதை எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், கவிஞர், கூத்துக் கலைஞரென பன்முகம்கொண்ட ஹரி ஓர் ஆச்சர்யமான மனிதர்.
தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பிரதானமாக தனித்த கலை வடிவங்கள் உண்டு. கணியான் கூத்து, வில்லுப்பாட்டு, இசை நாடகங்கள், ராஜா ராணி ஆட்டம்... என நாட்டுப்புறக்கலைகளின் உலகம் ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்படாதவை. வட மாவட்டங்களில் அதிகம் நிகழ்த்தப்படும் தெருக்கூத்துக் கலை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பிரத்யேகத் தன்மைகள்கொண்டவை. ஹரியின் தாத்தாவும் அப்பாவும் கூத்துக்கலைஞர்கள் என்பதால் அவரின் இளமைப் பருவம் கூத்துக் கலைஞர்களோடுதான் அதிகம் கழிந்தது. இலக்கிய வாசிப்பும் எழுத்தார்வமும் அவரை ஒரு கதைசொல்லியாக உருமாற்றியிருந்தபோதும் தன்னை ஒரு கூத்துக்கலைஞராகவே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஹரியின் கதைகளைப்போலவே அவரின் வாழ்வும் அணுகுமுறையுமே நேரடியானவைதான். கலைப் படைப்புகளை பொழுதுபோக்கும் அம்சங்களாக அணுகும் மேட்டுக்குடிப் பார்வையை கடுமையாக எதிர்க்கும் அவர், அந்தக் கலைஞர்களின் நலனுக்காகவே `களரி தொல்கலைகள் மற்றும் மேம்பாட்டு மையம்’ என்னும் அமைப்பைத் தொடங்கி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

வரலாற்றில் தங்களது இடத்தை அழிக்க முற்படுவோரின் முகத்திரைகளைக் கிழிக்கும் கருவியாக, நாட்டார் கலையை அவர் கருதுகிறார். ஹரியின் கலையார்வம் அவரின் மரபணுக்களின் வழி வந்தது. அவரின் தாத்தனும் தந்தையும் தேர்ந்த கூத்துக்கலைஞர்களாகத் திகழ்ந்தவர்கள். காலத்தின் கட்டாயத்தால் அவரின் தந்தை கூத்துப் பயில்வதிலிருந்து சில காலம் ஒதுங்கவேண்டியிருந்தது. இருப்பினும் அவரின் மனமும் உடலும் மேடையேறி கூத்துக் கட்டுவதையே விழைந்து காத்திருந்தன. குடும்பச் சுமையும், பொருளாதாரத் தேவையும் அவர்களது வாழ்வை தாம் உயிரினும் மேலாகக் கருதிய கூத்துக்கலையிலிருந்து விலக்கிவைத்திருந்தபோதும் மடி தேடும் குழவிபோல் அவர்கள் கலையினிடமே சரணடைந்தனர். ``ஒன்றின்பால் இயல்பாக நமக்கிருக்கும் ஈடுப்பாட்டையும் திறமையையும், எதற்காகவும் யாருக்காகவும் அடகு வைக்கலாகாது என்கிற வைராக்கியத்தை அவரின் (தந்தை)அனுபவத்தால் பெற்றேன்" என ஹரி ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அரங்கக் கலைகள் பழைமையான புராண இதிகாசக் கதைகளைப் பேசுபவையாக இருப்பதைப் பற்றிய விமர்சனத்துக்கு "கூத்து நாடகங்கள் வெறும் நிகழ்த்துபவனின் பொறுப்பு மட்டுமல்ல. அதில் சரிவிகிதப் பங்கு பார்வையாளனுக்கும் உண்டு. ஒருகாலத்தில் பெருமையாகப் பேசப்பட்ட கதைகள், இன்று பகடி தொனியில் பார்வையாளனால் அணுகப்படுகின்றன காரணம், தலைமுறைகள் கடந்து அவனுள் ஏற்பட்டுள்ள புரிதலின் மாற்றங்கள். கலையின் ஆதார நோக்கமும் அதுதான். மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவது. இது சரி, இது தவறு என்பதைப் பாடமாகப் புகட்டாமல் அது பார்வையாளனின் மனதில் நிகழ வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது. அதை எங்கள் நாட்டார் கலைகள் என்றுமே செய்யத் தவறியதில்லை" என்று குறிப்பிடுகிறார். கலையும் ரசனையும் சமூகப் படிநிலையின் உயரங்களில் வீற்றிருப்போரின் உடைமைபோல் கட்டமைக்கப்பட்டிருக்கும் மாய பிம்பத்தோடு அவர் ஒருபோதும் உடன்படுவதில்லை.
கண்ணுக்கு வெளிச்சமாக வேடங்கட்டி, ஆட்டமாடி புத்திக்கு உரைக்கும்படி கதை சொல்வதுதான் கூத்து. கூத்தும் கொட்டும் கொண்டாட்டமும் வறியவர்களிடம்தான் உயிரோட்டத்தோடு சீவித்திருக்கின்றன. மீள முடியாத வறுமையில் உழன்றபோதும் அவற்றை ஈடுப்பாட்டோடும் அர்ப்பணிப்போடும் கைக்கொண்டிருப்போரும் அவர்களே! ஆக இக்கலைகள் வேடிக்கை பார்க்கும் பண்ணாடிமார்களுக்கு பாத்தியப்பட்டவை அல்ல... மாறாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலைப் பேசும் கலை.

ரசனையும் கலைப் புலமையும், மட்டுமேகொண்டு படைப்புகளை உருவாக்கிவிட முடியாது. அது மேட்டுக்குடித்தனமான பார்வை. வயிறார உணவு உண்ட பின் தாம்பூலம் தரித்துக்கொண்டு தூய நன்மாடத்தில் நின்று அமுதூட்டும் நிலவை ரசித்து மொழியப்படும் கவிதைக்கு ஆயுசு குறைவு. ஒரு கலைப்படைப்பு காலத்தின் கடுமையைத் தாங்கி நிற்க வேண்டுமாயின் அதில் அதைப் படைத்தவனின் ஒரு துளி உயிர் கலந்திருக்க வேண்டும். தன்னை மாய்த்துக்கொண்டு சிற்பத்துக்கு உயிர் கொடுப்பவன்தான் கலைஞன். அவன் அதை வலிந்து செய்வதில்லை. தன்னிலை மீறி செய்கிறான். அவன் நிகழ்த்தும் யாவும் கலை அவனுள்ளிருந்து நிகழ்த்துவதேயன்றி அதில் அவன் கட்டுப்படுத்த ஏதுமில்லை. அதனால்தான் கூத்தாடி வேடங்கட்டி ஆடும் ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் உயிர்பெற்று மரிக்கிறான். மீண்டும் உயிர்த்தெழுகிறான்.
கூத்துக்கலையில் பெண்களின் பங்கும் அவர்களது நிலையும் குறித்து பேசுகையில், வேறெந்த கலை வடிவத்தைக் காட்டிலும் நாட்டார் கூத்துக் கலையில் பெண்கள் சுதந்திரமாகவும் தனித்தன்மையுடனும் கோலோச்சிவருவதாகக் கருதுகிறார். "பாலியல் சீண்டல்கள் அறவே இல்லை என்று கூற முடியாவிடினும், வேடங்கட்டி மேடையேறியதும் பெண்களும் திருநங்கைகளும் அவரவர் கதாபாத்திரங்களுக்காகவே போற்றப்படுகின்றனர். அங்கு பாலியல் அடையாளங்கள் மறைந்துவிடுகின்றன. நான்கு தலைமுறைகளாக கந்தாயீ, பூவாயி, பவுனாம்பா, லட்சுமி போன்ற கலைஞர்கள் தனித்து நாடகக்குழு வைத்து நடத்துவதே அதற்குச் சான்று. ஒப்புநோக்கு பார்வையில் கூறுவதென்றால் திருநங்கைகளுக்கு இருக்கும் நுட்பமான கலையார்வமும் வேடங்கட்டி ஆடுவதில் இயல்பாகவே அவர்களுக்கிருக்கும் ஆர்வமும் கூத்துக்கலையில் அவர்கள் மிளிர்வதற்கு காரணிகளாக அமைகின்றன" என்கிறார்.

ஹரியின் மணல்வீடு இலக்கிய வட்டத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் மக்கள் கலை இலக்கிய விழா முக்கியமானதொரு செயல்பாடு. சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவது, வயது முதிர்ந்த கூத்துக் கலைஞர்களை கெளரவிப்பது எனத் தொடங்கி இரவு முழுக்க கூத்தும் நடைபெறும். எழுத்தாளர்களும், கூத்துக் கலைஞர்களும் சந்தித்து உரையாடுவதற்கான நல்ல களமாகத் திகழ்ந்துவருகிறது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தமிழ்ச் சூழலில் அதிகம் பொருட்படுத்தப்படுவதில்லை. கிராமியக் கலைகள் குறித்து வெகுஜன மக்களுக்குப் பெரிய புரிதல் இல்லை என்பதுதான் யதார்த்தம். கேரளாவில் தய்யம் திருவிழா நடைபெறுவதுபோல் இங்கும் வருடம்தோறும் ஏராளமான திருவிழாக்கள் நடைபெற வேண்டும். புரிசை திருவிழா நமக்குப் பெரிய திறப்புதான் என்றாலும், அது மட்டுமே போதாது. ஹரிகிருஷ்ணனைப்போல் கிராமியக் கலைஞர்களைப் புரிந்துகொண்டு அவர்களோடு இணைந்து செயல்படுவது முக்கியமானது. மேச்சேரிக்கு அருகிலிருக்கும் ஏர்வாடி என்னும் சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து வந்த ஹரி இன்று தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு உருவாக்கித் தந்திருக்கும் வெளி பெரிது.
கூத்தும் பாட்டும் அவரது அடையாளமென்றால், வாசிப்பும் எழுத்தும் அவரது கலையார்வத்தின் நீட்சி எனலாம். `மயில் ராவணன்’, `நாயீவாயிச்சீல’ என சிறுகதைத் தொகுப்புகளும் `அருங்கூத்து- தொகை நூல்’ எனும் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியற் பதிவும் இவரது எழுத்தில் வெளியான படைப்புகள். நாட்டார் எழுத்தாளர்கள்மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்கள் பயன்படுத்தும் கொச்சையான சொல்லாடல் முறைகள். ஹரியும் நாட்டார் மொழி வழக்கை தன் எழுத்தில் எவ்வித சமரசமுமின்றி பயன்படுத்தியவராவார். ஒரு குறிப்பிட்ட நிலத்தையும் அந்நில மக்களின் வாழ்வையும் எழுதும்போது அவர்களின் மொழியையும் அப்படியே வார்த்து எழுதுவதுதான் நேர்மையான அணுகுமுறை. தனது எழுத்தைப்போலவே வாழ்வும் அமைவது எழுத்தாளர்களுக்கு அபூர்வம், அவருக்கு அது வாய்த்திருக்கிறது.

ஓர் இலக்கியவாதியாக புதிய எழுத்தாளர்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பதோடு, தனது சிற்றிதழான `மணல் வீட்டில் அவ’ர்களை எழுதவைக்கிறார். அவர்களின் நூல்களைப் பதிப்பிக்கிறார். இன்னொருபுறம், களரி பண்பாட்டு மையத்தின் மூலமாக மூத்த கூத்துக்கலைஞர்களுக்கு ஓய்வுதியம் வழங்கிவருவதோடு, புதிய கூத்துக்கலைஞர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளையும் கொடுத்துவருகிறார். நாட்டுப்புறக்கலைகளைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் குறைந்துவரும் சூழலில் சரியான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பயிற்றுவிப்பதென்பது மிக முக்கியமான பணி. கூத்தும் நாடகமும் பாட்டும்தான் பல நூறு வருடங்களாக நமது வாழ்வையும் வரலாற்றையும் பாதுகாத்துவந்தவை. நாட்டார் கலை வடிவங்களை அடையாளப்படுத்தலுக்கானவை என்று பொத்தாம் பொதுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது, எளிய மக்களோடு நேரடியாகப் பேசக்கூடிய ஊடகமது. வாழ்வின் அறத்தையும் நியாயங்களையும்தான் கதைசொல்லிகள் நம் முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கை குறித்த அறங்களையும் விழுமியங்களையும் பொருட்படுத்தாத ஒரு தலைமுறை நம் கண்முன்னால் உருவாகிக்கொண்டிருப்பதால் முன்னெப்போதையும்விட இந்தக் காலகட்டத்தில்தான் கூத்தும் நாடகமும் மக்களிடம் பரவலாக வேண்டும். ஹரி எழுத வந்த காலத்திலிருந்து இடைவெளிவிடாமல் எழுதியிருந்தால் இன்று ஏராளமான நூல்களை எழுதி மிகப்பெரிய விருதுகளையும் பெற்றிருப்பார். அவருக்கு எழுதுவதைவிடவும் மற்றவர்களை எழுதவைப்பதும், அதைவிடவும் முக்கியமாகக் கூத்துக்கலைஞர்களும் தெருக்கூத்துமே பிரதானமாகயிருந்ததால் தன் வாழ்வின் அதிமுக்கியமான காலகட்டத்தை அவர்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்..!
(இவர்கள்... தொடர்வார்கள்)