Published:Updated:

ஊசிப்புட்டான்: `எவம்ல அந்த வாத்தியான்... அவெம் பேரு என்னல..?’ | அத்தியாயம் - 10

ஊசிப்புட்டான்

மீண்டுமொரு முறை கத்திகள் இரண்டையும் விட்டுச் சென்றிருந்த சுவடை உற்று நோக்கினான். உள்ளே இறங்கியவிதத்தில் இரண்டுமே ஒன்றுபோலவே தங்கள் சுவடை விட்டுச் சென்றிருந்தன.

ஊசிப்புட்டான்: `எவம்ல அந்த வாத்தியான்... அவெம் பேரு என்னல..?’ | அத்தியாயம் - 10

மீண்டுமொரு முறை கத்திகள் இரண்டையும் விட்டுச் சென்றிருந்த சுவடை உற்று நோக்கினான். உள்ளே இறங்கியவிதத்தில் இரண்டுமே ஒன்றுபோலவே தங்கள் சுவடை விட்டுச் சென்றிருந்தன.

Published:Updated:
ஊசிப்புட்டான்

தானே அறிந்திராத அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எவருமே அறிந்திருக்காத அனுபவத்தை, தான் கண்டடையும் வேளையில் கிடைக்கும் ஆனந்தமும் உற்சாகமும் ஒன்றாகச் சேர்ந்து அடுத்தடுத்து காலடி எடுத்துவைக்கப் போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பது பள்ளிப் பாடங்களிலோ அல்லது அதை அறிந்த எவருமே கற்றுக் கொடுக்காமல் இருந்தபோதிலும் ரவி அன்றைய தினம் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தான்.

வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் சென்று வந்துகொண்டிருந்த ரவியின் தினசரி வாழ்வில் ஒரு சிறு மாற்றமாக அவன் சின்னத்தம்பியின் பெட்டிக் கடைக்குச் சென்ற பயணமும், அங்கே அவன் சந்தித்த பால்ராஜ், தங்கப்பாண்டியன், முத்துலிங்கம் எனத் தன்னிலிருந்தும் வயதில் மூத்த மனிதர்களின் அறிமுகமும், அவர்கள் இவனிடம் காட்டிய நெருக்கமும் அவனுள் ஒரு ரசாயன மாற்றத்தைத் தொடங்கிவிட்டிருந்தது. அதிலும் குறிப்பாக வைகுண்டமணியிடம் சண்டையைப் போட்டுவிட்டு வந்து கலங்கி நின்ற நேரத்தில் தங்கப்பாண்டியன் தன்னை `மூத்தப்பா...’ என்று அழைக்கச் சொன்னதும், ஒரே அடியில் நாலு பேரை அடித்துத் தூக்கிப்போட்டுவிடும் உடல் வலுகொண்ட முத்துலிங்கத்திடம் தன்னை, `எனக்கு என் பையன் வேற... இவன் வேற இல்லை’ என்று அறிமுகப்படுத்திவைத்ததும்,

அந்தக் கட்டுமஸ்தான முத்துலிங்கமும், நோஞ்சானான தன்னிடமும், தங்கப்பாண்டியனிடம் காட்டிய அதே மரியாதையைக் காட்டியதும் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்கியிருந்ததும்

போக, கத்தியின் வகைகளைப் பற்றியும் அதைக் கண்டறியும் முறைமைகளைப் பற்றியும் அன்றைய தினம் அவன் கற்றுக்கொண்டது, அவன் வயதையொத்த வேறு எந்தச் சிறுவனும் அறியாதது என்பதை நினைக்கையில் அந்த அனுபவ அறிவு அவனுக்குள் ஒரு மிதப்பையும் கொண்டுவந்து சேர்த்திருந்தது.

தங்கப்பாண்டியனும் முத்துலிங்கமும் சின்னத்தம்பியின் கடையிலிருந்து சென்ற பிறகாக, முதலில் கீழே கிடந்த குச்சியொன்றை எடுத்துத் தன்னுடைய ஆட்காட்டி விரலில் வைத்து, தங்கப்பாண்டியன் முத்துலிங்கத்தின் கத்தியை வாங்கிச் சமநிலை பார்த்ததைப்போலச் சமநிலை பார்த்தான். ஆனால் வளைந்து நெளிந்திருந்த குச்சியோ தாறுமாறாக நடனமாடியது. அதை உடைத்து எறிந்தான். பின்னர் கடையின் ஓரத்தில் வேண்டாமென ஒதுக்கிவைத்திருந்தப் பூசணிக்காயில் முத்துலிங்கமும் தங்கப்பாண்டியனும் அவரவர் கத்தியைச் சொருகி உண்டாகியிருந்த கிழிசலை உற்றுப் பார்த்தான். முத்துலிங்கத்தின் கத்தி உண்டாக்கியிருந்த சுவடு, மேலே சற்றுத் தடிமனாகவும், கீழே சற்றுத் தேய்ந்தும் உருவாக்கியிருக்க, தங்கப்பாண்டியனின் கத்தி உண்டாக்கியிருந்த சுவடை ஆராய்ந்தான். சுவடின் நடுவில் மட்டும் சற்று தடினமாயிருக்க, மேலும் கீழும் ஒரேயளவில் மெல்லிய கிழிசலை அது உருவாக்கியிருந்தது.

``குத்துன கத்தியை நீ உருவி எடுக்கிறச்சே லேசா மேலயும் கிழேயும் ஒரு இழு இழுத்துட்டு உருவினேன்னுவெச்சுக்க... நீ எந்தக் கைக்காரன்னு கண்டுபிடிக்க முடியாதுடே” என்று தங்கப்பாண்டியன் முத்துலிங்கத்திடம் சொன்னது அவனுக்கு நினைவில் வந்தது.

மீண்டுமொரு முறை கத்திகள் இரண்டையும் விட்டுச் சென்றிருந்த சுவடை உற்று நோக்கினான். உள்ளே இறங்கியவிதத்தில் இரண்டுமே ஒன்றுபோலவே தங்கள் சுவடை விட்டுச் சென்றிருந்தன. `போலீஸ்காரங்களுக்கு கத்தி இறங்கியிருக்க தெசயவெச்சு குத்துனவன் வலது கைக்காரனா இல்லை எடது கைக்காரனான்னு கண்டுபிடிச்சிடலாமே... அப்புறமா எப்படி மூத்தப்பாவெச்சிருந்த கத்தயைவெச்சு குத்தினா மட்டும் வலதா எடதான்னு கண்டுபிடிக்க முடியாதுனு சொன்னாவ’ என்று எத்தனை ஆலோசித்துப் பார்த்தும் ரவியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``மாரிய்... ஏம்மாரி அந்த வெசம் பாஞ்ச பூசணிக்காவயே இப்டி உத்துப் பாத்துட்ருக்க..?” சின்னத்தம்பியின் குரல் ரவியின் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

`என்னது வெசம் பாஞ்ச பூசணிக்காவா?’ ரவி அதிர்ச்சியடைந்தான் என்றாலும், அதைக் காட்டிக்கொள்ளாதபடிக்கு, ``ஒண்ணுல்லண்ணே” என்று சமாளித்தான்.

``இப்ப நெதுக்கு இவ்ளோ அதிர்ச்சியாவுற ரெவி...?” கேட்டவன், தன் தலையை இடவலம் திருப்பி ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு, ``கொலகாரப் பயலுவ” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் முகம் இத்தனை வெகுளித்தனமாகக் காட்டிக் கொடுத்ததை நினைத்துத் தன்னையே கடிந்துகொண்ட ரவி, பேச்சை மாற்றும்விதமாக, ``சின்னத்தம்பிண்ணே... நான் ஒண்ணு கேட்டா கோவப்பட மாட்டீங்கள்ல” என்றான்.

கடையின் முன்னிருந்த ஒவ்வொரு மிட்டாய் பாட்டிலையும் கடைக்குள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த சின்னத்தம்பி ரவியை நிமிர்ந்து பார்த்தான், பின்னர் அவனுடைய கேள்விக்குப் பதிலெதுவும் சொல்லாமல் மீண்டும் தன்னுடைய கடையை ஒதுக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தான்.

அடுத்த சில நொடிகளுக்கு ரவியிடமிருந்து எந்தவொரு கேள்வியும் வராது போகவே, மீண்டும் நிமிர்ந்து ரவியைப் பார்த்தான். ரவி தன் தலையைத் தொங்கலிட்டபடி, அவன் கால் கட்டைவிரல் மண்ணை நிமிண்டுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

``ரெவி என்ன கேக்க வந்த?” மீண்டும் தன் வேலையைப் பார்த்தபடியே சின்னத்தம்பி கேட்கவும், தலையை நிமிர்த்திப் பார்த்த ரவி, ``மூத்தப்பா அந்தச் சாராயத்துல வெரல முக்கி எடுத்து, தீயைப் பத்தவெச்சுக்கிட்டார்ல, அப்ப அவருக்கு வெரல் சுட்டிருக்காதா?” எனத்  தன்னுடைய சந்தேகத்தை உற்சாகமாகக் கேட்டான்.

``அதெல்லாம் ஒண்ணுஞ் சுடாது” இதில் உற்சாகம்கொள்ள எதுவுமில்லை என்பதை உணர்த்தும்விதமாக,  சின்னத்தம்பியிடமிருந்து வெடுக்கென்று பதில் வந்தது.

`ஆமாமா... அதெல்லாம் சுட்டுருக்காது. ஏன்னா வெரல்ல தீயெரியிறப்ப அவரு முகத்துல கொஞ்சங்கூட எரிச்சலே வரலியே... சிரிச்சமேனிக்கேதான உக்காந்திருந்தாவ’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்ட ரவி திரும்பிப் பார்க்கையில், கடையின் முன்வரிசையில் இருந்த பாட்டில்கள் அனைத்தும் சின்னத்தம்பி கடையினுள் தஞ்சமடைந்திருந்தன.

``என்னண்ணே... கடையப் பூட்டப் போறியளா?” ரவி கேட்டான்.

``ஆமாடே. இனி சந்தைக்கிப் போயி வேற பூசணிக்காயோ, தடியங்காவயோ, வெள்ளரிக்காவயோ என்ன எளவு காயி கெடைக்கிதோ அதை வாங்கணும். அதைக் கொண்டு போய் பதில கொடுக்கணும்” என்றான் அலுப்போடு சின்னதம்பியும்.

``ஏண்ணே... இந்தப் பூசணியவே கொண்டு போலாம்ல, மூத்தப்பாவும் அந்தண்ணனும் சும்மா கத்தியைக் குத்தி டெஸ்ட்டுதான பண்ணிக்கிட்டாவ?” என்று வெகுளித்தனமாகக் கேட்பதைப் போன்ற பாவனையில் அந்தக் கத்தியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்ட ரவியை அலுப்போடு பார்த்தான் சின்னத்தம்பி.

``இனி அந்தக் காயைத் தூக்கி ஒடப்புலதான் போடணும்” என்று சொன்ன சின்னத்தம்பியின் குரலில் இனி அங்குமிங்கும் அலைய வேண்டுமே என்கிற எரிச்சலே நிறைந்திருந்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

கடையிலிருந்த பொருள்களையெல்லாம் கடையினுள் வைத்துவிட்டு, கடையோரமாகச் சாத்திவைத்திருந்த பலகைகளை ஒவ்வொன்றாக எடுத்து வரிசைப் பிரகாரமாக அடுக்கி, கடையைத் தாழிட்ட சின்னத்தம்பி, ``ஏம்மாரிய்... நீ வீட்டுக்குப் போறியா இல்லை எங்கூட பதிக்கு வர்றியா?” ஒரு ஒப்புதலுக்காகக் கேட்கவும், ரவியின் மூளையில் முந்தைய நாள் பால்ராஜ் உருவாக்கிவிட்டிருந்த அன்னச்சாப்பாட்டின் ருசி உதித்தது. ``இப்பவே நான் வீட்டுக்குப் போனா அம்மெ எங்கிட்ட கேள்வியா கேட்டுத் தொலைப்பா, பதில் சொல்ல முடியாது. நானும் பதிக்கு வரேன்” என்றான்.

அன்றைய தினம் முழுக்க ரவியின் மனதில் அனைவருமே மரியாதையோடு பார்க்கும் ஒரு மனிதர் தன் தோளில் கைபோட்டு அமர்ந்திருந்த சந்தோஷமே குடிகொண்டிருந்தது. சந்தோஷம் என்பது ஒரு கண்ணாடி மாளிகை. அதை உடைத்து நொறுக்க ஒரு சிறு கல் போதும் என்கிற விஷயத்தை ரவிக்குப் புரியவைக்க, அவன் வகுப்பில் அவனோடு படிக்கும் சகாயம், ஒயர் கூடையின் கைப்பிடி இரண்டையும் தோளில் மாட்டி, அந்த ஒயர் கூடையையே முதுகுப்பையாக மாற்றி அவன் முன்னால் வந்து நின்றான்.

``மக்கா லேய்... இன்னிக்கு நம்ம வைகுண்டமணி சார செம ஒடக்கு ஓடக்கிட்டலே நீ. உனக்கு எப்படில அவ்ளோ தைரியம் வந்துச்சு?” என ஆச்சர்யம் பொங்கக் கேட்ட சகாயத்தைப் பெருமை பொங்கும் பார்வை பார்த்தான் ரவி.

``சாரு ஆடிப் போயிட்டாரு தெரியுமா... நீ வெளிய போனப்பறமா இன்னிக்கு அவரு பாடமே எடுக்கலை. டிஞ்சிக் டிஞ்சிக்னு கிளாஸைவிட்டு வெளியே போறதும் உள்ளே வரதுமாவே கொஞ்ச நேரம் இருந்தாரு. அப்புறமா பத்தனாபனைக் கூப்பிட்டு `லேய் எவனும் சத்தம் போடாம பாத்துக்க. எவனாச்சும் சத்தம் போட்டான்னா ஒன் குண்டித் தொலிய உரிச்சிடுவேன்’னு சொல்லிட்டு ஸ்டாஃப் ரூமுக்குப் போயிட்டாரு” என்று சகாயம், வைகுண்டமணியின் திண்டாட்டத்தை அபிநயத்தோடு சொல்லச் சொல்ல, ரவியினுள் உருவாகியிருந்த கண்ணாடி மாளிகை, மாட மாளிகையாக உருமாறிக்கொண்டேயிருந்தது.

``இன்டர்வெல் பெல்லடிச்சதும் வெளியே வந்தமா, ஸ்டாஃப் ரூம் வாசல்ல உங்கம்மை கோவமா உக்காந்திருந்தாங்கல...” என்று சகாயம் சொல்லி முடிக்கவும், ரவியின் மாடமாளிகை மீது ஒரு கல் வந்து வீழ்ந்து அதைச் சுக்கல் சுக்கலாக உடைத்து நொறுக்கியது.

``ல்ல் ல்லேய்… என்னென்னுல சொல்லுத... அம்மெ ஸ்கூலுக்கு வந்திருந்தாவளா... பொய் சொல்லாதல...”

ரவியின் மனம் நடுங்கியதைப்போலவே அவனது வார்த்தைகளும் நடுக்கத்தோடு வெளிவந்தன.

``நா ஏம்ல ஒங்கிட்ட பொய் சொல்லப் போறேன்... வந்திருந்தாவல... நானே எங்கண்ணால பாத்தேம்ல” அதற்குப் பிறகாக சகாயம் பேசிய வார்த்தைகள் எதுவுமே ரவியின் காதை வந்தடையவில்லை. அவன் மனம் முழுக்க இனி வீட்டுக்குச் சென்றதும் அம்மா என்னென்ன கேள்வியையெல்லாம் கேட்கப் போகிறாளோ என்கிற சந்தேகத்தையேச் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்திருந்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

ஒரு பறவையாகத் தகவலைச் சுமந்து வந்த சகாயம், அவன் வீடு இருக்கும் திசையை நோக்கிப் பறந்துவிட்டிருந்தான். ஆனால் ரவியின் வீட்டுக்கான பாதையோ ரவிக்குத் தொலைவாகிப்போயிருந்தது.

அடிமேல் அடிவைத்து அடிப்பிரதட்ணம் செய்து ரவி வீட்டினுள் நுழைந்தபோது, வீட்டினுள் குடிகொண்டிருந்த அமைதி விஜயா வீட்டில் இல்லை என்பதை அவனுக்குத் தெரிவித்தது என்றாலும், அம்மா என்றழைத்துப் பார்க்க, அவனுக்கு நா எழவில்லை. புத்தகக் கூடையை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, இனி என்ன செய்வது என்பதை அறியாதவனாக அப்படியே நின்றுகொண்டான்.

முகத்தில் கடுகடுப்போடும், கையில் காலி கேனோடும் விஜயா நுழையும் வரையிலும் ரவி அப்படியேதான் நின்றிருந்தான். அதே கடுப்போடு ரவியைப் பார்த்தாள். பின்னர் எதுவுமே பேசாமல் அடுக்களைக்குள் சென்று கையிலிருந்த கேனைக் கீழே தொம்மென்று வைத்த சத்தம் ரவிக்கு கேட்டது.

`அம்மெ ரேஷன் கடெக்கிப் போய் மண்ணெண்ணெய் வாங்கிட்டு வராப்போல’ மனதினுள் நினைத்துக்கொண்டான் ரவி.

``ஆம்பள இல்லாத வீடுன்னா எல்லாவனுவளுக்கும் எளக்காரமா போயிடிச்சு. ரேஷங்கடெக்கிப் போனா டிரம்ல மண்ணெண்ணெயவெச்சுக்கிட்டே நாளைக்கு வான்னு சொல்றான்.” அடுக்களைக்குள் இருந்து விஜயாவின் குரல் உச்சத்தில் ஒலித்தது. அவளின் குறையீடு அத்தோடு முடிந்துவிட்டதாக ரவிக்குத் தோன்றவில்லை. அடுத்து என்ன சொல்லப்போகிறாள் என்பதைக் கேட்கத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டான். அவன் எதிர்பார்ப்பைப் பொய்யாகும்விதமாக அவளிடமிருந்து எந்தவொரு வார்த்தையுமே வெளிவரவில்லை. ஆனால் அவளே வந்து நின்றாள்.

``இவ்ளோ நேரம் எங்க போயிட்டு வர்றே?” விஜயாவின் நேரடித் தாக்குதலில் நிலைகுலைந்துபோன ரவி, எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றான்.

``கேக்குறேன்ல...”

``...’’

``எவம்ல அந்த வாத்தியான்... அவெம் பேரு என்னல?”

ரவிக்கு, தான் எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நடக்காமல் வேறு ஏதேதோ நடந்துகொண்டிருப்பது அதிர்ச்சியாயிருக்க, விஜயாவை மிரட்சியோடு பார்த்தான்.

தலையில் போட்டிருந்த கொண்டையை அவிழ்த்துவிட்டு, மீண்டும் அதை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டையிட்டுக்கொண்ட விஜயா, ``என்னல பாக்குத..? அவெம் பேரு என்னன்னு கேட்டேன்.” 

ரவி நாக்குக் குழற, ``வை… வைகுண்டமணி” என்றான்.

(திமிறுவான்...)