Published:Updated:

ஊசிப்புட்டான்: ``சின்னப் பயலுவதான் பார்த்ததை அப்படியே வந்து சொல்லுவானுவ!” | அத்தியாயம் - 13

ஊசிப்புட்டான்
News
ஊசிப்புட்டான்

``அதெல்லாம் ஒண்ணுமில்லடே. அவன் வேவு பார்த்தான்னாக்க சூப்பரு. ஒருவேள அவன் மாட்டேன்னு சொல்லிபுட்டான்னா… அதான் என்ன பண்றதுன்னு கேட்டேன்.”

நகரத்தின் மையத்தில் இருந்த அந்த பிரமாண்டமானக் கருங்கல் கட்டடத்தின் முகப்பில் விஜயாவும் ரவியும் நின்றுகொண்டிருந்தார்கள். ரவி, தான் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து அண்ணாந்து அந்தக் கட்டடத்தைப் பார்த்தான். அடர்காவி நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்த அந்தக் கட்டடத்தின் கூரிய கூம்பும், அதன் மேலிருந்த இடிதாங்கியையும் மட்டுமே அவன் பார்வைக்குக் கிடைத்தன. அவனது இரு பக்கமும் அவனுடையக் கண் மறைவிலிருந்து தார்ச்சாலைகள் இரண்டு வளைந்து, முகப்பு வாசலில் வந்து ஒன்றிணைந்து, வெளிச் சாலையோடு தங்களை இணைத்துக்கொண்டிருந்தன. விஜயாவின் கையைப் பற்றிக்கொண்டு அவன் முன்னால் தெரிந்த படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தான். அவன் ஒவ்வொரு படியாக ஏற ஏற அவன் கண்முன்னே இரு பக்கமும் கால்பந்துக்கான கோல் போஸ்ட்டுடன் கூடிய மிகப்பெரிய மைதானம் ஒன்று விரிய ஆரம்பித்தது. ஒரு முறை அந்த மைதானத்தைப் பார்த்தான். அவன் மனம் வேகவேகமாக இதற்கு முன் அவன் படித்த பள்ளியின் நில அளவை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டது.

``ஏம்மா நான் படிச்ச ஸ்கூலு, இந்த கிரவுண்டுக்குப் பாதி அளவுகூட இருக்காதுல்லம்மா?”

ஆச்சர்யம் பொங்கும் கண்களோடு வினவினான் ரவி.

``வாயை மூடிட்டு வர்றியா... இந்த ஸ்கூல்லயாச்சும் உனக்கு அட்மிஷன் கிடைக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ” ரவியின் ஆச்சர்யத்தைப் புறம்தள்ளிய பதற்றத்தோடு பதிலளித்தாள் விஜயா.

மைதானத்தின் முடிவில் முப்பதடி உயரத்தில் கொடிக்கம்பம்... அதிலிருந்து சில அடி தொலைவில் மீண்டும் ஒரு பெரிய படிக்கட்டு மேலேறியது.

விஜயாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக அவன் மேலேற, `எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்த பிரமாண்டக் கட்டடத்தின் முகப்பு வாயைத் திறந்து அவனை உள்வாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவனையும் அறியாமல் அவனுடைய கை விஜயாவின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

படிக்கட்டின் இரண்டு பக்கமும் பூங்காவைப்போலப் பலவித மலர்ச் செடிகளும் மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்ததைப் பார்த்தவனின் காதுகளில், மரத்தில் பச்சைக்கிளிகள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளும் `கீக்கீ... கீக்கீ...’ சப்தமும் விழுந்தது. பூங்காவில் வளர்ந்திருக்கும் மரத்தின் உச்சியைப் பார்த்தான். கிளிகள் இருக்கும் இடத்தைக் காண முடியாத வகையில் மரத்தின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

``லேய்... அங்க என்னலே பராக்கு பாத்துட்டு இருக்கெ. வால இங்க...” என்று விஜயா அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

``அம்மா கிளிச் சத்தம் கேக்குதும்மா. இங்க நெறைய கிளிங்க இருக்கும்னு நெனைக்கேன்.” அவனுடையக் கால்கள் தரையில் பதிந்திருந்தாலும் பார்வை மர உச்சியையே உற்று நோக்கி, ஏதேனும் ஒரு கிளியையேனும் பார்த்துவிட மாட்டோமா என்றே தேடிய மனம், சட்டென `நமக்கெ கண்ணுல ஒரு கிளியாச்சும் சிக்கிட்டுன்னா அட்மிஷன் கிடைச்சிடும்’ என நினைத்துக்கொண்டது.

இப்போது இன்னும் தீவிரமாக அவனது கண்கள் ஒவ்வொரு மரத்தின் கிளையையும் உன்னிப்பாகத் தேட, மரப்பொந்திலிருந்து வெளிவந்த ஒரு ஜோடிக் கிளிகள் அவன் பார்க்க விருட்டென்று பறந்து சென்றன.

``அம்மா... அம்மா... நான் கிளியைப் பார்த்துட்டேம்மா” உற்சாகமாகக் குரல் எழுப்பியவனைப் பார்த்து முறைத்தாள் விஜயா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``ஒனக்க அட்மிஷனுக்காக்கும் வந்திருக்கோம், கிளியப் பாக்க இல்லை. தெரிஞ்சுக்கோ” பள்ளியின் பிரமாண்டம் அவளையும் பாதித்திருக்கிறது என்பதை அவளது குரல் வெளிப்படுத்தியது.

பள்ளித் தலைமை ஆசிரியரின் அறை எங்கே என்று தெரியாமலும், யாரிடம் கேட்பது என்பது புரியாமலும் ரவியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு பரிதவிக்கும் கண்களோடு நின்றிருந்தவளை, ``என்னம்மா இங்கே நிக்கிறீங்க?” என்று ஒரு குரல் கலைத்தது.

குரல் வந்த திசையைப் பார்த்தாள் விஜயா.

கேரள நம்பூதிரியின் ஒருபக்க கொண்டையைப் போன்றே முடி வளர்த்திருந்த ஒருவர் விஜயாவைப் பார்த்தபடி நின்றிருந்தார்.

``என்னம்மா பையன் அட்மிஷனுக்கா..?” மீண்டும் அவரே கேட்க, ``ஆமா சார். ஆனா எங்கே போறதுன்னுதான் தெரியலை” என்று தயக்கத்தோடு பதிலளித்தாள் விஜயா.

தனது வலது கையை, வலது பக்கவாட்டில் தூக்கி, ``இப்படியே நேரா போனீங்கன்னா இந்த பில்டிங்கோட முடிவுல படிக்கட்டு ஒண்ணு வரும். அதுல ஏறி, மேலே போய் இப்ப நீங்க நிக்கிறீங்கள்ல... இதுக்கு நேரா மேலதான் ஹெட்மாஸ்டர் ரூம். அங்கே போங்க” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே வகுப்பறையினுள் சலசலப்பு எழ, வகுப்பறையின் உள்ளே திரும்பி, ``லேய் எவம்ல கத்துனது..?” என்று அவர் கத்த, வகுப்பு சட்டென அமைதியானது.

விஜயா, ரவியின் கையைப் பற்றிக்கொண்டு, அவர் கூறியதைப்போல அந்தக் கட்டடத்தின் ஒரு முனைக்கு நடந்தாள்.

``இந்தக் கட்டடத்தோட முடிவுலதான ஏணிப்படி இருக்குதுன்னு சொன்னாவ” என்று தனக்குள்ளேயே முணகியபடி விஜயா ஏணிப்படியைத் தேடிக்கொண்டிருக்க, ரவியோ ‘இந்த ஸ்கூல்லதான் வெளையாடுறதுக்கு எவ்ளோ கிரவுண்ட் இருக்கு’ என்று நினைத்துக்கொண்டிருந்தான்.

அந்தச் சடை முடிவைத்திருந்த ஆசிரியர் சொன்னதைப்போலவே அந்தக் கட்டடத்தின் இறுதியில், தன்னை இதுவரை எவருமே பூட்டியதில்லை என்பதைப்போல அகலத் திறந்திருந்த கதவும், அதன் பின்னணியில் மரத்தாலான கைப்பிடியைக்கொண்ட மரப்படிக்கட்டும் தெரிந்தன.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

விஜயாவின் இதயம் சுருதியின்றித் துடிக்க, ரவியின் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்.

மரத்தாலான அந்தப் படிக்கட்டில் அவள் வைத்த ஒவ்வோர் அடியும் அந்த அறையெங்கும் எதிரொலித்தது. அதனால் முடிந்த வரையில் கால்களை அழுத்திவைத்து நடந்து பார்த்தாள். அப்போதும் படியிலிருந்து எழுந்த சத்தம் அங்கிருந்த அமைதியைக் குலைத்தது.

*****************

சொத்தவிளை கடற்கரையில் கையில் சாராயக் குப்பியோடு வந்த இருவர், ரகசியமாக அமர்ந்து பேசத் தோதான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டார்கள்.

கையோடு கொண்டுவந்திருந்த கிளாஸில் ஆளுக்கு ஒரு கிளாஸ் சாராயத்தைக் குடிக்கும் வரையிலும் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

முதலில் கிளாஸைக் கீழே வைத்தவன், பிரித்துவைத்திருந்த தடை ஊறுகாய்ச் சாற்றில் விரல்தொட்டு நாக்கில் தடவிக்கொண்டான்.

``இந்த தடவை நம்மட்டருந்து அவென் கண்டிப்பா தப்பிக்கக் கூடாது மாப்புள.”

இரண்டாமவன் பதில் எதுவும் பேசாமல், ஊறுகாயில் இருந்த மிளகாயை எடுத்து வாயில் போட்டு மென்றான். உப்பும் புளிப்பும் ஏறிய பச்சைமிளகாயின் காரம் அவனுடைய தலை வரைக்கும் ஏறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``என்ன சொன்ன மாப்புள?” எகத்தாளக் குரலில் கேட்டான் இரண்டாமவன்.

``உனக்கு எல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்தே நொட்டனுமாக்கும்?” சலிப்போடு பேசிய முதலாமவன், ``போன தடவை மிஸ்ஸான மாரி இந்த தடவை அவன் மிஸ்ஸாகிடக் கூடாதுன்னு சொன்னேன்.”

``போன தடவை எங்க மிஸ்ஸாச்சு… ஒருத்தனுக்க பதிலா இன்னொருத்தன் வந்து மாட்டுனான். சுறாவுக்கு வெச்ச குறி பிள்ளச்சுறாவப் போய்த் தாக்கிடுச்சு.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

மொத்ததுல ஒரு சுறா காலியாகத்தான செய்துச்சு. சும்மா மிஸ்ஸாயிட்டு மிஸ்ஸாயிட்டுன்னு புலம்பிட்டு இருக்க?”

``ஒனக்கு எல்லா எளவும் வெளையாட்டா போச்சு” பேசியபடியே இயல்பாக கட்டியிருந்த லுங்கியைச் சரிசெய்து கொள்வதைப்போல எழுந்தவன், அந்த இடத்தை ஒரு சுற்றுப் பார்த்துக்கொண்டான்.

``கூயுள்ள ஏமுல இப்டி பயந்து சாவுத..? இங்கே இந்த நேரத்துல உன்னயும் என்னயும் தாண்டி எவனும் வர மாட்டான். பேசாம உக்காந்து குடில.”

இரண்டாமவன் எரிச்சலோடு சொல்லவும், முதலாமவன் லுங்கியை ஓர் உதறு உதறிவிட்டு மீண்டும் கடற்கரை மணலில் அமர்ந்துகொண்டான்.

``எப்பயுமே எச்சரிக்கையா இருக்கது நல்லதுதானலே. அவனுக்கெ ஆளுவோ எங்கெனக்குள்ள எல்லாம் இருப்பானுவன்னு எவனுக்குமே தெரியாதுல.”

லுங்கியின் இடுப்பு மடிப்பிலிருந்து சிசர் ப்ளைன் சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான் இரண்டாமவன்.

``இந்த நேரம் பார்த்து இந்தப் பாலராஜு வேற உள்ளே போய் உக்காந்துக்கிட்டான்.” முதலாமவன் சலிப்போடு சொல்லிக்கொண்டான்.

``அவனாலதான போன தடவை மிஸ்ஸாச்சு” சிகரெட்டின் புகையை ஆழமாக உள்ளிழுத்து வெளியே ஊதித் தள்ளினான்.

``என்னதான் சொல்லு... அவனெ மாரி வேவு பார்க்க எவனுக்கும் முடியாது.”

``அவென் உள்ள போயி எவ்ளோ நாளாச்சு?”

``மாரழி பத்துக்கு போனான்னு நெனைக்கேன். தைமாசமின்ன வெச்சுகிட்டாலும், மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனின்னு அஞ்சு மாசத்துக்கும் மேலாச்சு. ஏனோ?”

``இல்ல ஜாமீன்ல அவனெ வெளிய கொண்டரலாம்னுதான் கேட்டேன்.”

``கொண்டாரது எல்லாம் செரி. வெளிய வந்தப்பறமா நமக்கு வேவு வேல பார்ப்பானா?”

``பார்ப்பான்.” இடது கையால் கோப்பையைப் பற்றி, கண்களுக்கு நேராகத் தூக்கி அதில் சாராயத்தை விட்டுக்கொண்டான் இரண்டாமவன்.

``எனக்கென்னமோ கொஞ்ச சந்தேகமாத்தான் இருக்கு” என்று இழுத்தான் முதலாமவன்.

``ஏம்டே. மொதல்ல நீதா அவனுக்குச் சப்போட்டு பண்ணின. இப்ப நீயே ஒதுங்கிப் பின்வாங்குற. ஒனக்கு என்னதான் பிரச்னை?”

``அதெல்லாம் ஒண்ணுமில்லடே. அவன் வேவு பார்த்தான்னாக்க சூப்பரு. ஒருவேள அவன் மாட்டேன்னு சொல்லிப்புட்டான்னா… அதான் என்ன பண்றதுன்னு கேட்டேன்.” சொல்லி முடித்ததும் அவசர அவசரமாக, ``இது பயமெல்லாம் இல்லை. ஒரு எச்சரிக்கதான்.”

இரண்டாமவன் அமைதியாகப் புகைத்தபடியே அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

``எனக்கொரு யோசன வருது சொல்லவா?” என்றான் இரண்டாமவன்.

``என்ன?”

``மூத்தப்பா மூத்தப்பான்னு ஒரு சின்னப்பய... அதான் அந்தத் தங்கசாமியோட பய... அவம் பின்னாடியேதான சுத்திக்கிட்டு இருக்கான். அவனெ நாம ஏன் வேவு பார்க்கப் பயன்படுத்திக்கக் கூடாது..?”

``யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவெம்தான் சின்னப்பயலாச்சே?”

``அவெனுவதான் பார்த்ததை அப்படியே வந்து நம்மகிட்ட சொல்லுவானுவ. அதுவுமில்லாம இந்த பால்ராஜை வெளிய கொண்டு வரணுமின்னா அதுக்கு வேற செலவு பண்ணணும்.”

``நீ சொல்லுகதும் சரிதான்” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் அமர்ந்திருந்த புதரின் மறுபக்கம் சரசரவெனச் சத்தம் கேட்க, சட்டென இருவரும் தங்களுடைய இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை உருவி எடுத்தபடியே எழுந்தனர்.

ன்னைவைத்து ஒரு சதித்திட்டம் போடப்படுவதை அறியாத ரவியோ, விஜயாவோடு எஸ்.எல்.பி பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

(திமிறுவான்...)