Published:Updated:

ஊசிப்புட்டான்: `எங்கப்பனைக் கொன்னவனோட ரத்தம்’ | அத்தியாயம் - 14

ஊசிப்புட்டான்
News
ஊசிப்புட்டான்

ரவியின் உடலில் ஒரு பதற்றம் தோன்றினாலும், அப்பாவைக் கொன்றவன் இறந்துகிடக்கும் கோலத்தைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது.

``என்ன மக்கா எஸெல்பி பள்ளியோடத்துல அட்மிசன் கெடச்சுடுச்சா?” முகம் முழுக்க சந்தோஷத்தோடு கடைக்கு வந்த ரவியைப் பார்த்துச் சின்னத்தம்பி கேட்டான்.

``ஆமாண்ணே... ஒருவழியா கெடச்சுடுச்சு” என்று சந்தோஷமாக பதிலளித்த ரவியைப் பொறுத்தவரையில் அன்றைய தினம் பள்ளியில் அவன் பார்த்த விஷயங்களை, அங்கு நடந்த விஷயங்களை, அந்தப் பள்ளியில் சீட் கிடைத்துவிட்ட அவனது சந்தோஷத்தை யாருடனாவது பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் இருந்தான்.

``பள்ளியோடம் எப்டிடே?” என்று ஆர்வமாகக் கேட்ட சின்னத்தம்பிக்கு ரவி பதில் சொல்லும் முன்னமே, அதன் தொடர்ச்சியாக, ``அந்தப் பள்ளியோடத்த வெளியருந்து பாத்ததோட சரி” என்கிற அங்கலாய்ப்போடு முடித்த சின்னத்தம்பியைப் பார்த்து, ``ஏம்ணே?” எனக் கேட்ட ரவியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான் சின்னத்தம்பி. பின்னர், ``சாயங்கால வாக்கிங்க்கு வரவனுவோ பாக்கெட்டுல பணத்தோடயா வருவானுவ? போட்டுருக்க நிக்கர்ல பத்து ரூவாய்க்கு சில்லறையப் போட்டுக் கொண்டு வருவானுவ. அந்தச் சில்லறைய அடிச்சு நான் என்ன பண்ணுறதாம். அதான் அப்டியே வெளியருந்து பாத்துட்டுப் போயிடுவேன்.”

`ஓ...’ என்று சப்தம் வராமல் வாய் மட்டும் குவித்து தலையை ஆட்டிக்கொண்டான் ரவி.

``என்னடே இப்ப சந்தோசமா..? ஒருவழியா இந்தப் பள்ளியோடத்துலருந்து தப்பிச்சிட்ட. இனியாச்சும் ஒழுங்கா பள்ளியோடத்துக்கு போவதான?”

ஆமோதிப்பதைப்போலத் தலையாட்டினான் ரவி.

``ஆமா... ஸ்கூலு எப்பிடி இருந்ததுன்னு சொல்லவே இல்லியே நீ. சரீய... மொதோ நாளு பள்ளியோடம் எப்டிடே இருந்தது..?” ஆர்வம் பொங்கக் கேட்ட சின்னத்தம்பியை, கண்கள் அகல, ``எவ்ளோ பெரிய ஸ்கூலு தெரியுமாண்ணே... ரெண்டு ஃபுட்பாலு கிரவுண்ட், ரெண்டு பாஸ்கட்பால் கிரவுண்டுன்னு ஸ்கூலுக்குள்ளயே அஞ்சாறு கிரவுண்ட் இருக்குண்ணே.”

``ஸ்கூலுக்குள்ள ஃபுல்லா நெறைய மரமும் செடியுமா இருந்ததுண்ணே. மரப்பொந்து முழுக்க ஏகப்பட்ட கிளி இருக்கும்போல, ஒரே கிளிச் சத்தமா இருந்துச்சு. உள்ள போகுறப்பவே ஒரு கிளியாச்சும் கண்ணுல மாட்டிச்சுன்னா இந்த ஸ்கூல்ல சீட்டு கன்ஃபர்ம்னு நினைச்சுட்டே போனேனா… ஒரு கிளி இல்லண்ணே... ஒரு ஜோடிக் கிளியவே பார்த்தேன். உடம்பெல்லாம் பச்சையா, மூக்கு மட்டும் செவப்பா எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா…”

``ஒரு பச்சைக்கிளிய பார்த்ததுக்கா மக்கா இந்தக் குதியாட்டம் போடுற?” புன்னகைத்தான் சின்னத்தம்பி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``இல்லண்ணே... அந்த ஸ்கூலுக்குள்ள வந்து பாத்துருக்கணும் நீங்க. இங்க நாம பறந்து போறதைத்தான பாத்துருக்கோம். ஆனா அங்க அப்படியில்லண்ணே. கூடுகட்டி வாழுது.”

``என்ன மக்கா பள்ளியோடத்துல என்ன நடந்ததுன்னு கேட்டா நீ இருந்துட்டு அங்க பார்த்த கிளிய பத்திக் கதெ சொல்லிட்டு இருக்க...”

சின்னத்தம்பி சலிப்போடு பதிலளித்தான்.

``அம்மெக்கி அந்த ஸ்கூலுக்குள்ள போனதுமே பயம் வந்துடுச்சு. என் கையெ இறுக்கமா பிடிச்சுக்கிட்டாவ.”

``ம்ம்ம்...”

``ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போனமா, அப்ப அவரு அங்க இல்லை. ரவுண்டுக்குப் போயிட்டதா அங்கருந்த ப்யூனு சொன்னாவ. சரின்னு சொல்லிட்டு நானும் அம்மெயும் அவரு ரூம் வாசல்ல போட்டுருந்த பெஞ்ச்ல உக்காந்திருந்தோமா...”

``செரி...”

``நானும் நாங்க வந்த வழியிலதான் ஹெட்மாஸ்டரு வருவாருன்னு நினைச்சுக்கிட்டு நாங்க வந்த வழியவே பார்த்துட்டு உக்காந்திருந்தேன். திடீர்னு பார்த்தா எங்க கூடவே அங்க உக்காந்திருந்தவக எல்லாரும் எந்திரிச்சு நிக்காவ. எதுக்கு எல்லாவளும் எந்திக்காவன்னு சுத்திச் சுத்தி பாக்குதேன். எம்முன்னால ஒருத்தர் விஜயகாந்து மாதிரி நல்லா செவசெவன்னு செவந்த கண்ணோடயும், நல்லா முறுக்கிவிட்ட மீசையோடயும் நிக்காரு.”

``அவருதான் ஹெட்மாஸ்டரா...?” சின்னத்தம்பி ஆர்வம் பொங்கக் கேட்டான்.

``ஆமாண்ணே. அவருதான் ஹெட்மாஸ்டரு. எந்த வழியா வந்தாருன்னே தெரியலே. என்னைப் பார்த்து `அட்மிஷனுக்காக வந்திருக்கியா?’ன்னு கேட்டாரு. நானும் `ஆமா’ன்னு சொன்னேன்.

`ஹெட்மாஸ்டரு வந்தா எந்திரிச்சு நிக்கத் தெரியாதா?’ன்னு கேட்டாரு.

ஐயோ இவருதா ஹெட்மாஸ்டரான்னு நினைச்சுக்கிட்டு நான் எந்திக்கதுக்கு முன்னாடியே அம்மெ என் தோளைப் பிடிச்சு எழுப்பிவிட்டுட்டாங்க. அவரு அப்படியே என்னையப் பாத்து மொறைக்குதாரு. இவருதான் ஹெட்மாஸ்டருன்னு நானென்ன கனவா கண்டேன்.” சொல்லிவிட்டு ரவி சிரிக்கவும், ``ஆமா ஒனக்கென்ன சோசியமா தெரியும்” என்று சின்னத்தம்பியும் அவனோடு சேர்ந்து சிரித்தான்.

``ஆனாலும் அவரு செம மெரட்டலா இருந்தாருண்ணே. அவரோட கொரலுகூட ஒரு மாதிரி கொறகொறன்னுதான் இருந்துச்சு.”

``அப்புற என்னாச்சுடே?”

``கொஞ்ச நேரத்துல உள்ள கூப்டாங்களா, நானும் அம்மெயும் உள்ள போனோம். நல்ல ஒரு பெரிய மேசக்கிப் பின்னாடி அவரு உக்காந்திருந்தாரு. அம்மெகிட்ட உக்காரச் சொன்னாரு. அம்மெ தயங்கிட்டே சேர்ல உக்காந்ததும், நானும் முன்னாடி போனேனா… `பையன் நிக்கட்டும்’னு சொல்லிட்டாரு.”

``ம்ம்ம்...”

``எங்கையில இருந்த டி.சி-ய வாங்கி அவர்கிட்ட அம்மெ கொடுத்தாங்க. நான் அவரு முன்ன கெடந்த மேசைல கைய ஊனிக்கிட்டே அவரு ரூமைப் பார்த்துட்டே இருந்தேன். அவரு ரூம்ல ஒரு பெரிய ஜன்னல் ஒண்ணு இருக்குண்ணே. அந்த ஜன்னல் வழியா வெளியே தெரியுற மரத்தை, கிரவுண்டை, ஸ்கூல் முன்னாடி போற ரோட்டையெல்லாம் பாக்கலாம். நானும் அப்படிப் பாத்துட்டே இருந்தேனா…

டக்குன்னு அவரு தாளம் போடுறதை நிறுத்திட்டு, `மேசைலருந்து கைய எடு’ன்னு ஒரு கத்து கத்தினாரு.

ஒரு நிமிஷம் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுடுச்சுண்ணே.”

``ஏம்மக்கா அவருக்க மேசையில நீ தாளம் போட்டுட்டா இருந்த..?” சின்னத்தம்பி கேட்டான்.

``தாளம் போட்டேனான்னு எல்லாம் எனக்குத் தெரியலண்ணே. ஆனா மேசைல கையை மட்டும்வெச்சிருந்தேன். அது மட்டும் தெரியும்.”

``அப்புறமா என்ன நெனைச்சாருன்னு தெரியலை. என்னய வெளிய போவ சொல்லிட்டாரு. நானும் வெளிய வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல அம்மெயும் வெளிய வந்தாவ, வந்துட்டு இன்னிக்கு மட்டும் காக்கி வெள்ள யூனிஃபார்ம்ல வந்திருந்தேன்னா இப்பவே உன்னய கிளாஸுக்குப் போவ சொல்லியிருப்பாருன்னு சொன்னாவ.”

``மத்த பள்ளியோடத்துலல்லாம் சீட் கெடைக்காதது இந்தப் பள்ளியோடத்துல கெடைக்கதுக்குத்தானோ என்னமோ… எல்லாம் போட்டும்டே இனிமேயாச்சும் ஒழுங்கா பள்ளியோடத்துக்கு போயி படிக்க்கணும் செரியா?”

சரி என்பதைப்போல ரவி தலையாட்டினான்.

``செரி நாளேலருந்துதான பள்ளியோடத்துக்குப் போவணும்... இப்ப சொத்தவெள வரப் போயிட்டு வருவோமா” எனச் சின்னத்தம்பி கேட்கவும், ரவியும் சரியென்று தலையை ஆட்டினான் வரப்போகும் ஆபத்தை அறியாமல்.

*************

``பெரியவனுக்கு ஒருவழியா அட்மிசன் கெடைச்சுடுச்சுபோல” என்று கேட்ட தங்கத்தைக் குழப்பம் நிரம்பிய கண்களோடு பார்த்தாள் விஜயா.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``அதெ ஏங்க்கா கேக்கிற...” விஜயாவின் அந்த பதில் தங்கத்தை அவள் அருகில் உட்காரவைத்தது.

``ஏங்க்கா இப்பிடி சலிச்சுக்கிறே?” என்று பேச்சை ஆரம்பித்தாள் தங்கம்.

``பின்ன என்னக்கா, எனக்குச் சின்னவனப் பத்திகூடக் கவலையில்லை. இவனெ நெனச்சாதான் கவலையா இருக்கு.”

``கொஞ்ச புரியும்படியாத்தான் சொல்லேங்க்கா...”

``ஏற்கெனவே மூணு பள்ளியோடத்துல அட்மிஷன் தர முடியாதுன்னு சொன்னதுக்கு அப்புறமாத்தான் இந்தப் பள்ளியோடத்துக்கே போயிருக்கோம். அந்த வடவருத்தம் கொஞ்சங்கூட இல்லாம, ஹெட்மாஸ்டரு ரூம் முன்னாடி உக்காந்திருக்கோம். ஹெட்மாஸ்டரு வாறாரு. அவருதான் ஹெட்மாஸ்டருன்னு எனக்கும் தெரியாதுதான். ஆனா எங்க கூடவே அங்கே உக்காந்திருந்த எல்லாரும் எந்திரிச்சதும் நானும் எந்திரிச்சி நின்னுட்டேன். இவென் என்னடான்னா அப்படியே ஹாயா உக்காந்தே இருக்கான். `ஹெட்மாஸ்டரு வர்றப்ப எந்திரிச்சி நிக்க மாட்டியா?’ன்னு சத்தம் போட்டுட்டு உள்ள போயிட்டாரு. அப்புறமா உள்ள கூப்பிட்டாங்கன்னு உள்ள போய் நின்னா, அவரு மேசையிலயே தாளம் போட்டுட்டு இருக்கான். `ரூமைவிட்டு வெளிய போல’ன்னு கத்திட்டாரு.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அப்படியாக்கா கத்தினாரு” தங்கத்தின் வாய் அகலமாகத் திறந்திருக்கக் கண்டு, ``அப்படிக் கத்தலை, ஆனா `வெளியே போயி நில்லு’ன்னு அவனை வெளிய அனுப்பிட்டாரு. நானும் இந்தப் பயலுக்கு படிப்பு அவ்வளவுதான்னு முடிவே பண்ணிட்டேன். ஆனா அவரு தங்கமான மனுஷங்க்கா.”

``ஏங்க்கா அப்படி சொல்லுக?”

`` `இந்தப் பள்ளியோடத்துலருந்து வாங்கிட்டுப் போயிருந்த சர்டிஃபிகேட்டை கொஞ்ச நேரமா பார்த்துட்டு, இங்கே வர்றதுக்கு முன்ன வேற ஏதாச்சும் பள்ளியோடத்துக்குப் போனீங்களா?’ன்னு கேட்டாரு.

`இல்லை’ன்னு பொய் சொல்ல வார்த்தை வாய் வரைக்கும் வந்துடுச்சு. ஆனா `ஆமா’ன்னு உண்மையைச் சொல்லிட்டேன்.”

``ஏங்க்கா உண்மையைச் சொன்ன…? எல்லா ஸ்கூலுக்கும் போயிட்டு சீட் கெடைக்காமதான் இங்கே வந்திருக்காங்கன்னு தப்பா நெனைச்சிருப்பாருல்ல...”

``நானும் அப்படித்தான் நெனச்சிருப்பாருன்னு நெனச்சிட்டு இருந்தேங்க்கா. ஆனா அவரு அப்படி நெனைக்கலை. என்கிட்ட `அவங்கல்லாம் ஏன் அட்மிசன் தரலைன்னு ஏதும் சொன்னாங்களா?’ன்னு கேட்டாரு. `இல்லை சார். எங்கிட்ட அவங்க எதுவுமே சொல்லலை. எனக்குத் தெரியாது’ன்னு சொன்னப்பவே எங்கண்ணுல தண்ணி கட்டிட்டு. அவருதான் சொன்னாரு. `உங்க பையன் படிச்ச பழைய பள்ளியோடத்துல

இனி அவென் எங்கேயுமே போய்ப் படிச்சிரக் கூடாதுன்னு சொல்லி டி.சி-யில ஏதோ எழுதிவெச்சிருக்கிறதா சொன்னாரு.”

``டி.சி-யிலயா… எதுல கான்டக்ட்லயா?”

``ஆமாக்கா... அந்த மாதிரிதான் ஏதோ சொன்னாரு. பையன் நடத்தெ சரி கெடயாதுன்னு டி.சி-யில எழுதியிருக்காங்களாம். எனக்க கண்ணுல இருந்து தண்ணியா கொட்டுது. `சார் அப்பா இல்லாத பையன். அதனால அவென் இப்ப இங்க நடந்துகிட்டதை எல்லாம்வெச்சு அவனெ எடை போட்டுடாதீங்க’ன்னு நான் அழுவுறேன்.

அவுரு என்னடான்னாக்க `எட்டாங்கிளாஸ் படிக்கிற பையனுக்க நடத்தெயில இவனுவ என்ன கொறைய கண்டுபிடிச்சானுங்கன்னு தெரியலை’ன்னு சொல்லிட்டு,

பையனுக்கு யூனிஃபார்ம் போட்டுக் கூட்டிட்டு வந்திருந்தீங்கன்னா இப்பவே கிளாஸ்ல சேர்க்கச் சொல்லியிருப்பேன். சரி நாளைக்கு அவனெ வந்து கிளாஸ்ல சேந்துக்கச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு. எனக்கு நம்பவே முடியலை. வெளிய வந்து பார்த்தா இவென் பராக்குப் பாத்துட்டு உக்காந்திருக்கான்.”

``இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்க்கா. தைரியமா இருங்க.”

**************

சொத்தவிளைக்குச் செல்லும் வழியில் சின்னத்தம்பியும் ரவியும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

``சொத்தவெளயில என்னண்ணே?” ரவி கேட்டான்

``ஒருத்தனை வெட்டிட்டானுவளாம்” எந்தவொருவிதமான சுரத்துமின்றி சின்னத்தம்பியிடமிருந்து பதில் வந்தது.

``என்னது கொலையா?” ஸ்தம்பித்துப் போய் நின்ற ரவியைப் பார்த்த சின்னத்தம்பி, ``உன் மூப்புல கொன்னதுல ஒருத்தனத்தான் கொன்னுருக்கானுவ” என்றான்.

ரவியின் உடலில் ஒரு பதற்றம் தோன்றினாலும், அப்பாவைக் கொன்றவன் இறந்துகிடக்கும் கோலத்தைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``வெட்டினது யாராம்ணே/”

`அது தெரியல மக்கா.”

அவர்கள் இருவரும் பேசியபடியே சொத்தவிளையை நெருங்குகையில் கறுப்பு நிற மேட்டடார் வண்டியொன்று அங்கிருந்து வெளியேறியது.

``ம்ம்ம்... ப்ச், இந்த நொண்டிக்காலைவெச்சுக்கிட்டு கிந்திக் கிந்தி நான் வர்றது வரைக்கும் வெச்சிருப்பானுவளாக்கும்” தனக்குத் தானே பேசிக்கொண்டு கருஞ்சிவப்பு நிறக் குருதியில் ஊறிய மண் அருகில் வந்து நின்ற சின்னத்தம்பியின் பின்னேயே ரவியும் வந்து நின்றான்.

சின்னத்தம்பி குருதி தோய்ந்த மண்ணை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, ரவியோ குனிந்து அந்த மண்ணைக் கையில் எடுத்துப் பார்த்தான்.

மணலில் கலந்திருந்த குருதி அவன் மனதிலும் கலக்க ஆரம்பித்தது.

`எங்கப்பனைக் கொன்னவனோட ரத்தம்.’

(திமிறுவான்...)