Published:Updated:

ஊசிப்புட்டான் | `முத்துலிங்கத்தைத் தெரியுமான்னு கேட்டா, தெரியாதுன்னு சொல்லிடு" | அத்தியாயம் 16

ஊசிப்புட்டான்
News
ஊசிப்புட்டான்

``நீ சின்னப் பையன் ரவி. உன்னையவெச்சு காய்நவர்த்த இங்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கானுவ. அதனால உங்கிட்ட வந்து எவனாச்சும் அண்ணாச்சியத் தெரியுமா... முத்துலிங்கத்தைத் தெரியுமான்னெல்லாம் கேட்டானுவன்னா தெரியாதுன்னே சொல்லிடு செரியா?”

``என்ன மக்கா பள்ளியோடத்துக்கு எல்லாம் ஒழுங்கா போக ஆரம்பிச்சிட்டபோல...” ரவி கடைக்கு வந்ததுமே சின்னத்தம்பி அவனைச் சந்தோஷமாக வரவேற்றான்.

``ஆமாண்ணே” ரவியிடமும் அதே சந்தோஷம் பிரதிபலித்தது.

``பள்ளியோடத்துல அட்மிசனை முடிச்சுட்டு வந்தன்னிக்கு பாத்தது. ஹும்ம்ம்” என்று பெருமூச்சோடு சின்னத்தம்பி சொல்ல, ரவிக்கோ அன்றைய தினம் அவன் பார்த்த ரத்தம் தோய்ந்த மணலின் மணத்தை மூளை உணர்த்தியது. ஒரு நொடி கண்களை மூடி அந்த மணத்தை அப்படியே நாசியால் உள்ளிழுத்துக்கொண்டான்.

``மக்கா... நான் இப்டி சொல்ட்டேங்கறதுக்காக முன்ன மாதிரியே மறுபடியும் இங்க வர ஆரம்பிச்சிடாதடேய். அப்பப்போ நேரங் கெடைக்கிறப்ப மட்டும் வந்தா போதும்” என்றான் சின்னத்தம்பி.

ரத்தத்தின் மணத்தை தனக்குள்ளேயே உணர்ந்துகொண்டிருந்த ரவி மெதுவாகக் கண்களைத் திறந்து சின்னத்தம்பியைப் பார்த்தான்.

``ஏம்மக்கா அப்படி பாக்குத?” அவன் பார்வை எப்போதும்போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சின்னத்தம்பி எச்சரிக்கையோடு கேட்டான்.

``ஒண்ணுமில்லண்ணே. அன்னிக்கு நான் வந்தப்ப சொத்தவெளக்கி கூட்டிட்டுப் போனியல்ல..?”

``ஆமா. அதுக்கென்ன?”

``அவங்களை யாரு கொன்னதுன்னு தெரிஞ்சுதா?” கண்களில் ஆர்வம் பொங்கக் கேட்ட ரவியை வெறுமையோடு பார்த்தான் சின்னத்தம்பி.

``அதெ தெரிஞ்சுட்டு என்னடே பண்ணப் போற... ஒழுங்கா படிக்கிற வேலயை மட்டும் பாரு” சின்னத்தம்பியிடமிருந்து வெடுக்கென்று பதில் வந்தது. ரவி, சின்னத்தம்பியின் குணம் அறிந்தவன் என்பதால், அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், ``சொல்லுண்ணே” என்றான் மீண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``தெரியலடேய்” ரவிக்கு முதுகைக் காட்டியபடி பதிலளித்தான் சின்னத்தம்பி.

``ஒங்களுக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டிங்குதிய. சரி பரவால்ல” என்று எழுதந்தவன் கடையின் முன்பிருந்த கடலைமிட்டாய் பாட்டிலைத் திறந்து ஒரு கடலை மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.

``அண்ணே ஒரு கடலை மிட்டாய எடுத்துக்கிட்டேன்.”

“ஒனக்கில்லாததா… எடுத்துக்கடேய்” என்று இயல்புக்கு வந்த சின்னத்தம்பி, ``ஆமா பள்ளியோட வாழ்க்கை எப்படிடே போவுது?” என்றான்.

``அது ஒருவாக்குல போவுதுண்ணே.” கடலை மிட்டாயை வாயில் போட்டு அதக்கியபடியே பேசினான் ரவி.

``ஏம்மக்கா இப்படிச் சொல்லுத? ஆமா இங்கருந்த வாத்தியானுவள மாதிரி அங்கயும் தொல்ல பண்றானுவளா? கூடப் படிக்கிற பயலுவவெல்லாம் எப்படி நடந்துக்கானுவ?” என்று ஆர்வத்தோடு சின்னத்தம்பி கேட்க, ``இங்கருந்த வாத்தியானுவ மாதிரியெல்லாம் அங்க இல்லண்ணே. இங்கருக்கவனுவ வாத்தியானுவ மாதிரியா நடந்துகிட்டானுவ?” ரவியின் குரலில் சலிப்புடன்கூடிய கோபமும் நிறைந்திருந்தது.

``இவனுவ கெடக்கானுவ மக்கா. இவனுவள போச் சொல்லு. அங்க எப்படி இருக்கானுவன்னு நீ சொல்லவே இல்லை.”

``இங்க மாதிரியில்லாம அங்க ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியானுவளைப் போட்டிருக்கானுவண்ணே. அந்த ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ரகமா இருக்குதுவ” குரல் சலிப்போடு வெளிவந்ததைப்போல இருந்தாலும், ரவியிடம் தன் பள்ளியைப் பற்றிப் பகிரும் ஆர்வம் தூக்கலாக இருப்பதை சின்னத்தம்பியும் கவனிக்கவே செய்தான்.

``விஜிலான்னு ஒரு மிஸ்ஸு இருக்காவ கேட்டியளா... சயின்ஸ் பாடம் எடுக்குதாவ. எப்பப் பாத்தாலும் உர்ருன்னே இருப்பாவ. ரெண்டு நா முன்ன ஒருத்தன் கிளாஸுக்குள்ள கூவுனான்னு சொல்லிட்டு பெரம்பெடுத்து அடியோ அடின்னு அடிச்சிட்டா.”

``டீச்சரு கூட அடிப்பாவளா..!” சின்னத்தம்பி வாயைப் பிளந்து கேள்வியைக் கேட்டான்.

``என்னது அடிப்பாவளான்னா கேட்டீங்க. அன்னிக்கு அவனை அடிச்ச அடியில பெரம்பு நார் நாரா கிழிஞ்சேபோச்சு” என்று ரவி சொல்ல, ``என்ன மக்கா சொல்லுத?” ஆச்சர்யமும் அதிர்ச்சியும் நிறைந்த குரலில் சின்னத்தம்பி திருப்பிக் கேட்டான்.

``அட ஆமாண்ணே. அருவத்தி ரெண்டு அடிண்ணே. கை மாத்தி கை மாத்தி வாங்கினான். அடுத்த நாளு அவன் கிளாஸுக்கு வந்தப்ப கையி ரெண்டும் வீங்கிப்போயிருந்துச்சு. இதுல இன்னொரு தமாசு என்னன்னு தெரியுமாண்ணே...” சொல்லிக்கொண்டிருந்த கதையை ஒரு நொடி நிறுத்தி, சின்னத்தம்பியைப் பார்த்தான் ரவி.

சின்னத்தம்பியின் கண்களில் என்ன என்பதைப்போல ஆர்வம் பொங்கி இருப்பதைப் பார்த்ததும், ரவியின் மனம்,

``குமாரு கதெ சொல்றப்ப நம்ம கண்ணும் இப்படித்தான இருந்திருக்கும்’’ என நினைத்துக்கொண்டது.

கூடவே `பரவால்லயே நமக்குங்கூடச் சுவாரசியமா கதெ சொல்ல வரத்தாஞ் செய்யுது’ என்று பெருமைப்பட்டுக்கொண்டது.

``என்ன தமாசுடே?” ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்ட சின்னத்தம்பியைப் பார்த்துப் புன்னகைத்தான் ரவி.

``அந்த மிஸ்ஸுக்க கையும் வீங்கிப் போயிடிச்சு. அடுத்த நாளு அடி வாங்குனவனும் சும்மா இருந்தான். அடி கொடுத்த டீச்சரும் சும்மா இருந்தாவ” ரவி சிரித்தான். ஆனால் சின்னத்தம்பியால் ரவியைப்போலச் சிரிக்க முடியாமல் உட்கார்ந்திருந்தான்.

``ஏம்ணே இப்படி இருக்க?” என்று கேட்ட ரவியைப் பார்த்து, ``இவ்ளோ அடாவடி டீச்சரா இருக்காளேன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான் சின்னத்தம்பி.

``ஆனா கிளாஸ் டீச்சருன்னு ஒரு குட்டச்சி இருக்காண்ணே.” ரவி சொல்லி முடிக்க, சின்னத்தம்பி அவனை ஏளனமாகப் பார்த்தான்.

``ஏம்ணே அப்படி பாக்குத” ரவி எதுவும் புரியாமல் கேட்க, ``இல்லை... நீ ரொம்ப ஒயரமோ?” என்றான் சின்னத்தம்பி.

ரவியின் முகம் வாடியது.

``சரி சரி... விடுடே விடுடே. நீ கதெயெச் சொல்லு. அந்தக் குட்டச்சியும் இவளை மாதிரி அடாவடிதானா?” ரவியை இயல்புக்குக் கொண்டுவரும் பொருட்டு சட்டென ஒரு கேள்வியைக் கேட்டான் சின்னத்தம்பி.

``இந்த விஜிலா மிஸ்ஸுக்க அளவுக்கெல்லாம் அடாவடி கெடயாது. ஆனாலும் அடிப்பாவ” சொல்லி நிறுத்தியவன், ``ஆனா ஒரு விசியம் தெரியுமாண்ணே... தப்பு பண்ணினது நான்தான்னு உண்மெய ஒத்துக்கிட்டாச்சுன்னா அடிக்க மாட்டாவ. மன்னிச்சி விட்டுடுவாவ” பெருமிதத்தோடு சின்னத்தம்பியின் கேள்விக்கு பதிலளித்துவிட்டு, அதைத் தொடர்ந்து, ``அப்புறமா இங்கிலீசு பாடத்துக்கு நல்லா இவ்ளோ பெருசுக்குக் கிருதாவெச்சுகிட்டு ('பெருசுக்கு' என்ற வார்த்தையைச் சொல்கையில் கை விரலால் காதின் கீழ் வரைவில் வைத்துக் காட்டினான்) பெருசா அடிக்க மாட்டாரு. ஆனா சிலிண்டரைக் கழத்தி கைல தந்து அனுப்பிடுவேன்னு மட்டும் சொல்வாரு” சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் ரவி.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``இப்படியெல்லாமாடே கிளாசுல சொல்லுறானுவ” எனக் கேட்டுவிட்டு, சின்னத்தம்பி வாய்விட்டுச் சிரித்தான்.

``வாத்தியானுவ இப்படின்னாகூடப் படிக்கனுவ இருக்கானுவளே...” என்று சொல்ல ஆரம்பித்தவன், சட்டென ஒரு நொடி நிதானித்தான். அவனுக்கும் சின்னத்தம்பிக்குமான வயதின் இடைவெளி அவன் மனதினுள் வந்து நிழலாடியது.

``அவனுவளுக்கு என்னடே?” ஆர்வம் தாளாமல் கேட்ட சின்னத்தம்பியிடம், “ஒண்ணுமில்லண்ணே” என்று படக்கென பதிலளித்தான் ரவி.

``சொல்றதுக்கு விருப்பமில்லன்னா விடுடே” என்று சட்டெனச் சின்னத்தம்பியும் பின்வாங்கினான்.

சின்னத்தம்பியின் இந்தப் பின்வாங்கல் ரவியை என்னவோ செய்தது. இருப்பினும், குமார் விஜிலாவை நடுநாயகமாக வைத்துச் சொல்லும் கதையைச் சின்னத்தம்பியிடம் பகிர ஏனோ அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

``நீங்களுந்தான் அந்தக் கொலைய யார் பண்ணாங்க, எதுக்கு பண்ணாங்கன்னு எங்கிட்ட சொல்லவே இல்லேல்ல” என்றான் ரவி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``படிக்கிற வயசுல ஒனக்கது தேவயில்லாத கதெ மக்கா” என்று சொல்லி நிறுத்திய சின்னத்தம்பி, ``அன்னிக்கு உன்னய அங்க கூட்டிட்டு போயிருந்திருக்கக் கூடாது” என்று முடித்தான்.

சின்னத்தம்பிக்கு எப்படி இவன் வகுப்பு மாணவர்களின் கதையை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததோ, அதே ஆர்வம் ரவிக்கு அன்றைய கொலையைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும் இருந்தது.

``என் அப்பாவக் கொன்னவனை யாரு கொன்னாங்கன்னு நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?” என்று கேட்டான் ரவி.

``அதெ தெரிஞ்சுக்கிட்டு நீயென்ன பண்ணப் போற?” சின்னத்தம்பியின் குரலில் ஒரு சொல்லுக்குக் கடுமை ஏறியிருந்ததை ரவியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

``கிளாஸுல குமாருன்னு ஒரு பையன் இருக்கான்ணே... அவனுக்குத் தெரியாத கதெயே இல்லை. இப்படித்தான் அன்னிக்கொரு நா முத்துலிங்கண்ணே யாரையோ ஒருத்தரைக் கொன்னு அந்தப் பொணத்தோட டேசன்ல போய் உக்காந்திருந்ததா ஒரு கதெ சொன்னான்” என்றான் ரவி.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

சின்னத்தம்பியின் முகம் அதிர்ச்சியால் நிறைந்தது.

``இங்கயும் என்னிய ஒருத்தனும் மதிக்க மாட்டுக்கானுவண்ணே. சின்னப்பய சின்னப்பயன்னே ஒதுக்குகானுவ. முத்துலிங்கண்ணனை எனக்கும் தெரியும்னு சொன்னா. `சும்மா கதெ விடாதல’ன்னு என்னையைப் பார்த்து கிண்டல் பண்ணுதானுவ” ரவியின் குரலில் நிஜமாகவே ஒரு வருத்தம் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.

``ஏம்மக்கா படிக்கப் போற எடத்துலயும் நீங்க இதெல்லாத்தையும்தான் பேசுவியளா?” என்று கேட்ட சின்னத்தம்பியின் குரலில் வருத்தம் வந்து சேர்ந்திருந்தது.

ரவி எதுவுமே பேசாதிருந்தான்.

``ஓன் நல்லதுக்கு ஒண்ணு சொல்லட்டா மக்கா” நிஜ அக்கறையோடு சின்னத்தம்பி கேட்க, சரியெனப் பொருள்படும்படியாகத் தலையை ஆட்டினான் ரவி.

``இனி யாருட்ட போயும் எனக்கு முத்துலிங்கத்தைத் தெரியும், பாண்டியண்ணாச்சியத் தெரியும்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காத செரியா?” என்றான் சின்னத்தம்பி.

ஏம்ணே என்று கேட்க வாய்வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் ரவி.

``நீ சின்னப் பையன் ரவி. உன்னையவெச்சு காய்நவர்த்த இங்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கானுவ. அதனால உங்கிட்ட வந்து எவனாச்சும் அண்ணாச்சியத் தெரியுமா... முத்துலிங்கத்தைத் தெரியுமான்னெல்லாம் கேட்டானுவன்னா தெரியாதுன்னே சொல்லிடு செரியா...” சின்னத்தம்பியின் குரலில் எச்சரிக்கை நிறைந்திருக்க, ரவி, ``ஏம்ணே அப்படி சொல்லுதிய” எனக் கேட்டான்.

``ஒன் ஃப்ரெண்ட் அவெம் பேரென்னா குமாரா சொன்ன?” சின்னத்தம்பி கேட்க, தலையை மேலும் கீழுமாக அசைத்தான் ரவி.

``அவெம் சொன்னதுல பாதி உண்மை பாதி பொய்யி” சின்னத்தம்பி சொல்லிக்கொண்டிருக்கையில், சின்னத்தம்பியின் கடையை நோக்கி ஒருவர் வருவது தெரிந்தது.

சின்னத்தம்பி பேச்சை நிறுத்தினான். ரவிக்கோ கடையை நோக்கி வருபவர்மீது ஆத்திரம் எழுந்தது.

வந்தவர் மாம்பட்டை ஒரு பாட்டில் வாங்கி அதை சர்பத் கோப்பையில் ஊற்றி ஒரே கல்பாகக் குடித்துவிட்டு, கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

``ஐட்டம் என்னிக்குள்ளதுடேய். ஒரு மாதிரி கடுப்பமா உள்ளுக்குள்ள எறங்குது” வந்தவர் கேட்க, ‘என்னிக்குள்ளதா இருந்தா ஒனக்கென்னல. குடிச்சாச்சுல்ல... பைசாவ கொடுத்துட்டு போகவேண்டியதானல’ என்று ரவியின் மனது மானசீகமாக வந்தவருக்கு பதிலளிக்க, சின்னத்தம்பியோ நிதானமாக, “எல்லாம் புது ஐட்டம்தாம்ணே. இன்னிக்கு காலேலதான் கொண்டு வந்து போட்டானுவ” என்று பதிலளித்தான்.

வந்தவர் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துகொள்ள, அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரவி.

``பையன் யாருடேய் புதுசா இருக்கான்?” வந்தவர் சின்னத்தம்பியைப் பார்த்துக் கேட்க, ``நம்ம தம்பிதாம்ணே. யெஸெல்பி பள்ளியோடத்துல படிக்குவான். இன்னிக்கு லீவுல்லா... அதான் இங்க வந்து சும்மா உக்காந்திருக்கான்” என்று அவருக்கு பதிலளிக்கும்போதே

ரவியைப் பார்த்து, `எதுவும் பேசாதே...’ என்பதைப்போலப் பார்வையால் சைகை காட்டினான் சின்னத்தம்பி.

நேரம் செல்லச் செல்ல ரவிக்கு அங்கேயே இருக்கவும் முடியாமல், எழுந்து செல்லவும் முடியாமல் தான் ஒரு சூடான தோசைக்கல்லின் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற பிரமை தோன்ற, ஏதேனும் ஒரு பொருள் கிடைத்தால் வந்தவரின் தலையை இரண்டாகப் பிளந்துவிடக்கூடிய அளவுக்கு அவனுள் கோபம் எழ, அவனுடைய கண்கள்  அவனிருந்த இடத்தின் அருகில் கைக்கு வாகாய் ஏதேனும் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தது.

கடைக்கு வந்தவரோ இது எதையும் அறியாதவராக மாம்பட்டையின் போதையைத் தக்கவைத்துக்கொள்ள பீடி ஒன்றைப் பற்ற வைத்து, புகையை வானம் பார்க்க ஊதினார்.

(திமிறுவான்..!)