Published:Updated:

ஊசிப்புட்டான் | `மண்டி போட்டவனை வெட்டுறதைவிட அவனை ஓடவிட்டு...’ | அத்தியாயம் - 17

ஊசிப்புட்டான்
News
ஊசிப்புட்டான்

``எப்பவுமே நாம எதுக்கு எதிரா நம்ம பலத்தைப் பயன்படுத்துறோமோ, அப்போ நம்ம எதிர்ல இருக்கிற அதுக்கும் பலம் அதிகமாகிட்டே வரும்.”

ரவி தன் முன்னே நிற்கும் இரண்டு நாய்களையும் மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டும் ஒரே அளவுடையவை. அநேகமாக இரண்டுக்கும் ஒரே வயதாக இருக்கலாம், இரண்டும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகக்கூட இருக்கலாம். ரத்தச் சிவப்பேறிப்போயிருந்த அந்த இரண்டு நாய்களின் கண்களிலும் கொலை வெறி. ஒற்றை நாயையே சமாளிக்கத் தெம்பில்லாத நம்மால் எப்படி இந்த இரண்டு நாய்களையும் சமாளிக்க முடியும்..? ரவி தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். பதற்றத்தில் அவனது கையும் காலும் மெலிதாக உதற ஆரம்பித்திருந்தன.

`இருட்ட ஆரம்பிச்ச அப்புறமா இந்தக் கொல்லவிளை பக்கமா வந்திருக்கக் கூடாது.’ அவனுடைய மனது அவனைக் கடிந்துகொண்டது. பழுத்த முந்திரிப்பழங்களின் நெடி அவனை ஒருவித கிறக்கத்துக்கு வேறு தள்ளியது. மீண்டும் அவன் முன்னே நின்றுகொண்டிருந்த நாய்களைப் பார்த்தான். ஒன்று உறுமல் சத்தம் ஏதுமின்றி வெறுமனே தன்னுடைய கோரைப் பற்களைக் காட்டியபடி நிற்க, மற்றொன்றோ அதன் வாயில் எச்சில் ஒழுக மேல்வரிசைப் பற்கள் மட்டுமல்லாமல் கீழ் வரிசையில் இருக்கும் கோரைப் பல்லையும் காட்டியபடி உறுமிக்கொண்டிருந்தது. `ஒரு பட்டிகிட்டருந்து தப்பிச்சிட்டாலும் இன்னொண்ணு கிட்டருந்து தப்பவே முடியாது.

ஏதானாலும் இன்னைக்கு நான் இந்தப் பட்டிங்க கிட்டருந்து கடி வாங்கத்தான் போறேன்’ யோசித்தபடியே ஓரடி பின்னெடுத்து வைத்தான்.

அந்த இரண்டு நாய்களும் ஓரடி முன்னெடுத்து வைத்தன. `இதுங்கட்டருந்து ஓடித் தப்பலாம்னா அதுவும் முடியாதுபோலருக்கே. இந்தப் பாதெல வந்ததே தப்பு. என்ன நெனப்புல இந்த எளவெடுத்த பாதிக்கி வந்தோம். ச்சை’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டவனின் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்தபடியே இருந்தது.

நொடி நொடியாக நேரம் கடந்தபடியே இருந்தது. ரவியும் அவ்விடத்தைவிட்டு நகராமல் அப்படியே நிற்க, பாதுகாப்பான தொலைவில் நின்றிருந்த அந்த நாய்களும் அதே இடத்தைத் தக்கவைத்தபடியே இருந்தன. பழுத்திருந்த முந்திரிப்பழங்களின் நெடி வேறு அவனை ஒருவித கிறக்கத்துக்குக் கொண்டு சென்றபடியே இருக்க, ரவி தன்னருகில் இருக்கும் மரத்தின் தூரம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்த்தான். கண்டிப்பாக நான்கு நொடியில் அடைந்துவிடும் தூரம்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

ஆனால், மீண்டும் அந்த நாய்களைப் பார்த்தான். அவற்றின் கண்களில் கருணை என்பது சிறிதும் தென்படவில்லை. சத்தமின்றி ஓர் அங்குலம் தன் காலைப் பின்னகர்த்தினான். அவனது குதிக்காலில் திடமான பொருளொன்று நசுங்கி, அதன் ஈரம் அவன் உள்ளங்கால் வரையிலும் படர்ந்தது. `ச்சை... இந்தப் பட்டியலோட பீய மிதிச்சிட்டேனா... இதுங்கட்டருந்து கடியை மட்டுமில்லை... பீ நாத்தத்தையும் வேற நான் சொமக்கணும்.’ ஆனால் அவன் நினைப்புக்கு மாறாக ஒரு புது மணம் அந்த இடத்தில் கமழ்ந்தது. `அப்ப நாம நாய்ப் பீய மிதிக்கலியா... நல்லவேளை தப்பிச்சுட்டோம்.’ முகத்தைத் திருப்பாமல் கண்ணை மட்டுமே அசைத்துத் தான் மிதித்தது எதையென்றுப் பார்த்தான்.

முந்திரிப்பழமொன்று அவன் காலின் கீழே நசுங்கிக் கிடந்தது தெரிந்தது. `கொல்லாம்பழத்தத்தான் மிதிச்சேனா’ அவனுள் ஓர் ஆசுவாசம் எழ, ‘கொல்லாம்பழத்த மிதிச்சிருந்தோம்னா கண்டிப்பா கொல்லாங்கொட்டை அது பக்கத்துல கெடக்கும்ல! கொல்லாங்கொட்டய எடுத்து எறிஞ்சு இதுங்கள வெரட்டிப் பாப்போமா’ என்ற எண்ணம் அவனுள் தோன்றவும், உடலை அசைக்காமல், முந்திரிப்பழத்தை மிதித்த காலின் விரல்களைக் கொண்டு முந்திரியின் விதையைத் தேடினான். அவன் நினைத்திருந்ததைப்போலவே அது அவன் கால் விரல்களில் சிக்கியது. அதை அப்படியே விரல்களால் கவ்வி, உடலை அசைக்காமல் காலை மட்டும் பின்பக்கமாக மடக்கி கையால் அந்த விதையை எடுத்துக்கொண்டான்.

`இந்தக் கொல்லாங்கொட்டய அதுக மேல விட்டெறிஞ்சும் அதுங்க நகரலேன்னா என்ன பண்றது?’ சந்தேகம் அவனுள் துளிர்த்தது. எனினும், இதை முயன்று பார்ப்பதைத் தவிர்த்து வேறொரு வழியும் அவனுள் தோன்றாததால், அந்த விதையைத் தூக்கி அந்த இரு நாய்களின் நடுவே விட்டெறிந்தான். விதை விழுந்த இடத்திலிருந்து ஒரு சிறு சப்தம் எழுந்தது. ஆனால் ரவி எதிர்பார்த்திருந்த எதுவுமே அங்கே நிகழவில்லை. அந்த இரண்டு நாய்களும் சப்தம் எழுந்த திசையை நோக்கிச் சிறு அசைவைக்கூடக் காட்டாமல் வெறியோடு அவனையே பார்த்தபடி இருந்தன.

``சின்னத்தம்பியண்ணன் கடையில வந்து உக்காந்திருந்தவனை அடிச்சு மண்டைய பொளக்கணும்னு நெனச்சுட்டே,

கையில ஏதாச்சுங் கெடைக்காதான்னு தேடினப்ப இருந்த வீரமும் கோவமும் இப்ப எங்க போச்சு..? இவ்ளோதான் நம்ம வீரமும் கோவமும்..!’

என்று அவன் நினைத்த நொடியில், ஏற்கெனவே வாயில் எச்சில் ஒழுக உறுமிக்கொண்டிருந்த நாய் சற்று உஷாராகி அவனை நோக்கிப் பாயத் தன்னைத் தயாராக்கிக்கொள்வதைப் போன்று உடலைச் சற்று இலகுவாக்கிக்கொண்டது.

`அந்த நாயாச்சும் பரவால்லை. இதுதான் நம்ம மேல கொலவெறியில இருக்குது. இதைத்தான் முதல்ல நாம சமாளிச்சாகணும்’ என ரவி தன்னை எதிர்த்தாக்குதலுக்குத் தயாராக்கிக்கொண்டிருந்த அதேவேளையில், `ஆமா இவ்ளோ நேரமாகியும் இதுங்க ரெண்டும் ஏன் நம்ம மேல பாயாம இப்படியே உக்காந்திருக்குதுங்க’ என்கிற சந்தேகமும் அவனுள் தோன்றியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``சும்மா நம்ம முன்னாடி தலை குனிஞ்சு என்னை வெட்டிக்கோன்னு சரண்டராவுற ஒருத்தனை வெட்டுறத விட,

அவனை உயிர் பயத்துல ஓடவிட்டு, அவனைத் தொரத்தித் தொரத்தி வெட்டுறதுல ஒரு சொகமிருக்கு மருமவனே”

என்று பால்ராஜ் அவனிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ``ஆக உங்க ரெண்டு பேத்தைப் பார்த்தும் நான் பயந்து ஓடணும். நீங்க என்னைத் தொரத்தி வந்து கடிச்சு கொதறுவீங்க அப்படித்தான?! நான் பயந்து ஓட மாட்டேன். தைரியமிருந்தா வாங்க ரெண்டு பேரும்... வந்து என்னைக் கடிச்சுக் கொதறுங்க பார்க்கலாம்.” வாய்விட்டு அந்த இரு நாய்களிடமும் ரவி பேசிக்கொண்டிருந்தபோதே, காய்ந்த சருகுகளின் மீது ஏதோவொன்று ஊர்ந்தோ நடந்தோ செல்லும் சலசலப்புக் கேட்டது. என்ன சலசலப்பு என்று ரவி சுதாரிக்கும் முன்னமே, வாயில் எச்சில் ஒழுக உறுமிக்கொண்டிருந்த நாய் அவனை நோக்கிப் பாய்ந்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

கீழே விழுந்து கிடந்த ரவியின் கையில் மரத்திலிருந்து ஒடிந்து விழுந்திருந்த கொம்பு ஒன்று சிக்க, உடம்பில் எந்த ஓர் இடத்திலும் வலியில்லை என்பதால், பாய்ந்து வந்த நாய் அவனைக் கடித்திருக்கவில்லை என்பதும் அவனுக்கு உறுதியாக, கையில் கிடைத்த கொம்பைத் தூக்கியபடி எழுந்து நின்றான். அவன் முன்னே முயலொன்றின் உடல் இரு பாகங்களாகப் பிரிந்துகிடக்க, அந்த இரு பாகத்தில் சிறிய பாகத்தை உறுமலின்றி அவனை வெறித்துக்கொண்டிருந்த நாய் சுவைத்துக்கொண்டிருக்க, இவன் மீது பாய்ந்த நாயோ பெரிய பாகத்தின் பெரும்பகுதியைத் தின்று தீர்த்திருந்தது.

உணவுக்காகக் காத்திருந்த நாய்களுக்கு உணவு கிடைத்துவிட்டது. இனி அவை தன்னை ஒன்றும் செய்யாது என்கிற நம்பிக்கை இருந்தாலும், கையிலிருந்த கொம்பை இறுக்கமாகப் பற்றியபடியே முயலைத் தங்களுடையக் கோரைப் பற்களால் கிழித்து தின்றபடியிருக்கும் நாய்களின் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் ரவி அவ்விடத்திலிருந்து பூனையைப் போன்று அடிமேல் அடி எடுத்து வைத்து முன்னேற, மீண்டும் உறுமல் சத்தம் கேட்டது.

இம்முறை எச்சில் ஒழுகிய வாயிலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.

``எதுன்னாலும் எதுத்து நிக்கணும்டே. எதுத்து நிக்கவன்கிட்ட நெருங்கவே யோசிப்பானுவ. அவனுவ யோசிக்குத நேரம்தான் நாம அவனுவள அடிக்கவேண்டிய நேரம்.”

தங்கப்பாண்டியன் யாரிடமோ பேசிய வார்த்தைகள் அவனுடைய காதுகளில் அசரீரியாக ஒலித்தன. கையிலிருந்த கொம்பின் ஒரு முனையை இறுக்கமாகப் பற்றியபடி, மறுமுனையைத் தன் பலம்கொண்ட மட்டும் அந்த நாயை நோக்கி வீசினான். அந்தக் கொம்பு காற்றைக் கிழித்த வேகம் சப்தமாக வெளிவர, அந்த நாயோ ரவியின் கையிலிருந்த கொம்பு, அதன் வீச்சு, அது எழுப்பிய சப்தம் என்று எதையும் மதிக்காமல், அவனை நோக்கி முன்னேறியபடியே இருந்தது.

``எப்பவுமே நாம எதுக்கு எதிரா நம்ம பலத்தைப் பயன்படுத்துறோமோ, அப்போ நம்ம எதிர்ல இருக்கிற அதுக்கும் பலம் அதிகமாகிட்டே வரும். உதாரணமா இப்ப உங்க ரெண்டு கையையும் விரிச்சுட்டு நிக்கிறப்ப, ஆரம்பத்துல ஒண்ணுமே தெரியாது. ஆனா நேரம் போகப் போக க்ராவிட்டேஷனல் ஃபோர்ஸ்னு சொல்லப்படுற புவியீர்ப்பு விசை உங்க கையைக் கீழே இழுக்க ஆரம்பிக்கும். நீங்க எந்த அளவுக்கு அந்தப் புவியீர்ப்புக்கு எதிரா கையை வெச்சிருக்கிறீங்களோ அந்த அளவுக்கு புவியீர்ப்புக்கு சக்தி அதிகமாகும். அதேநேரம் உங்க கைக்கும் சக்தி கம்மியாகி வலிக்க ஆரம்பிச்சுடும். புவியீர்ப்புக்கு ஒப்பு கொடுத்து உங்க கையைக் கீழ இறக்கித் தொங்க போட்டுட்டீங்கன்னா, உங்க கை வலிக்காது.”

பால்ராஜின் குரல் ஏதோ பள்ளத்தினுள் இருந்து கேட்பதைப்போல ரவியின் காதுகளில் விழுந்தது.

``அதே மாதிரி தான் இந்த மேத்ஸ் பாடமும். நீங்க கஷ்டம்னு நினைச்சு இந்தப் பாடத்துகிட்ட இருந்து ஓட ஆரம்பிச்சாலோ இல்லை எனக்கு வராதுன்னு சொல்லிட்டு எதிர்த்து நிக்க ஆரம்பிச்சாலோ இது ரொம்ப ரொம்பக் கஷ்டமான பாடமா மாறிடும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளத்திலிருந்து கேட்ட பால்ராஜின் குரல் இப்போது சற்றுப் பெண் தன்மை பூசியிருக்க, `பால்ராஜ் மாமா ஏன் பொம்பளைக் கொரல்ல அதுவும் மேகத்ஸ் பத்தியெல்லாம் பேசுதாவ’ என யோசித்த ரவியின் உடல் பயங்கரமான உதறலுக்கு உள்ளானது.

``லேய் ரவி எந்தில. டீச்சர் பாத்துட்டாவ. லேய் எந்தில” ரவியின் அருகிலிருந்த கார்த்திக் அவனை உலுப்பி எழுப்பினான். வாயில் ஒழுகியிருந்த எச்சிலைக் புறங்கையால் துடைத்தபடி கண் திறந்து பார்த்தவனை மேத்ஸ் டீச்சரான பிரபா முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``பெஞ்சிலருந்து எந்தி.”

ரவி எதுவும் பேசாமல் எழுந்து நின்றான்.

``போன மாசம் உனக்கு மேத்ஸ்ல மார்க் எவ்வளவு..?”

``இருபத்திரெண்டு.” தலையைக் குனிந்தபடியே ரவி பதிலளித்தான்.

``இப்படி தூங்கிட்டு இருந்தேன்னா உனக்கு எப்படிக் கணக்கு வரும்? இந்த மாசமாச்சும் பாஸாகணுமா இல்லை போன மாசம் மாதிரியே ஃபெயிலாகனணுமா..?”

பிரபாவின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு வகுப்பை ஒரு முறை பார்த்தான். வகுப்பிலிருந்த அனைத்து மாணவர்களும் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவமானத்தோடு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டான்.

``இப்படி தலையைக் குனிஞ்சுக்கிட்டேன்னா என்ன அர்த்தம்... பாஸாக வேணாமா..?”

``இல்லை மிஸ் பாஸாகனணும்.” ரவியிடமிருந்து குரல் கம்மி வெளியேறியது.

``இப்படி க்ளாஸுக்குள்ள தூங்கிட்டு இருந்தேன்னா எப்படி பாஸாவ?”

``இல்லை மிஸ்... இன்னைக்கு சோஷியல் சயின்ஸ் டெஸ்ட்டுக்கு ராத்திரி முழிச்சிருந்து படிச்சேன்.” ரவி பொய் சொன்னான்.

``போன மாசம் சோஷியல் சயின்ஸுல எவ்வளவு மார்க்?”

``நாப்பத்தி எட்டு.”

``ஓ… அப்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தா நீங்க படிப்பீங்க. கொஞ்சம் ஃப்ரீயா விட்டா க்ளாஸ்ல உக்காந்து தூங்குவீங்க... அப்படித்தானே... கிளாஸுக்கு வெளியே போய் நின்னு பாடத்தை கவனி. தூக்கம் கலைஞ்சதும் கிளாஸுக்குள்ள வந்து உக்காரு. போ வெளியே” பிரபா கோபத்தோடு கத்தவும், ரவி பதிலெதுவும் பேசாமல் வகுப்பறையிலிருந்து வெளியேறினான்.

ரவி வகுப்பிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களில், ``டேய் தம்பி உன்ன ஹெச்செம் கூப்பிடுறாரு பாரு” என்ற பியூனின் குரல் வகுப்புக்குள்ளிருந்த அவனது பார்வையை வெளியே கிரவுண்டுக்கு மாற்ற, அங்கே ஹெச்செம் தன் சிவப்பேறிய கண்களில் கோபம் கொப்பளிக்க, தன் கையிலிருந்த பிரம்பை அவனை நோக்கி நீட்டித் தன்னருகில் அழைத்தார்.

(தொடரும்...)