Published:Updated:

ஊசிப்புட்டான் | `நம்மகிட்ட இல்லாத ஒரு விஷயத்த தொட்டுப் பாக்க ஆசப்படுறதுல என்ன தப்பு?’| அத்தியாயம் 18

ஊசிப்புட்டான்

இடதுபுறமாகத் திரும்ப, ரவி யதேச்சையாக வெளியே பார்க்க, அங்கே காலையில் பள்ளியிலும், மாலை பேருந்து நிலையத்துக்கு வரும் பாதையிலும் பார்த்த பெண்.

ஊசிப்புட்டான் | `நம்மகிட்ட இல்லாத ஒரு விஷயத்த தொட்டுப் பாக்க ஆசப்படுறதுல என்ன தப்பு?’| அத்தியாயம் 18

இடதுபுறமாகத் திரும்ப, ரவி யதேச்சையாக வெளியே பார்க்க, அங்கே காலையில் பள்ளியிலும், மாலை பேருந்து நிலையத்துக்கு வரும் பாதையிலும் பார்த்த பெண்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

ரவி, அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்தபோது அவனை அள்ளிப் போட்டுக்கொண்டு செல்ல, தடம் எண் `36’ மற்றும் தடம் எண் `பிசிஜி 36’ என்கிற இரண்டு பேருந்துகள் தயாராக இருந்தன. `36’-ன் உள் ஏறப் பார்த்தான். இவன் பேருந்து நிலையத்துக்கு வரும் முன்னேயே இருக்கைகள் முழுவதும், ஆக்கிரமிக்கப்பட்டு படிக்கட்டு வரையிலும் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது. இனி இந்தப் பேருந்தில் நின்றுகொண்டே `பள்ளம்' வரையிலும் பயணிப்பது என்பது அவனுக்குச் சௌகரியமாகப் படவில்லை. அதனால் அதிலிருந்து தன் புத்தக மூட்டையோடு கீழே இறங்கி, அதற்குப் பின்னேயே நின்றுகொண்டிருந்த `பிசிஜி 36’ல் ஏறினான். 36 கிளம்பி சென்ற பிறகுதான் இது கிளம்பும் என்பதாலும், காலையில் மீன் சந்தைக்கு மீனைச் சுமந்து சென்ற கூடைகள் அனைத்தும், தங்களுக்குள் வெற்றிடத்தையும், தன்னைச் சுமந்து சென்ற பெண்களின் உடலில் மீனின் நாற்றத்தையும் தாராளமாக வழங்கியிருப்பதை சந்தோஷமாகச் சுமந்து வரும் பயணிகளுக்கான பேருந்து என்பதாலும் கூட்டம் அதிகமாக இல்லை. அதுவும் போக இந்த `பிசிஜி 36’ தடப் பேருந்து என்பது ரவிக்குத் தனிப்பட்ட விருப்பமாகவும் இருந்தது.

இந்த ஒரு பேருந்தில் மட்டும்தான், இருக்கைகள் மற்ற பேருந்துகளைவிடவும் குறைவாக இருக்கும். இருக்கைகளுக்கு பதிலாக ரயிலில் படுக்கை இருப்பதைப் போன்று இரண்டடுக்கில் கடலோர மற்றும் ஊருக்கு வெளியே இருக்கும் கிராமங்களிலிருந்து காய்கறிக் கூடையையும், மீன் கூடையையும், இன்ன பிற சுமைகளையும் சுமந்துவரும் வியாபாரிகளும் தொழிலாளிகளும் தங்களது சுமைகளை வைத்துக்கொள்வதற்கு தோதாக இரண்டடுக்கில் ப்ளார்ஃபார்ம் வைத்திருந்தார்கள். ரவியைப் பொறுத்தவரையில் இந்தப் பேருந்தில் அவனது புத்தகப்பையை எவரிடமும் கொடுத்து வைக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. கூட்டம் இருந்தாலும், அவனுக்கு உட்கார அந்தச் சுமைகளுக்கு நடுவே ஒரு சிறு இடம் கிடைத்துவிடுகிறது.

பிசிஜி 36 -ன் உள் ஏறி வலதுபுற ஜன்னலோரமாக ஒரு இருக்கையைப் பார்த்து அமர்ந்தான்.

பள்ளியில் அன்றைய தினம் அவனுக்கு மிகக் கசப்பான தினமாக அமைந்திருந்தாலும், அதை எல்லாம் மறக்கும்விதமாக அந்தப் பெண்ணின் முகம் அவனது மனம் முழுக்க நிறைந்திருந்தது.

`36 பள்ளம்’ பேருந்து முதல் கியரின் மிகப்பெரிய சப்தத்தோடு தன் உடலை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டு அது நின்ற இடத்திலிருந்து மெதுவாகக் கிளம்பியது. `36 கெளம்பிட்டான். இன்னு பத்து நிமிசத்துல இவனும் கெளம்பிடுவான்’ ரவி மனதினுள் நினைத்துக்கொண்டான். முன் பின் வாசல் வழியாக ஒருசில காக்கி வெள்ளைச் சீருடை அணிந்த மாணவர்கள் அவசர அவசரமாக ஏறினார்கள். ஆனால் ரவியோ எந்தவோர் அவசரமுமின்றி ஜன்னலின் வழியே வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

`அவளுக்கெ வீடு எங்கருக்கும்..? பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளயே வராம வெளியவே நின்னுட்டான்னா கண்டிப்பா 31 ஜேஜேலதான் போயாகணும்’ அவனுள் தோன்றிய அந்த நினைப்பு அவனைச் சந்தோஷப்படுத்தியது. `சர்குலர்ல போறான்னாக்க அவளுக்கெ வீடு கண்டிப்பா டவுனுக்குள்ளதான் இருக்கணும்’ மீண்டும் அவனுள் சந்தோஷம் பீறிட்டது. `டவுனு என்ன நம்ம ஊரு மாரியா? பொசுக்குன்னு அவ வீட்டைக் கண்டுபிடிக்கெ. அதுக்கு மொதல்ல அவளுக்கெ பேரக் கண்டுபிடிக்கனும்’ இந்த நினைப்புத் தோன்ற, அவனுள் அத்தனை நேரமும் குடிகொண்டிருந்த சந்தோஷம் அனைத்தும் வடிந்துபோனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

மற்றொரு `பிசிஜி 36’ அந்த இடத்துக்கு வந்து நின்றது. பேருந்திலிருந்து பத்துப் பேர் இறங்கினார்கள். பாதிப் பேர் `பத்தல்விளை’ பக்கம் நடக்க, மீதம் பேர் அருகிலிருந்து படிக்கட்டில் ஏறி `வேப்பமூடு’ செல்லும் பாதையில் திரும்பினார்கள். ரவிக்கு இப்போது சலிப்பாக இருந்தது. `அவெ பேர எப்படிக் கண்டுபிடிக்கெது’ ரவி தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்தான். அதே நேரம் ஓட்டநரும் வண்டியில் ஏற, திடீரென்று அவனுக்கு மூச்சு முட்டுவதைப்போல இருந்தது. பார்வையை வெளியே இருந்து பேருந்தினுள் திருப்பினான். பேருந்து மொத்தமும் பயணிகளால் நிரம்பியிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னாடியே ``டிக்கெட் டிக்கெட்” என்ற குரல் கேட்க, ரவி தன்னுடைய பஸ் பாஸைக் கையில் எடுத்துத் தயார்நிலையில் வைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் பச்சை தாவணியும், வெள்ளை பிளவுஸும் அணிந்த நான்கைந்து பள்ளி மாணவிகள் தங்களுடைய வலக்கையால் பஸ்ஸிலிருந்த கம்பியைப் பற்றிக்கொண்டபடி நின்றுகொண்டிருந்தார்கள். பஸ் கண்டக்டர் எங்கே நிற்கிறார் என்பதைப் பார்க்கவேண்டி தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, தன்னுடைய இயல்புநிலைக்கு வருகையில்தான், தான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் நின்ற பெண்ணின் அக்குளைப் பார்த்தான். வியர்வையால் ஈரமாகி, அந்த ஈரம் சற்றுப் படர்ந்து கீழிறங்கி அவள் அணிந்திருந்த வட்டுடை வரையிலும் நெருங்கியிருந்தது.

வெடுக்கென்றுத் தலையைத் திருப்பிக்கொண்டான் ரவி. வகுப்பில் அவனுடைய பின்னிருக்கையிலிருந்து குமார் பேசும் காமக் கதைகள் ஒவ்வொன்றாக அவன் தலையினுள் ஓட ஆரம்பித்தன. முன்னிருக்கையின் கம்பியைப் பற்றியபடி, மெதுவாகத் தலையை இடதுபுறமாகத் திருப்பிப் பார்த்தான். வியர்வையின் ஈரம் வட்டுடையின் எல்லையைத் தொட்டிருந்தது. மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்கத் தோன்றினாலும், ஏதோவொன்று அவனைத் தடுத்தது.

ரவி அமர்ந்திருந்த பேருந்து பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வந்து இடதுபுறமாகத் திரும்ப, ரவி யதேச்சையாக வெளியே பார்க்க,

அங்கே காலையில் பள்ளியிலும், மாலை பேருந்து நிலையத்துக்கு வரும் பாதையிலும் பார்த்த பெண்,

52 தடம் எண் பேருந்தில் ஏறுவது தெரிந்தது. 52 எங்கே செல்லும் பேருந்து என்பதைப் பார்ப்பதற்கு முன்பாகவே இவனுடைய பேருந்து நகர்ந்துவிட, அவனுள் எரிச்சல் மூண்டது.

``தம்பி பாஸை எடு” கண்டக்டரின் கண்டிப்பான குரல் காதில் விழ, ஏற்கெனவே தயாராக எடுத்துவைத்திருந்த பாஸை அவரிடம் நீட்டினான். தன் கையிலிருந்த பேனாவால் அதில் ஒரு டிக்கைப் போட்டுவிட்டு, ``தம்பி லேடீஸ் சீட்ல உக்காந்திருக்கிற, எந்திரிச்சு லேடீஸுக்கு இடம் கொடுப்பா” மீண்டும் கண்டக்டரின் குரல் அவன் காதில் விழுந்தது. தலையைத் தூக்கிப் பேருந்தின் கூரையைப் பார்த்தான். அங்கே `பெண்கள்” என்று எழுதியிருக்கவில்லை. அதனால் சீட்டிலிருந்து எழச் சற்றுத் தயங்கினான். ``ஆம்பளப் பையன் தான நீ, எந்திச்சு பொம்பளைகளுக்கு இடம் கொடுக்கத் தெரியாதா..!” இம்முறை கண்டக்டரிடமிருந்து கோபமாக வார்த்தைகள் வெளியேறின. ரவி எந்தவொரு மறுமொழியும் பேசாமல் பேசாமல் சீட்டிலிருந்து எழுந்து அத்தனை நேரமும் வியர்வை ஒழுக நின்ற பெண்ணுக்கு இடம் கொடுத்தான்.

அவன் சீட்டிலிருந்து எழுந்து வெளியே வருவதும், அந்தப் பெண் காலி இருக்கையில் அமர உள்ளே நுழைவதும் ஒரே நேரத்தில் நிகழ, நெருக்கமாக அந்தப் பெண் அவனைக் கடக்கையில் அவள் உடலிலிருந்து ஒருவிதமான நாற்றம் பரவியதை அவனால் உணர முடிந்தது. இதற்கு முன்பாக இதே நாற்றத்தை ஒன்றிரண்டு முறை அவன் அம்மாவிடமும் உணர்ந்திருக்கிறான். `என்ன நாத்தமிது… ஒருவேள குளிக்காம வந்திருப்பாளோ…?” நினைத்தபடியே தன்னுடைய நாசியை ஒருமுறை விரலால் தேய்த்துவிட்டுக்கொண்டான் ரவி.

ரவியின் உயரம் பேருந்தின் மேலிருக்கும் கம்பியைப் பற்றிக் கொள்ளுமளவுக்கு இல்லாததால், பேருந்தில் தூண்போல நின்றிருக்கும் கம்பியைப் பற்றிக்கொண்டு ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

பேருந்து ஜோசப் கான்வென்ட்டைக் கடந்தது. பச்சை நிறப் பாவாடையும், பச்சை வெள்ளைக் கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டம் பள்ளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருந்தது.

``கோட்டார்ல யாரும் இறங்கணுமா” கண்டக்டரின் குரல் ஒரு முறை உரக்க ஒலித்தது. பின்னர் அவர் டபுள் விசில் கொடுக்க, மெதுவான வண்டி மீண்டும் ஒரு குலுக்கலோடு வேகமெடுத்தது. சவேரியார் கோயில் சந்திப்பில் பேருந்து வலப்புறமாகத் திரும்பி மீண்டும் கோட்டாறு பஸ் ஸ்டாப்பில் நிற்க, இரண்டு பேர் இறங்கினார்கள், பத்துப் பேர் ஏறிக்கொண்டார்கள். ரவிக்கு மூச்சடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேருந்து மீண்டும் ஒரு முக்கல் முனகலோடு நகர்ந்து செட்டிக்குளம் வந்தபோது, பேருந்திலிருந்த கூட்டம் ரவியை இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணோடு இறுக்கமாக ஓட்டவைத்து விட்டிருந்தது. அவனது இடுப்பு எலும்பில் அழுத்திய அந்தப் பெண்ணின் கைச்சதை அவனுக்குச் சுகமாயிருக்க, கூட்டம் நெருக்காதபோதும் அந்தப் பெண்ணின் கையோடு சாய்ந்து நின்றுகொண்டான்.

``ஹிந்து காலேஜ்ல இறங்கவேண்டியவங்க எல்லாரும் எறங்கிக்கோங்க” கண்டக்டரின் குரல் முன்னாலிருந்து கேட்க, ரவியை எழுப்பிவிட்டு, இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும் எழுந்து வெளியே வர, மீண்டும் அந்தப் பெண்ணை மிக நெருக்கமாகக் கடந்து சென்று இருக்கையில் அமர்ந்துகொண்டான். இப்போதும் அந்தப் பெண்ணின் உடலிலிருந்து அந்த வீச்சம் அவனைத் தாக்கியது. முகச் சுளிப்போடு அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளது பாவாடையில் லேசாக ஈரம் படர்ந்திருந்தது. ``ஜட்டியில மூத்திரம் போயிட்டாபோலருக்கு” தனக்குள்ளேயே சிரித்துககொண்டான்.

ஜன்னலோரமாக அமர்ந்திருந்த ரவியின் மடியில் பொத்தென்று இரண்டு நோட்டுகள் வந்து விழுந்தன. யார் இந்த நோட்டுகளைத் தன்னிடம் கொடுத்ததெனப் பார்த்தான். அங்கே நாகராஜன் நின்றுகொண்டிருந்தான். ரவியின் முகம் சட்டென மலர்ந்தது. ``நாரஜண்ணே” உரக்கக் கத்தினான் ரவி. அவனது குரல் கேட்டுத் திரும்பிய நாகராஜனும் உற்சாகமடைந்தான். பின்னர் சைகையால் `இரு வரேன்’ என்று காட்டிவிட்டு, பேருந்தின் முன் வழிப் பாதை வழியாக ஏறி உள்ளே வந்தான்.

``ஸ்டேஜ் க்ளோஸ் பண்ணப் போறேன்... டிக்கெட் எடுக்காதவங்க எடுத்துக்கோங்க” கண்டக்டரின் குரல், பின் வாசலிலிருந்து கேட்ட சற்று நொடிகளில் அவரிடமிருந்து டபுள் விசில் வந்தது.

கூட்டத்தில் நெருங்கி ரவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வந்து நின்றுகொண்ட நாகராஜன், ரவியிடம் குசலமாக இரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு, தன் முன்னே நிற்கும் பெண்ணின் பின்புறத்தோடு ஒட்டி நின்றுகொண்டான்.

அவன் அப்படி நிற்பது ரவியை ஏனோ சங்கடத்துக்குள்ளாக்கியது. ``நாராஜண்ணே நீ வேணா என் சீட்டுல உக்காந்துக்கோண்ணே” என்ற ரவியைப் பார்த்து, விஷமமாகச் சிரித்ததோடு அல்லாமல் கண்ணும் சிமிட்டினான் நாகராஜன்.

ரவி சாலையை கவனிப்பதை விடுத்து நாகராஜனின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

பீச் ரோடு ஜங்ஷன் அருகே பேருந்து தன் வேகத்தைக் குறைத்தபோது, தன் முன்னால் நின்றுகொண்டிருந்த பெண்ணின் இடுப்பில் முதலில் கை வைத்தான். அடுத்த முறை வண்டி தன் வேகத்தைக் குறைத்தபோது சட்டென எல்லை மீறி கைவைக்க, அந்தப் பெண் திரும்பிப் பார்த்து அவனை முறைத்தாள். தனக்கும் அங்கு நடந்ததற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதைப்போல நாகராஜன் தன்னுடைய தலையைக் குனிந்து ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பதைபபோலப் பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்தடுத்த ஸ்டாப்களில் கூட்டம் குறைய ரவியின் அருகிலிருந்தவர் எழுந்து செல்லவும், அந்த இடத்தில் நாகராஜன் அமர,

``பஸ்ஸுக்குள்ள இப்படி பண்றது ஒனக்கு தப்பா தெரிலியாண்ணே” எனக் கேட்ட ரவியைப் பார்த்துச் சிரித்தவன்,

``இதுல தப்பா நெனைக்க என்னத்த இருக்கு மக்கா... அவங்ககிட்ட இருக்க ஒரு விஷயம் நம்மகிட்ட இல்லை. நம்மகிட்ட இல்லாத ஒரு விஷயத்தை நாம தொட்டுப் பார்க்கணும்னு ஆசைப்படுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு”

நாகராஜனின் சித்தாந்தம் ரவிக்குப் புரிந்ததைப்போலவும் இருந்தது, புரியாததைப் போலவும் இருந்தது. இருந்தாலும், அவன் பேசிய அந்தச் சித்தாந்தம் மட்டும் அவன் மனதின் ஆழத்தில், எங்கோவொரு மூலையில் ஒரு விதையாக விழுந்திருந்தது.

(திமிறுவான்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism