Published:Updated:

ஊசிப்புட்டான் | `தகப்பன் இல்லாத புள்ளை தப்பான வழிக்குப் போயிடக் கூடாதுல்ல, அதான்'| அத்தியாயம் - 20

ஊசிப்புட்டான்

அவன் மண்டையினுள், இவன் கால்மேல் போட்டு அமர்ந்திருக்க, சதாசிவம் முதுகு வளைந்து இவனிடம் வந்து, ``ரெம்யாவ எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க ரவி, வேற எந்தப் புள்ளை வேணும்னாலும் சொல்லுங்க... நானே உங்களுக்கு செட் பண்ணித் தாரேன்” என்று கெஞ்சினான்.

ஊசிப்புட்டான் | `தகப்பன் இல்லாத புள்ளை தப்பான வழிக்குப் போயிடக் கூடாதுல்ல, அதான்'| அத்தியாயம் - 20

அவன் மண்டையினுள், இவன் கால்மேல் போட்டு அமர்ந்திருக்க, சதாசிவம் முதுகு வளைந்து இவனிடம் வந்து, ``ரெம்யாவ எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க ரவி, வேற எந்தப் புள்ளை வேணும்னாலும் சொல்லுங்க... நானே உங்களுக்கு செட் பண்ணித் தாரேன்” என்று கெஞ்சினான்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

குப்பினுள் மூச்சிரைக்க ஓடிவந்த கணேஷை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் அணில்.

``ஏம்ல... இந்த ஓட்டம் ஓடி வர்றே... ஈருபுலியால உன்னைத் தொறத்துது... கொஞ்ச மெதுவா வந்தா ஆவாதா... உன் சீட்ல வேற எவனும் வந்து உக்காந்துட மாட்டானுவ...” உரிமையோடு சலித்துக்கொண்ட அணிலை இடுப்பில் கைவைத்தபடி, மூச்சுவாங்கப் பார்த்தான் கணேஷ்.

``இப்ப எதுக்கு சவமே இந்த ஓட்டம் ஓடி வந்தே?” கணேஷ் அப்படி ஓடி வரவேண்டிய அவசியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கிலும், அதைப் பற்றிய கவலைத் தனக்கில்லை என்பதைப்போலவும் கேட்டான் அணில்.

கணேஷ் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ``மக்ளே உனக்கொரு மேட்டரு தெரியுமா… நம்ம சதாசிவம் இருக்காம்ல” எனக் கேட்டான்.

``எந்தச் சதாசிவத்தை சொல்லுக மக்களே” ஒன்றும் புரியாதவனாக கணேஷ் கேட்கவும், ``அதாம் மக்களே... நம்ம சீனியர் சதாசிவம். ஸ்கூலு விட்டப்பறம் ஸ்கூலுக்குள்ள அப்பப்ப புல்லட்ல வந்து சுத்திட்டு போவாம்ல...” பள்ளியின் ஹீரோவாகப் பார்க்கப்படும் ஒருவனைப் பற்றிச் சொல்லும் ஆவலோடு கண்கள் அகல கணேஷ் சொன்னான்.

``ஆமா நம்ம சதாசிவமண்ணே. அவருக்கென்ன...” மீண்டும் அணிலிடம் ஒரு மேம்போக்குத்தனம் ஒட்டிக்கொண்டது.

``அவரு இன்னைக்கு மதியம் நம்ம கிளாஸ் ரவிகிட்ட வந்து பம்மி பதுங்கி நின்னு பேசிட்டுப் போனாரு மக்களே” அதே அகண்ட கண்களோடு கணேஷ் சொல்ல, அணிலின் முகத்தில் அநிச்சையாக ஓர் அதிர்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது.

``எந்த ரவியைச் சொல்லுகல?” அதே அதிர்ச்சியோடு அணிலிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.

``அதாம் மக்களே, ஊசிக்குக் கை கால்வெச்சுவிட்ட மாதிரி ஒருத்தன் இருக்காம்ல... அந்த ட்டி.ரவி.”

ஊசிப்புட்டான் | `தகப்பன் இல்லாத புள்ளை தப்பான வழிக்குப் போயிடக் கூடாதுல்ல, அதான்'| அத்தியாயம் - 20

கணேஷ் சொல்வதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறிய அணில், பின்னர் ஒரு மாதிரியாகத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, ``யாரு சதாசிவம் அண்ணனா? அதும் இந்தப் பொடிபயல்கிட்டயா…? வாய்ப்பே இல்லைபோல. சும்மா கதயெல்லாம் விட்டுட்டு கெடக்காதல” என்றான்.

``அம்மயாணெ… நான் யேன் ரெண்டு கண்ணாலயும் பாத்தேன் மக்களே” இப்போது தான் கண்ட காட்சியைக் கண்டிப்பாக இவனை நம்பவைக்க வேண்டும் என்கிற எண்ணம் கணேஷிடம் ஒட்டிக்கொண்டது.

``அவரு இருக்க சைஸு என்ன இவெம் இருக்க சைஸு என்ன… அவரு எதுக்குல இவங்கிட்ட வந்து பம்மிப் பேசனணும்… கதெ விடெதுக்கும் ஒரு அளவுண்டு கேட்டியா...” கணேஷைத் தூண்டிவிட்டுக் கதைக் கேட்கும் போக்கு அணிலிடம் வாய்த்திருந்தது.

``அதாம் தெரியல மக்களே... மதியம் சைக்கிள் ஸ்டாண்ட் மேல உக்காந்து சாப்ட்டுட்டு இருக்கப்ப அவுரு வந்து இவனைத் தனியா கூட்டிட்டு போய் பம்மி பம்மிப் பேசினாருல்ல... எங்கண்ணான” தனது வலது கையின் விரல்களைக்கொண்டு தன் கண்ணை ஒற்றி பதிலளித்தான் கணேஷ்.

``இவெங்கிட்ட வந்து அவுரு பம்முற அளவுக்கு இவேன் என்னல பண்ணிருப்பான்?”

``அதெல்லாம் ஒண்ணுந்தெரில மக்களே. ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது. இந்த ரெவிப்பய இருக்கானே... ஆளுதான் பாக்க ஊசிக்குக் கையுங்காலுங் வெச்சிவிட்ட மேனிக்கு இருக்கான். ஆனா கைக்குள்ள மொத்தமு வெளங்காத டாவுகளா வச்சிருக்கான்.”

``அப்படித்தான் எனக்கும் தோணுது மக்களே. ஏன்னாக்க இவெம் அந்த ரெம்யா பிள்ள பின்னாடி சுத்துனெதுக்கு சதாசிவெம் கிட்டருந்து மாத்துதான் வாங்குவான்னு நினைச்சேன்.”

``ஆமா மக்களே, இப்பதான் ஞாபகத்துக்கு வருது. சதாசிவெம் போகும்போ இவெங்கிட்ட டதி ஸ்கூல்ல படிக்கிற பிள்ளெயெல வேணுன்னாலும் பாத்துக்கோ... நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்னு வேற சொல்லிட்டுப் போனான் மக்களே...”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே ரவி அவர்களைக் கடக்க, இருவரும் அமைதியானார்கள். ரவிக்கு இவர்கள் இருவரும் தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தாலும், அதைப் பற்றித் தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதைப்போலவே அவர்களைக் கடந்து சென்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பாத்தியால... இந்தப் பயலுக்க ஏத்தத்த…” கணேஷ் குசுகுசுப்பாக அணிலிடம் பேசினாலும், அந்த வார்த்தைகள் ரவியின் காதிலும் தெளிவாக விழுந்தன.

``ஆமா மக்கா. எப்படிப் போறாம் பாத்தியா?” கண்கள் நிறைந்த பொறாமையோடு பேசிய அணிலின் முகத்தை ரவி பார்க்கவில்லை என்றாலும், அவன் குரலில் இருந்த ஆற்றாமை ரவியின் முகத்தில் ஒரு சிறு புன்னகையைத் தோற்றுவித்தது.

அவர்கள் இருவரின் பேச்சும் ரவியின் முகத்தில் புன்னகையை மட்டும் கொண்டுவரவில்லை, அந்தப் புன்னகையோடு அவன் மனதினுள் ஒரு மிதப்பையும் கொண்டு வந்தது. அந்த மிதப்போடு அவனது இருக்கையில் போய்ச் சாய்ந்தமர்ந்து அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தான்.

``லேய் அவெம் பாக்கான்... பாக்கான்...” கணேஷ் அவசர அவசரமாக அணிலின் காதுகளில் ஓதினான்.

`இந்த ஸ்கூலே ஹீரோ மாதிரி பாக்குற சதாசிவம் நம்மகிட்ட வந்து பம்மி பேசிட்டுப் போயிருக்கான்’ நினைத்தபடியே அவன் அமர்ந்திருந்த பெஞ்ச்சின் பின் தாங்கியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். அவன் மண்டையினுள், இவன் கால் மேல் போட்டு அமர்ந்திருக்க, சதாசிவம் முதுகு வளைந்து இவனிடம் வந்து, “ரெம்யாவ எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க ரவி, வேற எந்தப் பிள்ள வேணும்னாலும் சொல்லுங்க... நானே உங்களுக்கு செட் பண்ணித் தாரேன்” என்று கெஞ்சினான்.

காதல்வயப்பட்டவனை அவனைச் சுற்றியிருக்கும் எவருமே கவனிக்கவில்லை என்றாலும், அனைவருமே தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் தோன்றி எப்படி வெட்கப்படவைக்குமோ, அப்படித்தான் ரவிக்கும் தோன்றியது. ஆனால் சற்றுத் தலைகீழாக.

உயர்ந்த மேடைமேல் அமர்ந்திருக்கும் இவனை, வகுப்பில் இருக்கும் அனைவரும் பயத்தோடு மரியாதையோடும் பார்ப்பதைப்போலவும், இவன் தன்னுடைய கீழ் விழியால் அவர்கள் அனைவரையும் பார்ப்பதைப்போலவும் தோன்றியது.

***

வீட்டு வாசலில் அமர்ந்து முறத்தில் அரிசியைப் போட்டுப் புடைத்து, கல் பொறுக்கிக கொண்டிருந்த விஜயாவை, “என்ன விஜயாக்கா அரிசில கல்லு பொறுக்கிட்டு இருக்கீங்களா” எனக் கேட்டபடியே கமலம் நெருங்கினாள்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``ஆமா கமலாக்கா, இந்தத் தடவெ ரேஷனரிசில ஒரே கல்லும் குருணையுமா இருக்கு. பத்து கிலோ அரிசில கல்லயும் குருணையையும் சொளவுல போட்டுப் பொடச்சு எடுத்துட்டு பாத்தா அஞ்சு கிலோதான் வரும்போல இருக்கு” என்று அவளுக்கு அலுப்போடு பதிலளித்தாள் விஜயா.

``ஆமாக்கா. அரிசியும் சரியில்லை. ரெண்டு கொதி வந்ததுமே கொழஞ்சு வேற போயிடுது” பேசியபடியே முறத்தில் புடைத்துவைத்திருந்த அரிசியிலிருந்து ரெண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள் கமலா.

``என்ன கமலாக்கா... அதிசியமா இந்தப் பக்கம்...” எதிரில் அமர்ந்திருந்த கமலாவை நிமிர்ந்து பார்க்காமலும், அரிசியிலிருந்து கல் பொறுக்குவதை நிறுத்தாமலும் கேட்டாள் விஜயா.

``ரேஷன்ல மண்ணெண்ணெய் கொடுக்கானான்னு பார்க்கப் போனேன். நாளைக்கிதான் மண்ணெண்ணெ ஊத்துறானாம். திரும்பி வரப்ப உங்களப் பாத்தேன்.” சரளமாகப் பேசிய கமலாவை அப்போது நிமிர்ந்து பார்க்காமல், அவள் காலருகே மண்ணெண்ணெய் வாங்கப் போனதற்கு அடையாளமாக கேன் இருக்கிறதாவென்று பார்த்தாள் விஜயா.

வெறும் கையோடு கமலா வந்து அமர்ந்திருக்கிறாளெனில் அவள் ஏதோ ஒரு புரணிக்கதை பேசவே வந்திருக்கிறாள் என்பது விஜயாவுக்கு புரிந்துபோனது. அதனால் கையிலிருந்த முறத்தை ஓர் ஓரமாகத் தூக்கிவைத்தாள் விஜயா.

``என்னக்கா கல்லு பொறுக்கலியா?”

``ரொம்ப நேரமா கல்லு பொறுக்கிட்டு இருக்கேனா... கண்ணு வலிக்கி...”

``சொளவ வேணா எங்கிட்ட கொடுங்கக்கா, நான் கல்லு பொறுக்குறேன்” என்று கைநீட்டிய கமலாவிடம், ``உங்களுக்கெதுக்குக்கா செரமம். நானே பாத்துக்கறேன்” என்றாள் விஜயா.

``அட சும்மா கொடுங்கக்கா. மனுஷனுக்கு மனுஷன் ஒத்தாசதான” மீண்டும் கைநீட்டியவளிடம் முறத்தை ஒப்படைத்தாள் விஜயா.

முறத்தைக் கையில் வாங்கிய கமலா, முறத்தை இடவலமாக ஒரு முறை அசைத்து, பின் முறத்தின் நுனியிலிருந்த அரிசியை மேலே தூக்கிப் போட்டு முறத்தைப் பிடித்திருந்த கையால் முறத்தின் கீழே தட்டினாள். அரிசி முறத்தில் விழ விழ அரிசியிலிருந்த கல்லும் குருணையும் ஒருபக்கமாக ஒதுங்க ஆரம்பித்தது.

`எவ கதெய தூக்கிட்டு வந்திருக்காளோ... தெரியலியே’ என்கிற நினைப்போடு கமலா அரிசி புடைக்கும் நேர்த்தியைப் பார்த்தபடி இருந்தாள் விஜயா.

``என்னக்கா.. அரிசி புடைக்கிறதயே வச்ச கண்ணெடுக்காம பாத்துட்டு இருக்கீங்க?”

``ஒண்ணுமில்லக்கா... ஏதோ நெனப்பு” என்று சமாளித்தாள் விஜயா.

``பிள்ளையள பத்தியாக்கா?” இயல்பாகக் கேட்டாள் கமலா.

``ஹூம்ம்ம்... பொம்பளப் பிள்ளையள பெத்திருந்தாதான் அதுங்கள எவங்கைலயாச்சும் பிடிச்சுக் கொடுக்கணுமே. ஒத்தப் பொம்பளையா இருந்து எப்படி நடத்தப்போறோம்னு யோசிக்கலாம். நான் பெத்துவெச்சிருக்கறது ரெண்டுமே ஆம்பளப் பயலுவதானே” விஜயாவின் குரலில் பெருமை சற்றுத் தூக்கலாக இருக்கவும், கமலா, ``ஆமாக்கா... நீ சொல்றதும் சரிதான்க்கா. உனக்கென்ன கொற சிங்கக் குட்டிங்க மாதிரி ரெண்டு ஆம்பள பயலுவள பெத்துவெச்சிருக்க” என்றாள்.

கமலாவின் பேச்சிலிருந்த உள்குத்தை விஜயாவால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது என்றாலும், கமலாவைப் பற்றித் தெரியும் என்பதால் அதைப் பற்றி அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

``ஆமாக்கா பயலுவ எப்படி படிக்குதானுவ?”

``சின்னவன் பரவால்லக்கா, பெரியவந்தான் கொஞ்சம் மந்தம்” என்று விஜயா சொல்லி முடிக்கவும், இந்த வார்த்தைக்காகவே காத்திருந்ததைப்போலச் சட்டென கமலாவும், ``ஆமாக்கா... நானும் சொல்லணும் சொல்லணும்னுதான் இருந்தேன். ஆனா நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியாததால சொல்லாமலே இருந்தேன்க்கா” என்று முதல் பீடிகையைப் போட்டாள்.

விஜயா எதுவுமே சொல்லாமல் இருக்கவும், முறத்தில் அரிசி புடைப்பதைத் தொடர்ந்தபடியே, ``பெரியவனுக்க சேர்க்க ஒண்ணும் செரியில்லக்கா” என்று அடுத்த கொக்கியைப் போட்டாள் கமலா.

ஊசிப்புட்டான் | `தகப்பன் இல்லாத புள்ளை தப்பான வழிக்குப் போயிடக் கூடாதுல்ல, அதான்'| அத்தியாயம் - 20

மீண்டும் விஜயா அமைதியாகவே இருக்க, ``நம்ம பிள்ளையார்புரம் காலேஜு முன்னால அந்தப் புத்தேரி நாராஜன்கூட உக்காந்து பீடி, சிகரெட்டு குடிக்கிறது, காலேஜுவிட்டுப் போற பொம்பள புள்ளயுவள கிண்டல் பண்ணுறதுன்னு...” பேசுவதை நிறுத்திவிட்டு விஜயாவைப் பார்த்தாள் கமலா. விஜயா அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பது கமலாவுக்கு சங்கோஜமாக இருக்க, ``என் மாப்ளதான் பாத்துட்டு வந்து சொன்னாருக்கா. தகப்பன் இல்லாத புள்ள இல்லியாக்கா. தப்பான வழியில போயிடக் கூடாதுன்னுதான் உங்கிட்ட சொன்னேன்.”

``அந்தச் சொளவ இங்க குடு. இனி நான் கல்லு பொறுக்கிக்கறேன்.” விஜயா முறத்தைக் கேட்க, எதுவுமே பதில் பேசாமல் கையிலிருந்த முறத்தை விஜயாவின் கைக்கு மாற்றினாள் கமலா.

``அவன் கெட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் உங்கிட்ட வந்து சொன்னேங்க்கா. நீ தப்பா ஒண்ணும் எடுத்துக்காத. நான் வாரேன்” என்றபடியே தான் வந்த வேலையை வெற்றியுடன் முடித்துவிட்ட சந்தோஷத்தில் கமலா கிளம்பிச் சென்றாள்.

`இந்த வயசுலயே இவனுக்குப் பீடி, சிகரெட்டு பழக்கமா? இன்னிக்கு ஸ்கூலுவிட்டு அவன் வரட்டும். வாயிலயே சூடுவெக்கிறேன்’ என்று விஜயா மனதினுள் கறுவிக்கொண்டிருந்த அதேநேரத்தில், சிவந்தி ஆதித்தனார் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் நாகராஜனுக்காக ரவி சந்தோஷமாகக் காத்துக்கொண்டிருந்தான்.

(திமிறுவான்...)