Published:Updated:

ஊசிப்புட்டான் | ``மாப்ள பய கொஞ்சம் உஷாராயிட்டான்போலத் தெரியுது” | அத்தியாயம் - 22

ஊசிப்புட்டான்

ஒன்றரை அங்குலத்துக்கும் சற்றுக் குறைவான அளவுடைய கல்லாக அது இருந்தது. தூக்கி எறியவோ, அங்கேயே விட்டுச்செல்லவோ அவனுக்கு மனது வரவில்லை. அந்தக் கல்லையும் கையில் எடுத்துக்கொண்டு படியிறங்கினான்.

ஊசிப்புட்டான் | ``மாப்ள பய கொஞ்சம் உஷாராயிட்டான்போலத் தெரியுது” | அத்தியாயம் - 22

ஒன்றரை அங்குலத்துக்கும் சற்றுக் குறைவான அளவுடைய கல்லாக அது இருந்தது. தூக்கி எறியவோ, அங்கேயே விட்டுச்செல்லவோ அவனுக்கு மனது வரவில்லை. அந்தக் கல்லையும் கையில் எடுத்துக்கொண்டு படியிறங்கினான்.

Published:Updated:
ஊசிப்புட்டான்
இந்த 22-ம் அத்தியாயத்துக்குள் செல்வதற்கு முன்பாக ஆசிரியர் குறிப்பாக ஒருசில வரிகள்...

``இந்த `ஊசிப்புட்டான்’ கதையானது ஏற்கெனவே கூறியிருப்பதைப் போன்று 90-களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த ரெளடிகளின் சாம்ராஜ்யம் என்கிற உண்மையை ஒட்டி எழுதப்படும் புனைவுதான் என்றாலும், ரவி என்கிற கதாபாத்திரத்தைச் சுற்றி நிகழும் பல சம்பவங்களும் உண்மைச் சம்பவங்களே. ஒருசில கதாபாத்திரங்களுக்கு அவர்களது நிஜப்பெயரையே வைத்திருந்தாலும், ரவியோடு தொடர்புடைய பாத்திரங்களுக்கு முடிந்த வரையிலும் பெயரை மாற்றியே பதிவுசெய்திருக்கிறேன். ஒருவேளை என்னையும் அறியாமல் ஒருசில கதாபாத்திரங்கள் அவர்களுடைய இயற்பெயரிலேயே வந்திருக்கலாம். வந்திருக்கின்றன. இது தற்செயலாக நிகழ்ந்ததே அன்றி எவரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இனி அத்தியாயத்துக்குள் செல்வோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருஷ்ணகுமார் ஒவ்வொரு நாளும் ரவியை, அவன் அறியாவண்ணம் பின் தொடரத் தொடங்கியிருந்தான். ரவி ஒருநாள் செட்டிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அப்படியே மேற்கே கலெக்டர் அலுவலகம்வரை நடந்து, சற்று நேரம் அந்த நிறுத்தத்தில் நேரத்தைச் செலவிட்டுவிட்டு, மீண்டும் டதி ஸ்கூல் வழியாக ஸ்கூலுக்குச் சென்றான். அடுத்த நாள் செட்டிகுளம் நிறுத்தத்தில் இறங்கி PWD சாலையில் நடந்து சென்று, பள்ளிக்குச் சென்றான். மற்றொரு நாளோ வேப்பமூடு சந்திப்பில் இறங்கி கோர்ட் ரோடு வழியாக நடந்து பள்ளிக்குச் சென்றான். அவன் பள்ளிக்கு வருவது எந்தப் பாதையாக இருந்தாலும், வீட்டுக்குச் செல்லும் பாதை மட்டும் கோர்ட் ரோடு வழியாக நடந்து, வேப்பமூடு சந்திப்பு வந்து, அந்தச் சந்திப்பிலிருந்து குளத்து பஸ் ஸ்டாண்ட் என்றழைக்கப்பட்ட அண்ணா பஸ் ஸ்டாண்டுக்குச் செல்லும் ஒரே பாதையாக இருந்தது.

இப்போது கிருஷ்ணக்குமாரின் மனதினுள், `இவன் நிஜமாகவே ரம்யாவின் பின்னாடி சுற்றுகிறானா, இல்லையா?’ என்கிற ஒரு சிறு சந்தேகம் தோன்றியது.

பெண்களைச் சைட்டடிப்பதற்கான வேளை என்பது காலையில் பள்ளிக்கு வரும் வேளையில்தான் சாத்தியப்படும். அதற்கான ஒரே காரணம். பள்ளிச் சீருடை அழுக்காக இருக்காது. மாலை வேளை என்பது அப்படியானது இல்லை. பகலெல்லாம் பள்ளியில் போட்ட ஆட்டத்தில் சீருடை அழுக்கேறிப்போயிருக்கும் வேளை அது. ஆனால் ரவியின் விஷயத்தில் அனைத்துமே தலைகீழாக இருப்பதை அவன் உணர்ந்தான்.

சதாசிவத்தின் தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கும் பொருட்டு, ரவியைப் பின் தொடர்ந்த நாள்களில் சதாசிவத்தைச் சந்திப்பதை முடிந்த அளவு தவிர்த்து வந்தான் கிருஷ்ணகுமார். அதையும் மீறி அவனைச் சந்தித்த நேரங்களில் சதாசிவம் கேட்கும் முன்னேயே, “மாப்ள பய கொஞ்சம் உஷாராயிட்டான்போலத் தெரியுது பாத்துக்க, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ரூட்ல ஸ்கூலுக்கு வர்றான். போறப்ப ஒரே ரூட்ல போனாலும், வேற வேற டைம்ல போறான் பாத்துக்க...” என்று ஏதேதோ சொல்லிச் சமாளிக்கவும் செய்தான்.

அன்றைய தினம் பள்ளி முடிந்த பிறகாக, ரவியும் அவனது வகுப்பைச் சேர்ந்தவர்களும், அவர்கள் கையிலிருந்த க்ளிப் போர்டை பேட்டாகவும், பள்ளியில் நன்கு செழித்து வளர்ந்திருந்த புன்னை மரத்திலிருந்து பறித்திருந்த புன்னங்காய்களை பந்தாகவும் வைத்து ஸ்டேஜ் அருகிலிருந்த வாலிபால் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்ததை தூரத்தில் சைக்கில் ஸ்டாண்ட் மேலே அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணகுமார்.

`அவென் புத்தேரி நாரஜனுக்க தம்பின்னதும் பயந்து போய் உக்காந்திருக்கியா’ கிருஷ்ணகுமாரின் மனம் அவனைக் கேட்டது.

`அவெனுக்க அண்ணென் புத்தேரி நாராஜன்னாக்க, எனக்க அண்ணென் வில்லுக்குறி நாராஜன்.

இவென் ஒரு பொடிப்பய.’ கேள்வி கேட்ட மனதுக்கு அதே மனது மறுமொழி கூறியது.

`அவ்வளவு தைரியமானவனா இருந்தா அவெனக் கூப்பிட்டு மண்டெயில ரெண்டு கொட்டுக் கொட்டி அனுப்பிவெக்க வேண்டியதுதான... எதுக்கு இப்படி ஒரு வாரமா ஃபாலோ பண்ணிட்டே இருக்க...’

`எதையுமே எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணிடக் கூடாதுல்ல...’

`இப்பதான் கொஞ்ச முன்ன அவனெ பொடிப்பயன்னு சொன்னே. இப்ப என்னடான்னா எடுத்தோம் கவுத்தோம்னு...’ அவன் மனது அவனையே கேலி பேச, `இப்ப என்ன உனக்கு அவனெ அடிக்கணும். அவ்ளோதான... இன்னைக்கி அவென் தலேல தட்டி புழு எடுக்கேன் பாத்துட்டே இரி.’

‘அதெயும் பாப்போம்.’

விளையாடி முடித்துவிட்டு ரவி அவனுடைய பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, அவன் பின்னேயே கிருஷ்ணகுமாரும் நடக்க ஆரம்பித்தான். கிருஷ்ணகுமாரின் மண்டை முழுக்க, இவனை எங்கே வைத்து அடிப்பது என்கிற எண்ணமே நிறைந்திருந்தது.

ரவி பள்ளியிலிருந்து வெளியே வர, பள்ளியின் கேட்டருகே கிடந்த ஒரு சிறு கல் அவன் கவனத்தை ஈர்த்தது. அந்தக் கல்லைக் காலால் அவன் உதைக்க, அது கேட்டில் போய் நங்கென்று மோதிச் சப்தமெழுப்பியபடி சாலையை நோக்கி உருண்டு சென்று நின்றது.

ரவி மீண்டும் அந்தக் கல்லை வலது காலால் உதைத்தான். அது இரண்டடி தூரம் உருண்டு போய் நின்றது.

இப்போது அதே கல்லை இடது காலால் உதைத்தான். அது உருண்டு நிற்கும் முன்னமே வலது காலால் மீண்டும் அவன் உதைக்க, அந்தக் கல்லானது ஒரு ஃபுட்பாலாக மாறி அவனது இரு கால்களுக்கும் நடுவில் இங்குமங்குமாய் உருண்டோட ஆரம்பித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னுடைய ‘சுசூகி சாமுராய்’ பைக்கில் அமர்ந்தபடியே ரவியைக் கவனித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணகுமார். பள்ளிவிட்டு நேரமாகியிருந்தபடியால் சாலையில் மாணவர்களின் கூட்டம் வெகு குறைவாகவே இருந்தது.

பைக்கை பள்ளி வாசலிலிருந்து கிளப்பி நேராக ஜெயக்குமாரி ஸ்டோர்ஸ் அருகில் வந்து நிறுத்தினான் கிருஷ்ணகுமார். தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறான் என்பதை அறியாதவனாக ரவியும் அந்தக் கல்லோடு ஃபுட்பால் விளையாடிக்கொண்டே ஜெயக்குமாரி ஸ்டோர்ஸ் அருகில் நிற்கும் கிருஷ்ணக்குமாரைத் தாண்டிச் சென்றான்.

`லேய் ரவி... இங்க வாலன்னு கூப்பிட்டு அவனுக்கு ரெண்டு அடியைப் போடு. ம்ம்ம்... கூப்பிடு’ கிருஷ்ணகுமாரின் மனம் குரல் எழுப்பியது.

`இல்ல வேணாம். இங்கவெச்சு அடிச்சா கூட்டங்கூடிடும்.’

`உனக்குப் பயம்லே. அதான் இப்படிச் சமாளிச்சிட்டு கெடக்க.’

`பயமெல்லாம் ஒரு மயிருமில்ல.’

`பின்ன என்ன மயித்துக்கு அவனெ வேடிக்க பாத்துட்டே நிக்க. கூப்பிட்டு அடிக்கவேண்டியதுதான மயிரே...’

`கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா நீ?’

`சதாசிவத்துகிட்ட தெரியாத்தனமா வாய் விட்டுட்டோம்னுதான் யோசிச்சிட்டு இருக்க, ஹே ஹே ஹே...’

கிருஷ்ணகுமார் கடுப்போடு திரும்பிப் பார்க்க, ரவி கோர்ட் வாசலைத் தாண்டி ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தான்.

கிருஷ்ணகுமார் ஜெயக்குமாரியிலிருந்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு, பார்க் வாசலில் வந்து நின்றுகொண்டான்.

`லேய், என்னமோ பொடிப்பயன்னு சொன்ன, ஆனா நீ என்னமோ மசைகளுக்க பின்னாடி சுத்துறதுக்க கணக்கா, இவெம் பின்னாடி சுத்திட்டு இருக்க.’

`கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியா நீ?’

`ஆமா நான் எதுக்கு சும்மா இருக்கணும்னு சொல்லு.’

`இன்னைக்கு அவென் என்கிட்ட அடிவாங்காமப் போக மாட்டான் செரியா?’

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

`கொஞ்சம் சுத்திப் பாரு, வேப்பமூடு டாக்ஸி ஸ்டாண்ட்ல கூட்டம் இருக்கு. இங்க வச்சு அந்தப் பய மேல நீ கைவெச்சேன்னா ஒரு அடிதான் அடிக்க முடியும். டாக்ஸிகாரனுங்க ஒண்ணு கூடி வந்துடுவானுங்க. அதனால இங்க வேணாம்.’

`இப்ப என்னை அடிக்கச் சொல்றியா இல்லை... அடிக்க வேணாம்னு சொல்றியா?’

`அடி... ஆனா இங்கவெச்சு இல்லை. இடத்த மாத்துன்னு சொல்றேன்.’

எங்கேவைத்து இவனை அடிப்பது என கிருஷ்ணகுமார் யோசிக்க, ரவி கிரேட்டஸ்ட் பேக்கரியை நெருங்கியிருந்தான்.

பேக்கரியில் மாலை நேரத்துக்கான பப்ஸும், கேக்கும், பிரெட்டும் லோடு வந்து இறங்கி இருப்பதற்கான மணம் ரவியின் நாசியையும் துளைத்தது. ஒரு நிமிடம் பேக்கரியின் முன் நின்று பார்த்தான்.

கண்ணாடிப் பெட்டிக்குள் விதவிதமாக கேக்குகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. `நமெக்கெல்லாம் டீக்கட முட்டை கேக் கெடைக்கிறதே பெருசு. இதுல இந்தக் கேக்கு…’ கேக் மற்றும் பிரெட்டின் மணத்தை நன்றாக மூச்சை இழுத்து உள்வாங்கிக்கொண்டு, மீண்டும் அந்தக் கல்லை ஃபுட்பாலாக்கினான்.

`எப்படியும் இந்தப் பய பள்ளம் பஸ் நிக்குவ இடத்துக்குத்தான் போவான் கேட்டியா... அங்கேருந்து பத்தல்வெள மூத்திர முடுக்குக்கு தள்ளிட்டுப் போயிட்டா ஒரு பய வர மாட்டான். நாலு குத்து குத்திட்டு விட்றலாம்.’ கிருஷ்ணகுமாருக்குத் தெளிவான ஒரு இடம் கிடைத்ததும் அவன் முகம் மலர்ந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்து, பஸ் ஸ்டாண்ட் பூக்கடை அருகில் நிறுத்திவிட்டு, படியிறங்கிச் சென்று பள்ளம் பேருந்துக்கான நிறுத்தத்தில் சென்று நின்றுகொண்டான்.

பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும், தான் அத்தனை நேரமும் உதைத்துக்கொண்டு வந்திருந்த கல்லுக்கு இறுதியாக ஒரு உதைவிட்டான் ரவி. 

அவனுடைய உதையில் வேகமாகச் சென்ற கல் கிருஷ்ணகுமாரின் பைக் டயரில் பட்டு, இவன் பக்கமே ஓரடி தூரம் திரும்பி வந்து நிற்க, ரவி அந்தக் கல்லைப் பார்த்தான்.

அந்தக் கல்லின் மேல் அவனுக்கு இனம்புரியாத ஓர் ஈர்ப்பொன்று எழுந்தது.

இத்தனை நேரமும் காலால் உதைத்த கல்லைக் கையால் எடுத்துப் பார்த்தான். ஒன்றரை அங்குலத்துக்கும் சற்றுக் குறைவான அளவுடைய கல்லாக அது இருந்தது. தூக்கி எறியவோ, அங்கேயே விட்டுச் செல்லவோ அவனுக்கு மனது வரவில்லை. அந்தக் கல்லையும் கையில் எடுத்துக்கொண்டு படியிறங்கினான்.

பள்ளம் பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்து எதுவும் இல்லாதிருக்க, பயணிகளும் அங்கொருவர் இங்கொருவராக நின்றுகொண்டிருந்தனர். அடுத்த பேருந்து வரும் வரை காத்திருக்கவேண்டியதுதான் என்று ரவி நினைத்துக்கொள்ள, அடுத்த பேருந்து வருவதற்குள் இவனை அடித்துவிட வேண்டுமென கிருஷ்ணக்குமார் முடிவெடுத்துக்கொண்டான்.

``தம்பி உம்பேரு ரவிதான?” அங்கே பேருந்துக்காகக் காத்திருந்த மேல கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த சகாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரவியை நிறுத்திக் கேட்டான் கிருஷ்ணகுமார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``ஆமாண்ணே. நீங்க...” ரவி ஒன்றும் புரியாதவனாகக் கேட்கவும், ``கொஞ்சம் என்கூட வர்றியா” உரிமையோடு அவன் தோளில் கைபோட்டு கிருஷ்ணகுமார் பத்தல்விளை போகும் பாதையில் ரவியை இழுத்துச் சென்றான்.

ரவியின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பிக்க, ``யாருண்ணே நீங்க. உங்ககூட எதுக்கு நான் வரணும்?” கிருஷ்ணகுமாரின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ரவி முயல, கிருஷ்ணகுமாரின் பிடி இறுகியது.

``எங்கல ஓடப் பாக்குத...” ரவியின் வயிற்றில் ஓங்கிக் குத்தினான் கிருஷ்ணக்குமார்.

ரவி அந்த இடத்திலேயே வயிற்றைப் பற்றிக்கொண்டு சுருண்டு அமர, அவன் தோளைப் பிடித்துத் தூக்கி நிறுத்திய கிருஷ்ணகுமாரின் கண்ணை, வலியைத் தாங்கியபடியே நேர் நோக்கினான் ரவி. அவனுடைய கை, அவன் உதைத்து விளையாட உதவிய கல்லை இறுக்கமாகப் பற்றியிருந்தது.

(திமிறுவான்...)