Published:Updated:

ஊசிப்புட்டான் | அவனெ மாதிரியே நீயும் துரோகியா மாறிடாதல | அத்தியாயம் - 24

ஊசிப்புட்டான்

தேவராஜின் பார்வை மீண்டும் அந்த மருத்துவமனை வளாகத்தை ஒருமுறை சுற்றிவந்தது. உள்ளே போகும்போது சந்தேகப்படும்படியாகத் தெரிந்த ஒருவனைக் காணவில்லை.

ஊசிப்புட்டான் | அவனெ மாதிரியே நீயும் துரோகியா மாறிடாதல | அத்தியாயம் - 24

தேவராஜின் பார்வை மீண்டும் அந்த மருத்துவமனை வளாகத்தை ஒருமுறை சுற்றிவந்தது. உள்ளே போகும்போது சந்தேகப்படும்படியாகத் தெரிந்த ஒருவனைக் காணவில்லை.

Published:Updated:
ஊசிப்புட்டான்

அன்றைய தினம் ரவியின் வகுப்பினுள் சலசலப்பு அதிகமாகவே இருந்தது. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒவ்வொரு கதையாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அனைவருமே பேசிக்கொண்டிருந்தது ஒரே விஷயமாகத்தான் இருந்தது. அந்த ஒரு விஷயம்...

``ஹெட்மாஸ்டர் ரூம் முன்னால ஒரு வாரமா பனிஷ்மென்ட்டுக்கு நின்ன குமாருக்கு டி.சி-யைக் கொடுத்துட்டாங்களாம்.”

``விஜிலா மிஸ்ஸு மேல இங்க்கைத் தெளிச்சதுக்கா டி.சி-யைக் கொடுத்துட்டாங்க?” என்று ஒருவனும், “அவென் தெளிச்சது இங்க் இல்லல, மத்ததையாக்கும்” என்று மற்றொருவனுமாகக் கடைசி பெஞ்சிலிருந்த மாணவர்கள் பேசிக்கொண்டிருக்க, முதல் பெஞ்ச் மாணவர்களோ, ``மிஸ்ஸு மேல இங்க் தெளிச்சதுக்கு டி.சி-யெல்லாம் குடுத்துருக்க வேண்டாமாருந்தது. ஆனாலும் அவனை ஸ்கூலைவிட்டு வெளிய தள்ளுனது நல்லதுதான். இல்லைன்னா இன்னும் நாலு பேத்த இவன் கெடுத்துருப்பான்” என்றும், வேறு மாதிரிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இம்மாதிரியான் புரளிக் கதைகள் எதிலுமே கலந்துகொள்ள மனமில்லாத ரவியின் மனதில், குமாரைப்போல சுவாரஸ்யமாகக் காமக் கலவிக் கதைகளை இனி யார் சொல்லப்போகிறார்கள் என்கிற கவலையே நிறைந்திருந்தது.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வகுப்பறைக்குள் நுழைந்த வில்சன் சாரைக்கூடக் கவனிக்காத அளவுக்கு மாணவர்களின் குரல் உச்சத்தில் இருக்கவும், ``சைலன்ஸ்ஸ்ஸ்...” வில்சன் தன்னுடையக் குரலை உச்சத்துக்கு கொண்டு போக, வகுப்பு ஒற்றை நொடியில் அமைதியானது.

வழக்கமான ``குட் மார்னிங் ஸ்டூடன்ஸ்...’’ என்றெல்லாம் வகுப்பை ஆரம்பிக்காமல், ``குமாரை டீச்சர்கிட்ட காட்டிக் கொடுத்தவன் யாரு?” என்கிற கேள்வியையே அவர் முதலில் வைத்தார். 

முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த சிவராமன் பெருமிதத்தோடு எழுந்து நின்றான்.

``நீ தானா அது?” வில்சனின் குரலில் ஓர் எகத்தாளமும் நக்கலும் நிறைந்திருக்க, சிவராமனோ பெருமையாக, ``யெஸ் சார்” என்றான்

``இங்கிலீஷ்ல நீ எனக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தமிழ்லயே பேசு.”

``சரி சார்.”

அடுத்ததாக அவர் கேட்ட,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நீயெல்லாம் ஒரு ஸ்டுடன்ட்டா?” என்கிற கேள்வி சிவராமனைக் கலங்கடிக்க,

அவன் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல எனத் தெரியாமல் முழிக்க ஆரம்பித்தான்.

``ஸ்டூடன்ஸ்னா யாரு, என்னன்னு தெரியுமா?” அவர் பார்வையில் கோபம், வெறுப்பு என எல்லாம் கலந்திருக்க, சிவராமன் தயக்கத்தோடு, ``தெத்... தெத்... தெரியும் சார்” என்றான்

``சரி சொல்லு... ஸ்டூடன்ட்ன்னா யாரு?”

``ஸ்கூலுக்கு வந்து படிக்கிறவங்க, டீச்சர்ஸ்க்கு ஒபே பண்றவங்க.”

``ஓ... ஸ்டூன்ட்டா இருக்க இந்தத் தகுதிங்க மட்டும் போதுமா?” நக்கலும் கோபமும் கலந்து வில்சன் கேட்க, மீண்டும் தலையைக் குனிந்து அமைதியானான் சிவராம்.

``இப்ப நீ தலையைக் குனிஞ்சுக்கிட்டு நிக்கிறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவனுக்கு டி.சி கொடுத்தாச்சு. இப்ப உனக்குச் சந்தோஷம்தான...” கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு வில்சன் பேச, முதன்முறையாக ஒரு வாத்தியாரிடம் திட்டு வாங்கிய சிவராமனின் கண்களில் கண்ணீர் திரண்டு வந்து நின்றது.

``உன்னைத் திட்டி என்னவாகப் போகுது... உட்காரு” என்று வில்சன் சொல்ல, சிவராமன் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்தான்.

``போன மாசம் நான் க்ளாஸ் டெஸ்ட்வெச்சுட்டு வெளியே போனப்ப, நீங்க அவ்வளவு கூச்சலைப் போட்டு இந்தக் க்ளாஸையே வடசேரி மீன் சந்தை மாதிரி மாத்துனீங்க. நானும் ரொம்ப ஸ்பீடா வந்து டேனிகிட்ட பேசினவங்க பெயரையெல்லாம் எழுதி வாங்கிட்டு, லிஸ்ட்ல இருக்கிறவங்க பெயரையெல்லாம் ஹெச்செம்கிட்ட கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனேன். ஆனா இந்த வாசல் தாண்டி வெளியே போனதுமே அந்த லிஸ்ட்டைக் கிழிச்சு எறிஞ்சுட்டேன். ஏன் தெரியுமா?”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வகுப்பே அமைதியாக இருந்தது.

``ஏன்னா இந்த வயசுல நீங்க இப்படித்தான் இருப்பீங்க. கிளாஸ் டெஸ்ட்டுங்கிறது வெறும் கண்துடைப்பு சமாசாரம். இதையெல்லாம் பெருசுபடுத்தி உங்களுக்கு தண்டனையை வாங்கிக் கொடுக்கிறதால எந்த பிரயோஜனமும் இல்லை. வேணும்னா என் முன்னாடி நீங்க பயந்தா மாதிரி இருந்துப்பீங்க. ஆனா உங்க வாழ்க்கையில நீங்க இந்த வயசுல அனுபவிக்கவேண்டிய சந்தோஷத்தை, மறுபடியும் அனுபவிக்க முடியாத சந்தோஷத்தையெல்லாம் இழந்திருப்பீங்க. உங்களை அப்படிக் கஷ்டப்படுத்தி நான் என்னத்தைச் சாதிக்கப் போறேன்” ஆதங்கத்தோடு பேசித் தீர்த்தவர், தலைகுனிந்து அழுதபடியிருந்த சிவராமனைப் பார்த்து,

``சிவராம் படிப்புல வேணும்னா நீ பெரிய ரேங்க் ஹோல்டரா இருக்கலாம். ஆனா ஃப்ரெண்ட்ஷிப்பிங்குற விஷயத்துல ஜஸ்ட் பாஸ்

மார்க்கைக்கூட எடுக்க முடியாத அளவுக்குத்தான் இருக்கிற. உன்னை நீ மாத்திக்க, நீ படிச்சிருக்கிற படிப்பைவிட நீ சேர்த்துவெச்சுருக்கிற ஃப்ரெண்ட்ஸ்தான் உனக்கு ஆபத்து நேரத்துல உதவிக்கு வருவாங்க” என்றார்.

சிவராம் சரியென்பதாகத் தலையை ஆட்ட, வில்சன், ``ஓக்கே ஸ்டூடண்டஸ், லெட்ஸ் கெட் இன் டு த சப்ஜெக்ட்” என்று பாடத்தைத் தொடங்கினார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

வில்சனின் வார்த்தைகள் சிவராமின் தலைக்குள் ஏறியதோ இல்லையோ, ரவியின் தலைக்குள் அது ஒரு மந்திர வார்த்தைகளாக ஏறிக்கொண்டன. விரித்துவைத்திருந்த புத்தகத்தைப் பார்த்தான். பாடமெடுக்கும் வில்சனைப் பார்த்தான். முந்தைய நாள் வரையிலும் மிகவும் கொடூரமான பிறவியாகத் தெரிந்த வில்சன். இப்போது அவன் கண்களுக்குத் தேவதூதனாகத் தெரிந்தார்.

ரவியின் வகுப்பில் பரபரப்பு முடிந்து பாடம் ஆரம்பித்த வேளையில்,

எவ்வித பரபரப்புமின்றி, நோயாளிகள் வருவதும் போவதுமான இயல்புநிலையில் இயங்கிக்கொண்டிருந்த மோரிஸ் மத்தியாஸ் மருத்துவமனையினுள் தேவராஜ், அவருடைய நண்பர்களாக இருந்த இரண்டு அடியாட்களோடு அம்பாஸிடர் காரில் வந்து இறங்கினார்.

``ஏம்ணே ட்ரீட்மென்ட்டு முடியுதவரெக்கும் பாளையங்கோட்டையிலயே இருந்திருக்கலாமேண்ணே” தேவராஜின் உடன் வந்த ததேயுஸ் கேட்டான்.

``நா பாக்க வளந்த பயல அந்த லிங்கம்பய... அவெனுக்கு பயந்துகிட்டு எல்லாம் ஊரைவிட்டு ஒளிஞ்சுபோய் உக்காந்திருக்க முடியாதுல” தேவராஜின் பேச்சில் ஒருவித திமிர் இருந்தது.

``இருந்தாலும் அவெம் ஒரு கிறுக்குப் பயண்ணே. எந்த நேரத்துல என்ன பண்ணுவாம்னு அவெம்கூட இருக்கவனுவளுக்குக்கூடத் தெரியாது” ததேயுஸின் குரலில் நிஜமான வருத்தமும், கொஞ்சமாக பயமும் இருப்பதை தேவராஜ் உணர்ந்தார்.

``ஏம்ல இப்டி பயந்து சாவுத... செத்த மூதி. சாவுங்குறது என்னிக்கின்னாலும் வரத்தாம்லே செய்யும்.

அதுக்கெல்லாம் பயந்துட்டு ஊரைவிட்டு ஓடிட்டே இருக்க முடியாதுலே” என்று தேவராஜ் தைரியமாகப் பேசினாலும், அவரது கண்கள் பதற்றத்தோடு அந்த ஆஸ்பத்திரி வளாகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்தன.

ஆஸ்பத்திரியின் வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில், நோயாளியோடு வந்தவர்களும், நோயாளியாக வந்தவர்களும் அமர்ந்திருந்தார்கள். செவிலிகளும் வார்டுபாய்களும் அங்குமிங்குமாக நடந்தபடியிருக்க, அங்கிருந்த வாட்டர் டேங்க்கின் கீழே ஒருவன் மடித்துக்கட்டிய லுங்கியின் இடுப்பு பாகத்தில் கைவைத்தபடி தன்னைப்போலவே அந்த மருத்துவமனையை வேவு பார்ப்பதைப்போல பார்த்தபடி நிற்பதை தேவராஜ் பார்த்தார்.

``ஏலே ததேயுஸு, இடுப்புல பொருள் பத்திரமா தானல இருக்கு?”

தேவராஜின் குரலில் எச்சரிக்கை நிறைந்திருக்க, ததேயுஸ் தன் இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு, “பத்திரமா இருக்குண்ணே. ஏம்ணே. எவனும்ம்ம்…” ததேயுஸும் எச்சரிக்கையானான்.

``அதெல்லாம் ஒண்ணுமில்லடே. ஒரு பாதுகாப்புக்குத்தான். ஆமா கார ஒதுக்கிவிடப்போன அல்போன்ஸ எங்கடே காணோம்?” என்று ததேயுஸிடம் கேட்டபடியே அவர் திரும்பி, பார்க்கிங்கில் நின்ற காரைப் பார்க்க, கார் அங்கேயே நின்றது. ஆனால் அல்போன்ஸைத்தான் காணவில்லை.

``எங்கடே போய்த் தொலைஞ்சான் இந்த அல்போன்சு பய” எரிச்சலோடு தேவராஜ் கேட்க, “அவெம் பீடிக்கு செத்தபயனு உங்களுக்குத் தெரியாதா… கொஞ்ச சமயம் கெடச்சாலும் போதும்... எங்கனயாச்சும் போய் ஒரு பீடிய இழுத்துட்டு வந்துடுவான். வாண்ணே... அவனுக்காச்சட்டி காத்திருந்து நாம நேரத்தை வீணாக்க வேணாம்ணே. அந்தெ எளவெடுத்துப் போறவன் பீடியடிச்சுட்டு பொறுமையா வரட்டும். நாம போய் மொதல்ல டாக்டரைப் பாத்துட்டு வந்துடுவோம். வாண்ணேய்” ததேயுஸும் எச்சரிக்கை அடைந்தவனாக, அங்கிருந்து எத்தனை சீக்கிரமாய் கிளம்ப முடியுமோ, அத்தனை சீக்கிரமாகக் கிளம்பிவிடுவது நல்லது என்பதாகச் சொல்ல, தேவராஜுக்கும் அது சரியெனவே பட்டது.

டாக்டரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தேவராஜ், கதவோரமாகச் சாய்ந்து நின்ற ததேயுஸைப் பார்த்தார்.

``டாக்டரு என்ன சொன்னாருண்ணே?” பொதுவான விசாரிப்பாக ததேயுஸ் கேட்டான்.

``அவரு சொன்னது இருக்கட்டும்... இந்த அல்போன்ஸு பய வந்தானா?” என்ற தேவராஜின் பார்வை மீண்டும் அந்த மருத்துவமனை வளாகத்தை ஒருமுறை சுற்றி வந்தது. உள்ளே போகும்போது சந்தேகப்படும்படியாகத் தெரிந்த ஒருவனைக் காணவில்லை. ஆனால், அந்த மருத்துவமனைக்குச் சம்பந்தமே இல்லாத வகையில் நான்கைந்து பேர் அங்கே சுற்றுவருவதாக அவருக்குத் தோன்றியது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``இல்லண்ணே. அவனெ காணோம்” ததேயுஸின் குரலில் வழக்கத்துக்கு மாறாக ஒருவித கலக்கம் தொனிக்க, “எங்கடே போனான்?” என்று எரிச்சலோடு கேட்ட தேவராஜ், அடுத்ததாக, ``ஒனக்கு காரோட்ட வருமாடே?” என்றார்.

``வரும்ண்ணே. ஆனா…” மேற்கொண்டு பேசாமல் இழுத்த ததேயுஸை எரிப்பதைப்போலப் பார்த்த தேவராஜ், “ஏம்ல இப்ப ஆனா ஆவன்னான்னு இழுத்துட்டு கெடக்க... போய் காரை எடுத்துட்டு வாலே” கோபமாகக் கத்தினார்.

``காரு சாவி அவெங்கிட்டல்லா இருக்கு. அப்படியே அந்தச் சாவி எங்கிட்ட இருந்தாலும்….” சொல்லிய ததேயுஸ், தன் சட்டைப் பையிலிருந்து கார் சாவியையும், இடுப்பு மடிப்பிலிருந்து கத்தியையும் உருவினான்.

தேவராஜ் பயந்து மிரட்சியோடு ததேயுஸைப் பார்க்க, ததேயுஸின் முகத்தில் சின்னதாகப் படர்ந்த புன்னகையில் குரூரம் தெரிந்தது.

``நாந்தாம்ணே அவனெ போகச் சொன்னேன்.”

``எனக்கு ஏதும் ஒண்ணு ஆச்சுன்னா பிரபு உன்னைச் சும்மா விடமாட்டாம்ல” தேவராஜ் பின்வாங்கியபடியே செல்ல, அவர் பின்னே வந்து நின்றவனின் மார்பில் முட்டி நின்று திரும்பிப் பார்த்தார். அங்கே அவர் சற்று முன் சந்தேகத்தோடு பார்த்தவன் நின்றுகொண்டிருந்தான். அவன் முகத்திலும் குரூரமாக ஒரு சிரிப்பு.

தேவராஜ் பயத்தோடு சுற்றிப் பார்க்க, அந்த வளாகத்தினுள் சம்பந்தா சம்பந்தமின்றி சுற்றிக்கொண்டிருப்பதாக அவர் நினைத்த நான்கைந்து பேரோடு இன்னும் இருவர் சேர்ந்து அவரை எங்குமே நகர முடியாதபடிக்கு சுற்றி வளைத்திருந்தனர்.

``லேய் ததேயுஸு வேணாம்ல, அந்த லிங்கம் பயல மாதிரி நீயும் துரோகியா மாறிடாதல…”

தேவராஜ் பேசிக் கொண்டிருக்கும்போதே, ததேயுஸ் தன் கையிலிருந்த கத்தியைக்கொண்டு அவனுடைய இடது கையின் புஜத்தை வெட்டிக்கொண்டான்.

சூரியன் உச்சத்தில் இருந்ததால், அவன் வெட்டிக்கொண்ட இடத்திலிருந்து ரத்தம் தண்ணீரைப்போல வழிய, நொடி நேரத்தில் அது அவனுடைய இடது கை முழுவதையும் நனைத்து, விரல்களின் வழியே சொட்ட ஆரம்பித்தது.

சுற்றி இருந்த எவரும் எதிர்ப்பாராத நேரத்தில், ததேயுஸைத் தள்ளிவிட்டுவிட்டு தேவராஜ் ஓட, சுற்று போட்டவர்களில் ஒருவன் அவன் கையிலிருந்த அரிவாளால் தேவராஜின் முதுகில் ஓரு கோடு கிழித்தான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

அவர் முதுகைப் பற்றிக்கொண்டு மீண்டும் ஓட, ``லேய் அவெம் கால்ல கொத்துல” விரட்டி வந்தவர்களில் ஒருவன் கத்த, தேவராஜ் சூதாரித்து நேராக ஓடாமல் வளைந்து ஓட முயற்சிக்க, அவரது தோளில் அடுத்ததாக ஒரு வெட்டு விழுந்தது.

ஏற்கெனவே மூச்சிளைப்பு நோயால் அவதியுற்றிருந்த தேவராஜ் சோர்ந்து போய்க் கீழே விழ,

``இவெம் பெரிய ரன்னரு. ஓடித் தப்பிச்சுடப் போறானாக்கும்...”

நக்கலாகச் சொன்னபடியே வந்தவன், தேவராஜின் கழுத்தை நோக்கித் தன் கையிலிருந்த அரிவாளை வீசினான்.

ததேயுஸ் தன் கையில் உண்டாகியிருந்த காயத்தைப் பற்றியபடியே, ``தேவராஜ் அண்ணே... தேவராஜ் அண்ணே” என்று அரற்றியபடி மயக்கம் வந்ததாக நடிக்க, நிமிட நேரத்தில் அமைதியாக இருந்த அந்த மருத்துவமனையின் வளாகம், அதிர்ச்சியில் ஸ்தம்பித்து, பின் போர்களத்தின் ஓலத்தைச் சுமந்து நின்றது.

(திமிறுவான்...)