Published:Updated:

ஊசிப்புட்டான் | ``ஓ... சாராய யாவாரி தங்கசாமி மவனா நீ” | அத்தியாயம் - 26

ஊசிப்புட்டான்

``டே நாராஜா, உள்ள வந்து ஒரு என்ட்ரியை மட்டும் போட்டுட்டு போ. நாளைக்கோ இல்ல நாளக்கழிச்சோ கோர்ட்டுக்கு வந்துடு. கேஸ முடிச்சு அனுப்பிடலாம்”

ஊசிப்புட்டான் | ``ஓ... சாராய யாவாரி தங்கசாமி மவனா நீ” | அத்தியாயம் - 26

``டே நாராஜா, உள்ள வந்து ஒரு என்ட்ரியை மட்டும் போட்டுட்டு போ. நாளைக்கோ இல்ல நாளக்கழிச்சோ கோர்ட்டுக்கு வந்துடு. கேஸ முடிச்சு அனுப்பிடலாம்”

Published:Updated:
ஊசிப்புட்டான்

“நாரஜண்ணே நானும் உங்கள மாதிரி உயரமா தடியா ஆவணும்ணே. அதுக்கு எதாச்சும் ஒரு ஐடியா இருந்தா குடுங்கண்ணே” என்று கேட்ட ரவியை மேலும் கீழுமாக ஒரு பார்வைப் பார்த்தான் நாகராஜன்.

“ஏம்ல இப்பவே பாக்க நல்லா தான இருக்குத. அப்புறமாவும் ஏம்ல இப்படி கேக்குத” தன் உருவத்தைப் பற்றி இன்னும் சற்றுப் பெருமையாக ரவி பேச வேண்டுமென்பதை மனதில் வைத்துக் கொண்டு, வெறுமே கேட்பதைப் போலக் கேட்டான் நாகராஜன்.

“இல்லண்ணே, எங்கூட படிக்கிறவனுவ ஆரம்பிச்சு எல்லாவனுவளுமே என்னய ஊசி ஊசின்னே கிண்டல் பண்ணுதானுவ. நானு உங்கள மாதிரி உயரமா, கொஞ்சங் குண்டா இருந்தேன்னாக்க எவனும் அப்படி என்னய கூப்பிட மாட்டானுவல்ல. அதான்” நாகராஜனின் கேள்விக்கு நேர்மையாய் பதிலளித்தான் ரவி.

“எவென் உன்ன எப்படி கூப்டாலும் என்னல. அதான் உன்னை உங்கூட படிக்குதவனுவ எல்லாவனுவலும் மரியாதையா பாக்குறானுவன்னு நீ தானல என்கிட்ட சொன்ன”
நாகராஜன்

“ஆமா சொன்னேன். அது நீங்க எங்கூட இருக்கீங்க, நீங்க என்னோட அண்ணங்கிறதால தான நாராஜண்ணே.” சற்றுத் தயக்கத்தொடு ரவி சொல்ல, தான் எதிர்பார்த்த பெருமைக்குரிய வார்த்தைகள் நாகராஜனைத் திருப்திப் படுத்தினாலும், ரவி தயக்கத்தோடு அவனிடம் பேசியது அவனுள் ஒரு சந்தேகத்தைத் தோற்றுவித்தது.

"ம்ம்ம் சொல்லு"

“நானும் உங்கள மாதிரியே ஒரு பெரியாளாகனும்ணே. நாராஜன் கூட இருக்காங்கிறது இல்லாம…” மேற்கொண்டு எதுவுமே பேசாமல் ரவி தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

“சொல்ல வந்தத முழுசா சொல்லுல. ஏன் பாதி வார்த்தய மென்னு முழுங்கிப் பேசுக” என்று பேசியபடியே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பான் பராக் கவரைக் கிழித்து, அதை இடது உள்ளங்கையில் கொட்டி, அந்தப் பான்பராக்கை வலது கை விரல்களால் தட்டி அதிலிருந்த பொடிகளை எல்லாம் பறக்கவிட்டு வாயில் போட்டுக் கொண்டான் நாகராஜன்.

நாகராஜனின் கையிலிருந்து பறந்த பான்பராக் துகள்களின் மணம் ரவியைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“புத்தேரி நாராஜனுக்க தம்பின்னு இல்லாம, ரவின்னு ஒரு பெயர் வரணும்ணே. என்னைய ஊசின்னு கூப்பிட ஒவ்வொருத்தனும் பயப்படணும்ணே” ரவியின் குரலில் இருந்த தீவிரம் நாகராஜனை லேசாக அசைத்தது.

நாகராஜன் அவன் வாயில் கோர்த்திருந்த பான்பராக் எச்சிலை துப்பிவிட்டு, “அதுக்கு” என்று பொதுவாகக் கேட்டான்.

“இந்த உருவத்தோட இருந்தேன்னாக்க என்னை ஊசின்னு தான் கூப்பிடுவானுங்கண்ணே. அதான் கொஞ்சம் குண்டாகனுன்னு” மீண்டும் ரவியிடம் ஒரு தயக்கம் தொற்றிக்கொள்ள, நாகராஜன் எதுவுமே பேசாமல் சிரித்தான்.

“நீ சொல்லுகதும் சரிதான்.” என்று நாகராஜன் கூறவும், ரவியின் முகத்தில் மீண்டும் சந்தோஷம் குடியேறியது.

“ஒனக்கு சீக்கிரமா உடம்பு வைக்கனுன்னா அதுக்கொரு வழியிருக்கு. இல்ல நிறைய. இல்லயில்ல ரெண்டு வழியிருக்கு” சொல்லிவிட்டு நாகராஜன் மீண்டும் பான்பராக் எச்சிலைத் துப்பினான்.

“மொத வழி பீரடிக்கனும். பீரடிச்சா சூப்பரா ஒடம்பு வைக்கும். இல்லியா கோட்டரடிச்சிட்டு நல்லா சாப்டணும்.” நாகராஜன் சொல்லிமுடிக்கவும், ரவியின் முகம் அத்தனை நேரமும் இருந்த பரவசமெல்லாம் காணாமல் போய் வாடியது.

“ஏம்டே மொகம் வாடிட்டு” நாகராஜன் கேட்கவும், ரவி, “இந்த வயசுலேயே குடிச்சா தப்புலாண்ணே” என்றான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அப்படீன்னாக்கா எந்த வயசுல குடிக்கது சரிடே.” எனக் கேட்ட நாகராஜனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் ரவி அமைதியாக நின்றான்.

“வேலையத்தவனுவ சொன்னது மக்கா அது. குடிச்சிட்டு அப்படியே அந்தப் போதையில நிக்கப்ப ஒரு பலம் வரும் பாரு. யானபலம் மக்கா அது. எத்தன பேரு எதுக்க நின்னாலும் தூக்கிப் போட்டுப் பந்தாடிடலாம்” கண்கள் விரிய கூறிய நாகராஜனை கண்கள் அகலப் பார்த்தான் ரவி.

“ஆமா ஒரு பீரு என்ன வெலண்ணே வரும்” அப்பாவியாய் ரவி கேட்க, “இருபத்தியேழு ரூவா ஒரு ஃபுல் பீரு.” என்று பதிலளித்தான் நாகராஜன்.

“இருபத்தியேழு ரூவாயா” இயலாமையோடு ரவி தனக்குள்ளேயேச் சொல்லிக் கொள்ள, “உனக்குச் சரின்னா சொல்லு நான் வாங்கி தரேன். ஆனா யார்ட்டயும் நீ சொல்லக் கூடாது சரியா” என இருவரும் பேசியபடியே டவர் ஜங்கஷனிலிருந்து எஸ்ப்பி ஆஃபீஸ் போகும் சாலையில் நடக்க ஆரம்பித்திருந்தனர்.

“என்னண்ணே இங்க போலீஸ் அதிகமா இருக்காவ” என ரவி கேட்க, “எஸ்ப்பி ஆஃபீஸ் இங்க தான இருக்கு. அதான்” என ரவிக்குத் தெளிவுப்படுத்தினான் நாகராஜன்.

நடந்துக் கொண்டேயிருந்த இருந்த நாகராஜன் எஸ்ப்பி ஆஃபீஸின் எதிரேயிருந்த சந்திரா மெடிக்கலைப் பார்த்ததும் சட்டென நின்றான்.

“லேய் மக்கா உங்கிட்ட ருவா ஏதும் இருக்கா”

“பஸ் டிக்கெட்டுக்கு போவ, ஒரு ரெண்ட்ருவா இருக்கும்ணே”

தன்னுடைய பேண்ட் பாக்கெட்டைத் துழாவி ஒரு ஐம்பது பைசா நாணயத்தை வெளியே எடுத்தான் நாகராஜன்.

“ரவி உங்கிட்ட இருக்குத அந்த ரெண்டு ரூவாய கொடேன். நாளைக்கு உனக்குத் திருப்பித் தரேன்” முகம் மலரக் கேட்ட நாகராஜனின் கையில் எந்தவித கேள்வியுமின்றி ரவி தன்னிடமிருந்த மூன்று ஐம்பது பைசா நாணயத்தையும் இரண்டு இருபது பைசா மற்றும் ஒரு பத்து பைசா நாணயத்தையும் வைத்தான்.

கையிலிருந்த சில்லரைகளைக் கொண்டுச் சென்று சந்திரா மெடிக்கலுக்கு சென்ற நாகராஜன், “ஒரு இஞ்சி” என்றான்.

ரவி ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, கடையிலிருந்தவர் ஒரு அவுன்ஸ் அளவையில் கலங்கிய நிறத்திலிருந்த திரவத்தைக் கோப்பையில் ஊற்றிக் கொடுக்க, நாகராஜன் அதில் தண்ணீரைக் கலந்தான். தண்ணீர் கலந்ததும் அந்தக் கலங்கல் திரவம் மஞ்சள் நிறமானது.

அந்த மஞ்சள் நிறத் திரவத்தினை ஒரே மிடறில் குடித்த நாகராஜனின் முகம் சிறுத்து பின் நிதானத்திற்கு வந்தது.

“இப்ப என்னண்ணே குடிச்ச” ரவி ஆர்வம் தாளாமல் கேட்டான்.

“இஞ்சி” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் நாகராஜன்.

“இத யேண்ணே இப்ப குடிச்சீங்க”

“இதுவும் ஒரு மாதிரியா… வயிறெல்லாம் கபகபன்னு எரியுமா. வழக்கமா சாப்பிடுற சாப்பாட்டுக்கு ரெண்டு மடங்கு சாப்பிடலாம்”

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“அப்படீன்னா… இதைக் குடிச்சா” எனக் கேட்ட ரவியைப் பார்த்து, “ஆமா இதக் குடிச்சா பசி அதிகமாவும், நிறைய சாப்டலாம்.” என்றான் நாகராஜன்

எஸ்ப்பீ ஆஃபிஸின் உள்ளிருந்து வரிசையாகப் போலீஸ் ஜீப்கள் வெளியே வர ஆரம்பிக்க, “லே மக்கா, இங்கேருந்து பஸ் ஸ்டாண்ட் போவ உனக்கு வழி தெரியுமா” எனக் கேட்ட நாகராஜனைப் பார்த்து, இல்லை என்பதாய் ரவி தலையை ஆட்ட, “இப்படியே கொஞ்சம் கீழ மாற நடந்து போனேன்னா அரசமூடு ஜங்ஷன் வரும். அதுல இருந்து ரெண்டாவதா வலது பக்கம் செரட்ட தெருன்னு ஒரு தெரு திரும்பும். அந்தத் தெருவுக்குள்ள நேரா போனேன்னா பஸ் ஸ்டாண்ட் தான்.” என்று ரவிக்கு நாகராஜன் வழியைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்பொழுது நேசமணி நகர் ஏட்டு வந்து அவனை இன்ஸ்பெக்டர் அழைப்பதாக அழைக்கவும், நாகராஜன் ரவியிடம், “சரி மக்கா, நீ இங்கயே நின்னுக்கோ நாம் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன். ஒனக்கு பஸ்ஸுக்கு லேட்டாயிச்சின்னா நீ கெளம்பு” என்று சொல்லிவிட்டு ஜீப்பை நோக்கி நாகராஜன் நடக்க, “கூட நிக்குத அந்தப் பையனையும் ஐயா கூட்டிட்டு வரச் சொன்னாரு” என்று ஏட்டு சொல்ல, ரவியின் இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது.

நாகராஜன் சற்றுக் குனிந்து ஜீப்பினுள் இருப்பது யாரெனப் பார்த்தான்.

“ரெவி ஒண்ணும் பதறாத. நம்மாளு தான் ஜீப்ல இருக்குதாரு. நான் பாத்துக்கறேன். நீயும் கூட வா”

நாகராஜன் தைரியமாகச் சொன்னாலும் ரவியின் மனதில் பயத்தின் நிழல் ஆலமரமாய் வளர்ந்து அதன் நிழலைப் பரப்பியிருந்தது.

ஜீப்பினுள் ஏறி அமர்ந்ததுமே, “என்ன சார் இப்படி ரோட்டுல வச்சு ஜீப்புல ஏத்திட்டு போறீங்க. நாலு பேரு பாத்தா என்ன நினைப்பாங்க. சொல்லி விட்டிருந்தா நானே ஸ்டெசனுக்கு வந்து பார்த்திருப்பேனே சார்” நாகராஜன் இன்ஸ்பெக்டரிடம் இயல்பாய் பேசுவது ரவிக்கு வியப்பாய் இருந்தது.

“இல்லேன்னா மட்டும் உன்னப்பத்தி எவனுக்குமே தெரியாத்த மாதிரி பேசிட்டு இருக்க” செல்வராஜின் குரலில் கடுப்பு ஏறியிருந்தது.

“நான் என்னிய சொல்லல சார். இவெனச் சொன்னேன். படிக்கிற பய. நாளைக்கு அவனுக்கு இதுனால எந்தச் சிக்கலும் வந்துட கூடாதுல சார்” தனக்காக நாகராஜன் பரிந்துப் பேசுவது ரவிக்கு ஆனந்தமாக இருந்தது. கூடவே போலீஸ் அதிகாரியிடம் நாகராஜன் இத்தனை இயல்பாய் பேசுவது அவனுக்கு வியப்பாகவும் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“படிக்கிற பயன்னு தெரிஞ்சு தான் அவனையும் வண்டியில ஏத்துனேன். ஆமா படிக்கிற பயலுக கூட உனக்கென்னல கூட்டு” செல்வராஜின் குரலில் கடுப்பு கொஞ்சம் தணிந்ததைப் போன்றிருக்க, “கூட்டெல்லாம் இல்ல தான் இவென் எனக்கு ஒருவிதத்துல தம்பி மொற சார்” என்றான் நாகராஜன்.

“என்னது தம்பி மொறயா” இருந்த இடத்திலிருந்து திரும்பி ரவியைப் பார்த்த செல்வராஜ், “எங்கடே படிக்க” என்று ரவியைக் கேட்டார்.

அவர்கள் சென்றுக் கொண்டிருந்த ஜீப் எஸ்.எல்.பி பள்ளியைக் கடந்து செல்ல, ரவி, “இந்த ஸ்கூல்ல தான் சார் படிக்கேன்” என்றான்.

“இந்த ஸ்கூல்ன்னா… ஸ்கூலுக்குன்னு பேரு ஒண்ணும் இல்லையால்ல” செல்வராஜின் குரலில் மீண்டும் கடுப்பு ஏறியிருக்க, ரவி திக்கித் திணறியபடி, “எஸ்… எஸ்… எஸெல்பி சார்” என்றான்.

ஊசிப்புட்டான் | ``ஓ... சாராய யாவாரி தங்கசாமி மவனா நீ” | அத்தியாயம் - 26

``என்னது எஸ் எஸ் எஸெல்பியா… ஏன்ய்யா ஏட்டு இந்த ஊர்ல இந்தப் பேருல ஏதும் ஸ்கூலு இருக்கு” என்று நையாண்டியோடு கேட்க, “எனக்குத் தெரிஞ்சு அந்த மாதிரியானப் பேருல எந்த ஸ்கூலும் இந்த ஊர்ல இல்லீங்கய்யா” என்று அவரும் அதே நையாண்டித் தனத்தோடு பதிலளித்தார்.

“அந்த மாதிரி ஸ்கூலே இந்த ஊர்ல இல்லியாம்பா” செல்வராஜ் மீண்டும் தலையை மட்டும் திருப்பி ரவியைப் பார்த்துச் சொல்ல, ரவி, “எஸெல்பி ஸ்கூல் சார்” என்றான்.

“எப்பவுமே இந்த மாதிரி தெளிவா பேசிப் பழகனும்” அவர் சொல்லி முடிக்கவும் ஜீப் ஸ்டேஷனுள் நுழைந்தது.

“டே நாராஜா, உள்ள வந்து ஒரு என்ட்ரியை மட்டும் போட்டுட்டு போ. நாளைக்கோ இல்ல நாளக்கழிச்சோ கோர்ட்டுக்கு வந்துடு. கேஸ முடிச்சு அனுப்பிடலாம்” செல்வராஜ் நாகராஜனிடம் தகவலாய் சொல்லவும், “அட போங்க சார். திடீர்ன்னு பத்து நாள் ரிமாண்டு பதினஞ்சி நாளு ரிமாண்டுன்னு சொல்லிட்டாங்கன்னா நானென்ன உள்ள போயா இருக்க முடியும்” பதிலுக்குப் பதிலாக நாகராஜனும் பேசினான்.

அங்கே நடக்கும் அனைத்துக்கும் சாட்சியாய் நின்ற ரவிக்கோ அங்கே நடப்பவை அனைத்தும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.

ரவியை ஸ்டேஷன் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருக்க சொல்லிவிட்டு, நாகராஜன் கையெழுத்துப் போட உள்ளே சென்றான்.

“தம்பி பேரென்ன” குரல் கேட்டுத் திரும்பிய ரவியின் முன்னால் அந்த ஸ்டேஷனின் எஸ்.ஐ நின்றுக் கொண்டிருந்தார்.

“ரவி”

“எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்க”

“உள்ள அண்ணனைக் கூட்டிட்டு போயிருக்காங்க.”

உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “ஓ… அந்தச் தாலியறுப்புக்க தம்பியா நீ. ஆமா உன் வீடும் புத்தேரி தானா” என்று அவர் கேட்க, ரவி, “இல்ல தெங்கம்புதூர்” என்றான்.

தெங்கம்புதூர் என்ற பெயரைக் கேட்டதுமே அவர் முகம் மாறியது.

“உன் அப்பா பேரு என்ன”

“தங்கசாமி”

“தங்கசாமின்னா… மெட்ராஸ்ல வச்சு வெட்டிக் கொன்னானுவளே அந்தத் தங்கசாமியா” அவர் சந்தேகத்தோடு கேட்க, ஆமாம் என்பதாய் தயக்கத்தோடு தலையை ஆட்டினான் ரவி.

“ஓ சாராய யாவாரி தங்கசாமி மவனா நீ” எனக் கேட்ட அந்த எஸ் ஐயின் முகத்தில் குரூரமாய் ஒரு புன்னகைப் பரவியது. 

அந்தப் புன்னகையின் அர்த்தம், 'உன் அப்பனுக்கு கொடுக்க முடியாம போன விருந்தைச் சாப்பிட பையன் நீ வந்திருக்க' என்பதாய் இருந்தது.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism