Published:Updated:

ஊசிப்புட்டான் | ``இந்தப் பக்கம்வெச்சு நீ யாரை வேணாலும் என்ன வேணாலும் பண்ணு” | அத்தியாயம் - 27

ஊசிப்புட்டான்

“என்ன சார் அந்தத் தாலியறுப்புக்கு கூட வந்த பையன் உங்களுக்குத் தெரிஞ்ச பையனா” என ஸ்டேஷனுள் வந்த முத்தையாவிடம் செல்வராஜ் கேட்டார். ``இல்லை சார். இனிதான் இந்த முத்தையாவைப் பத்தி தெரிஞ்சுக்கப் போற பையன்.’’

ஊசிப்புட்டான் | ``இந்தப் பக்கம்வெச்சு நீ யாரை வேணாலும் என்ன வேணாலும் பண்ணு” | அத்தியாயம் - 27

“என்ன சார் அந்தத் தாலியறுப்புக்கு கூட வந்த பையன் உங்களுக்குத் தெரிஞ்ச பையனா” என ஸ்டேஷனுள் வந்த முத்தையாவிடம் செல்வராஜ் கேட்டார். ``இல்லை சார். இனிதான் இந்த முத்தையாவைப் பத்தி தெரிஞ்சுக்கப் போற பையன்.’’

Published:Updated:
ஊசிப்புட்டான்

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் அதைச் செய்யும்போதே அதன் காரண காரியங்களை அறிந்தோ, தெரிந்தோ நாம் செய்வதில்லை. நாம் செய்யும் அந்தச் செயல்களுக்கான எதிர்வினைகளை அல்லது பின்விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லை. நாம்தான் அனுபவித்தேயாக வேண்டுமென்கிற கட்டாயமும் இல்லை. ஒரு சிலவற்றுக்கான பின்விளைவை நாமும், ஒருசிலவற்றுக்கானதை நம்மைச் சார்ந்தவர்களும், ஒருசிலவற்றுக்கு நம்மை யாரென்றே அறியாதவர்களும்கூட அனுபவிக்கவேண்டி வரும். இங்கே ரவியும், முத்தையா என்கிற எஸ்.ஐ-யின் வழியாக அவன் அப்பா செய்த வினைகளுக்கான பிரதிபலனை அனுபவிக்க ஆரம்பித்தான்.

“சாராய யாவாரி தங்கசாமி மகனா நீ?” என்கிற விசாரணைக் கேள்வியிலிருந்து முத்தையாவுக்கும் ரவிக்குமான நட்பு ஆரம்பித்தது. “உங்கப்பாவும் நானும் நல்ல ஃப்ரெண்டுங்கடே. அந்தக் கேஸுலருந்து உங்கப்பாவை வெளிய கொண்டுவர நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனா முடியாம போயிடுச்சு.

ஊருக்குள்ள உங்கப்பன் நிறைய பேர்கிட்ட பகையைச் சம்பாரிச்சுவெச்சிருந்தான். ஒருத்தன் மாத்தி ஒருத்தன்னு உங்கப்பாவுக்கு எதிரான கேஸைக் கையாள ஆரம்பிச்சிட்டானுங்க. கேஸு தத்தரகட்டத்துல இருக்கப்ப எனக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு” முத்தையா ஒரு தேர்ந்த பிரசங்கனைப்போல தேவையான இடங்களில் அழுத்தமும், குரல் உயர்த்தவேண்டிய இடத்தில் உயர்த்தியும் ரவியிடம் பேச, அப்பாவின் கொலைக்கான பழிவாங்கும் எண்ணத்தை மறந்திருந்த ரவிக்கு, முத்தையாவின் வார்த்தைகள் மீண்டும் துளிர்விடச் செய்தன.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``எங்கப்பாவைக் கொன்னது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா சார்?” ரவியின் கண்களில் நீர் கோர்த்திருக்கக் கேட்டாலும், அவன் குரல் எவ்விதமான கலக்கமுமின்றி இருந்ததை முத்தையா கவனிக்கவும் செய்தார்.

“ஹ்ம்ம்ம். தெரியும்டே. ஒரு போலீஸா இருந்துட்டு அதெப்படி தெரியாம இருக்கும்?” முத்தையாவின் வார்த்தைகளில் இருந்த போலித்தனத்தை அறிந்துகொள்ளும் அளவுக்குப் பக்குவமற்ற ரவிக்கு, முத்தையாவின் கையைப் பற்றிக்கொண்டால் மட்டும் போதும், அது யார் எவரெனத் தெரிந்துவிடும் என்கிற எண்ணம் உருவானது. அடுத்த நொடியே, அதை எப்படிக் கேட்பது எனத் தெரியாததால் ரவி அமைதியாகவே நின்றான்.

ரவியின் அமைதியைப் புரிந்துகொண்டவர்போல முத்தையாவும், “அதெல்லாம் எதுக்குடே இப்ப உனக்கு... உன் வேலை படிக்கிறது... அதை மட்டும் பாரு போதும்” என்று அன்போடு அவர் பேசினாலும், அவரது பேச்சு தொனியில் ஒரு தூண்டில் முள் இருந்ததை ரவி உணரவில்லை.

“இல்லை சார். எனக்கு அது யாருன்னு தெரிஞ்சாகணும்.” ரவியையும் அறியாமல் அவனுள் இருந்தத் தீவிரம் அவனைக் கேட்கவைத்தது.

தன்னுடைய தூண்டிலில் ரவி எனும் மீன் சரியாகச் சிக்கிக்கொண்டது என்பதை உணர்ந்துகொண்ட முத்தையாவும், “முதல்ல ஒழுங்கா ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சு முடிக்கிற வழியப் பாரு. அதுக்கு அப்புறமா அது யாரு, என்னன்னு உனக்குத் தெரிஞ்சுக்க விருப்பம் இருந்ததுன்னா சொல்லு. நான் உனக்குச் சொல்றேன். அதுவரைக்கும் இதைப் பத்தி யோசிக்காதே சரியா?” அவன் எதிர்காலத்தின் மேல் அக்கறைகொண்டவரைப்போலக் காட்டி, அவனது கேள்வியை ஒதுக்குவதைப்போல அவர் ஒதுக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரத்தில் நாகராஜனும் வெளியே வர, முத்தையா நாகராஜனிடம், “இன்னுமா செயினறுக்குறதை நீ விடலை” என்று அதிகாரத்தோடு கேட்க, நாகராஜனோ, “செல்வராஜ் சார்தான் ஒரு என்ட்ரி போடக் கூட்டிட்டு வந்தார்” என்றான் நிதானமாக.

“ஓ என்ட்ரிக்கா... ஆமா, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்டே. நாகராஜன்னு பேருவெச்சிருந்தாலே பெரிய ஊச்சாளியாதான் இருப்பீங்களா?” நாகராஜனிடம் முத்தையா சந்தேகத்தோடு கேட்க, நாகராஜனும், “ஏன் சார் அப்படி கேட்கிறீங்க?” எனக் கேட்டான்.

“ஒண்ணுமில்லை, உங்க ஊர்ல ஃபைலாகுற கேஸுல எழுவது பர்சன்டேஜ் கேஸுலயும் நாகராஜன்கிற பேரே ரெக்கார்டாகியிருக்கு. அதான் கேட்டேன்” என முத்தையா நக்கலாகச் சொல்லவும், “என்ன சார் பண்றது... நாகராஜன்கிற பேருல இருக்குறவனுங்களையா பார்த்து தூக்கிட்டு வந்து கேஸை ஃபைல் பண்ணினா...” பதிலுக்கு நாகராஜனும் நக்கலாக பதில் சொல்ல, “கேஸை முடிக்க உங்களை எல்லாம்வெச்சிருக்கோம்ல... அதான் இந்த நக்கல் பேச்சு உனக்கு. என்னைக்காச்சும் ஒருநா உருப்படியான கேஸுல என்கிட்ட மாட்டுவேல்ல... அன்னைக்கு இருக்கு உனக்கு” எனச் சொல்லிவிட்டு, ரவியைப் பார்த்தபடியே, “பய சின்னப்பயலா இருக்கான். உன் வித்தையை எல்லாம் அவனுக்கும் கத்துக் குடுத்துடாத சரியா?” என்றார்

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``என் தம்பிக்கு என்ன கத்துக் கொடுக்கணும்னு எனக்குத் தெரியும் சார். நீங்க எதுவும் புதுசா கத்துக் கொடுக்க வேணாம்” வெடுக்கென பதில் சொல்லிவிட்டு, ரவியைப் பார்த்து, “உனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சுல... வா போலாம்” என்றபடி அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல, ரவி ஒருமுறை திரும்பி முத்தையாவைப் பார்த்தான்.

அவனது பார்வையில் `நான் மீண்டும் வருவேன்’ என்கிற அர்த்தம் இருப்பதைப் புரிந்துகொண்ட முத்தையாவும் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அவனது பார்வையில் இருந்த அர்த்தத்தை முத்தையா புரிந்துகொண்டதைப்போல, அவரது புன்னகைக்குப் பின் இருந்த அர்த்தத்தை ரவியும் புரிந்துகொண்டிருந்தால்…

“என்ன சார்... அந்தத் தாலியறுப்புக்கு கூட வந்த பையன் உங்களுக்குத் தெரிஞ்ச பையனா?” என ஸ்டேஷனுக்குள் வந்த முத்தையாவிடம் செல்வராஜ் கேட்டார்.

`இல்லை சார். இனிதான் இந்த முத்தையாவைப் பத்தி தெரிஞ்சுக்கப் போற பையன்’ என்று சொல்ல நினைத்தவர், அதைச் சொல்லாமல், “இல்லை சார். சின்னப்பையனா இருக்கானே... யாரு, என்னன்னு சும்மா விசாரிச்சேன்” என்றார்.

“பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்தா என்ன, ஏதுன்னு விசாரிச்சது மாதிரி தெரியலியே சார்” செல்வராஜ் முத்தையாவிடம் பூடகமாகக் கேட்க, முத்தையாவும் தன்னுடைய கன்னத்தைத் தடவியபடியே, “எல்லாம் நம்ம பழைய ஃப்ரெண்ட் ஒருத்தனோட பையன்தான்” அவரையும் அறியாமல் அவருடைய குரலில் ஒரு கடுமை ஏறியிருந்தது.

“யாரு சார் அந்தப் பழைய ஃப்ரெண்டு?”

“பழைய சாராய யாவாரி தங்கசாமி.”

“நீங்க இன்னும் அந்த விஷயத்தை மறக்கலையா சார்?”

“சுசீந்திரத்துலவெச்சு, அவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல நான் வாங்கின அடியை அவ்வளவு சீக்கிரமா என்னால எப்படி மறந்துட முடியும் சார்?”

“சின்னப் பையன் சார் இவன். அவன் அப்பன் பண்ணின தப்புக்கு இவன் என்ன பண்ணுவான்?” செல்வராஜ், ரவிக்காக வக்காலத்து வாங்க, “அப்பங்காரன் சேத்துவெச்ச சொத்து அப்பனுக்கு அப்புறமா புள்ளைக்குத்தான வந்து சேரணும்? சேரும்.” அழுத்தமான குரலில் கூறிவிட்டு தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார் முத்தையா.

வெளியே நாகராஜன் ரவியிடம், “அந்த நாற நாயி உங்கிட்ட என்ன கேட்டான்?” எனக் கேட்க, ரவி அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சை நாகராஜனிடம் அப்படியே ஒப்புவித்தான்.

“தபாரு ரவி... நல்லபாம்பும் இந்த போலீஸ்காரனுவளும் ஒண்ணு. நல்லபாம்பு படமெடுத்து ஆடுறப்ப, பார்க்க அழகாத்தான் இருக்கும். ஆனா கொஞ்ச அசந்தோம்... போட்டுத் தள்ளிடும். அதனால இவனுககூடவெல்லாம் பழக்கத்தைவெச்சுக்காத. சொல்லிட்டேன்” நாகராஜன் கடுமையான குரலில் அறிவுரைத்தான்.

அறிவுரைகள், சொல்வதற்குத்தான் இனிமையானவையே தவிர கேட்பதற்கு அல்ல. அதிலும் ரவி மாதிரியான சூடான ரத்தம் ஓடும் உடல்களுக்கு அறிவுரைகள் மீறுவதற்கானவை. ரவி சரியெனத் தலையை ஆட்டிக்கொண்டாலும், சற்றுமுன் நாகராஜன் முத்தையாவோடு சரிக்குச் சரியாகப் பேசியதில் உண்டாகியிருந்த பிரமிப்பால், அவன் மனதினுள், ‘இவெம் மட்டும் பெரிய இவன் மாதிரி டேசனுக்கு போய் போலீஸ்காரங்ககூடச் சரிக்கு சமமா கதெ பேசுவானாம். நான் மட்டும் அங்கே போகக் கூடாதாம்’ என நினைத்துக்கொண்டான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும், முத்தையாவைப் பார்க்க அப்படியே நடந்து நேசமணி நகர் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல ஆரம்பித்தான்.

டதி ஸ்கூல் முடிந்து பெண்களும் அந்த நேரத்தில் வெளியே வருவார்கள் என்பதால் ஒருசில நாலள்கள் முத்தையா பள்ளி அருகில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக்கொண்டிருப்பார். அந்த நேரங்களில் முத்தையாவோடு ரவியும் நின்றுகொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவுவான்.

இதில் அவனுக்கு இரண்டு அனுகூலங்கள் இருந்தன.

ஒன்று டதி ஸ்கூலில் படிக்கும் பெண்களை போலீஸின் துணையோடு எந்தவிதமான பயமுமின்றி ஆசைதீரப் பார்ப்பதும், அவர்களைப் பற்றிய வர்ணனைகளை தைரியமாகப் பேசவும் முடிந்தது.

மற்றொன்று தனக்கு ரௌடிகளோடு மட்டுமல்ல, போலீஸாரோடும் நெருக்கமான நட்புறவு இருக்கிறதென்று அவனோடு படிக்கும் சக மாணவர்களுக்கும் உணர்த்த முடிந்தது.

அன்றைய தினம் வழக்கம்போல போக்குவரத்தை ஒழுங்குபடுத்திவிட்டு ரவியும் முத்தையாவும் அருகிலிருந்த டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருக்கையில், முத்தையா, “ஏன் ரவி என்னைக்காச்சும் எங்கயாச்சும் அடிதடி பண்ணியிருக்கியா நீ?” எனக் கேட்க, “அடிதடியா... நானா... அட போங்க சார். நான் சண்டைக்குப் போனேன்னா என்னையத்தான் எல்லாவனுவளும் தூக்கிப் போட்டு மிதிப்பானுங்க” என்று சுய கழிவிறக்கத்தோடு பதிலளித்தான் ரவி.

“என்னடே தங்கசாமிக்க பையனா இருந்துட்டு இப்படிப் பேசுகா. உங்கப்பனெல்லாம் ஒத்தைக்கு நின்னு எத்தன பேத்த சமாளிப்பான் தெரியுமா?” பேசுவதை நொடி நேரம்  நிறுத்திவிட்டு, ஓர்க்கண்ணால் ரவியைப் பார்த்தபடியே கையிலிருந்த டீயை ஒரு உறிஞ்சு உறிஞ்சினார். பின் “நானே பாத்திருக்கேன். பறக்க ரோட்டுலவெச்சு நான் தடுத்தும்கூடக் கேக்காம நாலு பேத்த துரத்தித் துரத்தி அடிச்சான் பாரு. அது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிக்குது” சொல்லிவிட்டு அவர் ரவியைப் பார்க்க, ரவி கண்கள் விரிய அவரைப் பார்த்தபடி இருப்பதைப் பார்த்து, “நான் உனக்கொரு மேட்டரைச் சொல்றேன் கேட்டுக்கோ... உங்க ஸ்கூலுக்கு ஆப்போசிட்ல ஒரு மேட்டர் லாட்ஜ் இருக்குல்ல... அதுவரைக்கும் நம்ம ஸ்டேஷன் லிமிட்லதான் வருது. அதுக்கு அந்தப் பக்கம்தான் கோட்டாரு லிமிட். அதனால இந்தப் பக்கம்வெச்சு நீ யார வேணாலும் என்ன வேணாலும் பண்ணு. கேஸுன்னு ஒண்ணு வந்தா அது நம்ம ஸ்டேஷனுக்குத்தான் வரும்” என்று கூறிவிட்டு ரவியைப் பார்த்துக் கண்ணடித்தார் முத்தையா.

முத்தையா சொல்லச் சொல்ல ரவியின் உடலில் புது ரத்தம் பாய்வதாக அவன் உணர்ந்தான். கூடவே தான் படிக்கும் பள்ளிக்கு எதிரிலேயே மேட்டர் லாட்ஜ் ஒன்று இருக்கிறது என்பது அவனுக்குப் புதுத் தகவலாகவும் இருந்தது. 

அப்போது முத்தையாவின் வாக்கி டாக்கி அதனுடைய கரகரப்பானக் குரலில், “அகஸ்தீஸ்வரம்ல பிரபு வீட்டுல குண்டு போட்டு அவனை லிங்கமும் அவனோட ஆட்களுமா சேர்ந்து வெட்டிக் கொன்னுட்டாங்க. சுசீந்திரம், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் ஸ்டேஷனெல்லாம் அலர்ட்டா இருங்க” என்கிற செய்தி வர, முத்தையா, “எழவுல கொஞ்ச நாள் அடங்கிக் கிடந்தானுங்க. இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்டானுங்களா... இத்தனை நாளும் கத்தியும் அறுவாவும் தூக்கிட்டு அலைஞ்சவனுங்க கையில இப்ப வெடிகுண்டு வேறயா?” எனத் தனக்குத்தானே முத்தையா புலம்ப, ரவியோ, ‘லிங்கண்ணனுக்கு வெடிகுண்டு எல்லாம் எங்கேருந்து கெடைச்சிருக்கும்’ என நினைத்துக்கொண்டான். ஆனால் அடுத்த சில வருடங்களில் இதைப்போலவே தானும் ஒருவன் மேல் வெடிகுண்டை வீசுவோம் என்பதையும், அந்த வெடிகுண்டு வீச்சு அவனுடைய வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடப்போகிறது என்பதையும் அவன் அன்று அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)