Published:Updated:

ஊசிப்புட்டான் | ``ளேய், நீ மண்டய பொளந்திருக்கது யாரைன்னு தெரியுமால" | அத்தியாயம் - 29

ஊசிப்புட்டான்

“ளேய் மக்கா. என்னல இது மொத தடவயே இப்படி ப்ராண்டு மாத்தி அடிக்கிய அளவுக்குப் போயிட்ட. பெரியாளு தாம்ல நீ”

ஊசிப்புட்டான் | ``ளேய், நீ மண்டய பொளந்திருக்கது யாரைன்னு தெரியுமால" | அத்தியாயம் - 29

“ளேய் மக்கா. என்னல இது மொத தடவயே இப்படி ப்ராண்டு மாத்தி அடிக்கிய அளவுக்குப் போயிட்ட. பெரியாளு தாம்ல நீ”

Published:Updated:
ஊசிப்புட்டான்

அமெரிக்கன் ஒயின்ஸின் பாரினுள் நாகராஜன் கையில் ஒரு ஃபுல் மார்க்கோ போலோ பீரோடும் ரவியின் கையில் ஒரு ஹால்ஃப் ப்ளாக் நைட்டோடும் புகுந்தார்கள். அவர்களுக்கு முன்னேயே அந்தப் பாரினுள் நான்கு பேர் வெவ்வேறு இடங்களில் நின்று குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் நின்றிருந்தார்கள்.

“லே ரவி. மொத நா பாருக்குள்ள வரப்பவே தில்லா வாரியேல” என்ற நாகராஜனை ஒன்றும் புரியாமல் பார்த்தான் ரவி.

“ஒன்ன மாதிரி தானண்ணே நானு உள்ள வரேன். என்னய மட்டும் ஏம்ண்ணே தில்லா வரேன்னு சொல்லுக” என்று சந்தேகத்தோடு ரவி கேட்க, “நானெல்லாம் மொதோ நாளு பாருக்குள்ள வரப்ப கைல இருந்த பீரு பாட்டல மறச்சி மறச்சியாக்கும் கொண்டு வந்தேன். ஆனா நீ எல்லாரும் பாக்குற மாதிரி வெளிப்படயா கொண்டு வரப் பாத்தியா அத தான் சொன்னே” என்று அவனுக்குப் பதிலளித்தான் நாகராஜன்.

“சரி நீ இங்கேயே நில்லு. நா போயி க்ளாஸும் கடலயும் வாங்கிட்டு வரேன்” ரவியை ஒரு இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு நாகராஜன் பாரினுள் இருந்த கேண்டினை நோக்கிச் சென்றான்.

பாரினுள் நிலவிய மணம் ரவியை வெகுவாக ஈர்த்தது. ஓருமுறை நாசியை இழுத்து அந்த மணத்தினை உள்வாங்கிக் கொண்டான். “என்னடே பார் மணத்த நல்லா உள்ள இழுத்துகிட்டியா” நாகராஜன் அவன் முன்னே சர்பத் கிளாஸைப் போன்ற இரண்டு பெரிய கிளாஸ் மற்றும் வத்தல் பொடியால் சிவப்பேறிப் போயிருந்த கிழங்கு சிப்ஸ் இரண்டு பாக்கெட்டோடும் நின்றான்.

“ஏம்ணே இந்தப் பாருக்குள்ள மட்டும் இவ்வளவு மணமா இருக்கு ஆனா யாராச்சும் குடிச்சிட்டு வர்றப்ப மட்டும் ஏம்ணே அப்படி நாறுது” என்று தனது சந்தேகத்தை ரவி கேட்க, “அது ஒத்த ஐட்டம். அதனால நாறத்தான் செய்யும் இது அப்படியில்லேல. பல ஐட்டம். பல ஐட்டங்க இருக்க எடம் எப்பயுமே ரம்மியமாத் தாம் இருக்கும்” என்று சொல்லியபடியே அவனைப் பார்த்து விஷமமாகக் கண்ணடித்தான் நாகராஜன்.

நாகராஜன் எதை மனதில் வைத்துக் கொண்டு சொல்கிறான் என்பது ரவிக்குப் புரியவில்லை என்றாலும் அவன் எதையோ குறி வைத்துத் தான் இதைச் சொல்கிறான் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது.

நாகராஜன் இரண்டு பீர் பாட்டில்களின் மூடியையும் பல்லால் கடித்து திறந்து இரு கிளாஸிலும் ஊற்றினான்.

“பீரு மட்டும் கூலா இருக்கப்பவே அப்படியே கல்ப்படிச்சிரனும். இல்லேனா கசப்பு தொண்டய விட்டுப் போகவே போகாது. ஊம்ம்ம்” சொல்லிவிட்டு தன்னுடைய கோப்பையை எடுத்து அப்படியே கல்பாகக் குடித்துவிட்டு, கிழங்கு வத்தலில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் நாகராஜன்.

நாகராஜன் செய்ததைப் போலவே ரவியும் அவன் கிளாஸிலிருந்த பியரைக் கல்பாகக் குடித்துவிட்டு, கிழங்கு சிப்ஸ் ஒன்றை எடுத்து வாயில் வைக்க, அவனுக்கு எதுகளிப்பதைப் போல வாயைத் திறந்தான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“லே லே வாந்தி வருதுன்னா வெளியே ஒரு ஓரமா போயிடுல” எச்சரிக்கையோடு நாகராஜன் சொல்ல, ரவியோ சத்தமாக ஒரு ஏப்பம் விட்டு நிதானத்திற்கு வந்தான்.

“அப்பாட நானும் ஒரே க்ளாஸுக்கே நீ வாந்தி கீந்தி எடுத்துத் தொலைச்சிருவியோன்னு பயந்துட்டேன்” என்று நாகராஜன் சொல்லிவிட்டு, “ஐட்டம் எப்படி இருக்கு” எனக் கேட்டான்.

“ஒருமாறி தோலெல்லாம் மரத்துப் போற மாறி இருக்கு” சொல்லிய ரவியின் பார்வை சுழல ஆரம்பித்தது.

“இன்னொரு கிளாஸ ஊத்தவா” என நாகராஜன் கேட்க, ரவி அவனுடைய கிளாஸை எடுத்து நீட்டினான்.

“பெரிய குடிகாரனாயிட்டலே நீ” என்று சிரித்தபடியே அவனுடைய கிளாஸில் ஹாஃபில் மிச்சமிருந்த பியரை ஊத்தினான் நாகராஜன்.

ரவிக்கு சட்டென ஷைனியின் நினைப்பு வந்தது. “ஆனாலும் அவ அப்படி பண்ணிருக்க கூடாதுண்ணே.” என்று துவங்கினான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்தப் பொட்டச்சிகளே இப்படி தான் ரவி. அவளுவளுக்காண்டி எந்த வம்பு தும்புக்கும் போவப்பிடாதுல. அப்படி போனோன்னு வச்சிக்க கடேசில நாம தான் சிக்கி சீரழிஞ்சி சீப்பட்டு போயி நிப்போம்” என்றான் நாகராஜன்.

“எட்டாங்க்ளாஸ் படிக்குவ ஒரு சின்னக் கூயுள்ள என்ன அவமானப் படுத்திட்டாண்ணே” ரவியின் கண்களில் கண்ணீர் திரண்டது.

“என்னது எட்டாங்க்ளாஸா. லேய் அவ என்னமோ ஒம்பதோ பத்தோல்லா படிக்குவான்னு சொன்ன. இப்ப என்னல எட்டாங்க்ளாஸுன்னு சொல்லுக”

நாகராஜன் திடுக்கிடலுடன் கேட்டான்.

“அவ படிக்கது பத்தாங்க்ளாஸு தான். ஆனா அவ ஃப்ரெண்டு ஒருத்தி எட்டாங்க்ளாஸு படிக்கா, அவ தான் வந்து எங்கிட்ட பேசினா” ரவியின் கண்களில் இயலாமையின் கோபம் தெறித்தது.

“ஒனக்கு அப்பங்கெடையாது. அப்படியே இருந்தாலு அவந்தொழிலு சாராயம் காய்ச்சி விக்குகது. இதுல உனக்கு ரவுடிப்பயலுவ போலீஸ்காரனுவ சவவாசம் வேற. ஆமா நீயே பதினொன்னாப்பு தான் படிக்கிற. இவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவியாம். சோத்துக்கு என்ன பண்ணுவியாம்னு எல்லாம் அசிங்க அசிங்கமா கேட்டுட்டாண்ணே” ரவி வருத்தத்தோடு சொல்ல, நாகராஜனுக்கு சிரிப்பு வந்தது.

“அந்தப் பிள்ள என்ன படிக்குவான்னு சொன்ன” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்ட நாகராஜனை முறைத்துப் பார்த்தான் ரவி.

“சரி சரி கோவப்படாதே மக்கா. அதான் அப்பவே சொன்னேன்ல ஒத்த பாட்டல்ல இருக்க ஐட்டத்த குடிச்சாக்க தான் நாறும். பல பாட்டல்ல இருக்கத…” ரவியைப் பார்த்துக் கண்ணடித்தான் நாகராஜன். இப்பொழுது நாகராஜன் சொன்னதற்கான அர்த்தம் ரவிக்கு விளங்கியது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

நாகராஜனின் மார்க்கோ போலோவை எடுத்துத் தன்னுடைய கிளாஸில் ஊற்றிய ரவி அதையும் அப்படியே கல்பாகக் குடித்தான். ப்ளாக் நைட்டின் உதவியால் எறும்பு ஊர்ந்துச் செல்வதைப் போல இருந்த போதை, இப்பொழுது எறும்புகள் சாரைச் சாரையாய் ஊர்ந்து போவதைப் போல அவன் உணர்ந்தான்.

“ளேய் மக்கா. என்னல இது மொத தடவயே இப்படி ப்ராண்டு மாத்தி அடிக்கிய அளவுக்குப் போயிட்ட. பெரியாளு தாம்ல நீ” ஏற்கன்வே பியரின் உதவியால் மழுங்கிப் போயிருந்த ரவியின் மூளையில் நாகராஜன் பேசிய வார்த்தைகள் மாலீஷ் போட்டது.

‘குடிச்சாச்சுன்னா யான பலம் வரும்டே’ ‘பெரியாளு தாம்ல நீ’ என நாகராஜன் பேசிய வார்த்தைகள் அவன் மூளைக்குள்ளேயே சுழல ஆரம்பித்தது.

அந்தப் பாரை ஒருமுறைப் பார்த்தான். அவர்கள் இருவரும் உள்ளே நுழையும்பொழுது இருந்த நான்கு பேரும் வெளியேறிப் போயிருக்க, இவர்களைத் தவிர்த்து மேலும் ஒருவன் மட்டுமே அங்கே நின்றிருந்தான்.

“உன்கிட்ட அப்படி பேசின அந்தச் சின்னக் கூயுள்ளய சப்புன்னு அறைஞ்சிருக்கனும்ல நீ” என்று நாகராஜன் கூறியதில் “கூயுள்ளய சப்புன்னு அறையனும்ல நீ” என்கிற வாக்கியம் மட்டுமே அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.

“என்னணே சொன்ன சப்புன்னு அறையனும்னா” ரவியின் குரல் அவனுக்கே வித்தியாசமாகக் கேட்டது.

“ஆமால பொளேர்ன்னு ஒன்னு நீ வச்சிருந்திருக்கனும்”

“பொளேர்ன்னு ஒண்ணு”

“ஆமா பொளேர்ன்னு ஒண்ணு”

“பொளேர்ன்னு ஒண்ணு, பொளேர்ன்னு ஒன்னு” தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு அந்தப் பாரிலிருந்தவனைப் பார்த்தான். இவனைப் போலவே ஒல்லியானத் தேகம் கொண்ட அந்த ஒருவன் இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்க, “லேய் ஏம்ல என்னப் பாத்து சிரிக்குவா” ரவி அவனைப் பார்த்துக் கேட்டான். அவன் பதிலெதுவுமே பேசாமல் இருக்க, “நாராஜண்ணே அந்தெப் பெடிப்பய என்னப் பாத்து சிரிக்குவான்ணே. அந்தச் சின்னக் கூயுள்ளே பேசினது இவனுக்குந் தெரிஞ்சிருக்கு அதான் என்னைய பாத்து சிரிக்குவான். லேய் பொடிப்பயலே ஏம்ல என்னப் பாத்து சிரிக்குவா” இம்முறை ரவியின் சத்தம் ஹை டெசிபலில் ஒலித்தது.

“பாருக்கு வந்து குடிச்சோமா போனோமான்னு இருக்கனும். சும்மா கெடந்து சலம்பிட்டு கெடக்காத செரியா” அவன் அங்கிருந்தே ரவிக்கு பதிலளித்தான்.

“என்னது நாஞ்சலம்பிட்டு கெடக்குதேனா. அங்க வந்தன்னா பாத்துக்க” ரவி கத்த, “வந்தன்னா மயிரப் புடுங்குவ போல” என்று பதிலுக்கு அவனும் கத்தினான்.

“அண்ணே நம்ம தம்பி தான். சின்னப்பய. தப்பா எடுத்துக்காதீங்க” அவனைச் சமாதனம் செய்யும் நோக்கில் நாகராஜன் சொல்லிவிட்டு, “லே ரவி. ஒவரா சலம்பாதல.” என்று ரவியை அதட்டினான்.

“என்னது சின்னப்பயலா. கொஞ்ச முன்ன என்னிய பெரியாளுன்னு சொன்ன. இப்ப நான் சின்னப்பயலா. நான் சின்னப்பயலா” என்று கேட்ட ரவியின் தலையினுள் ஒரு சிறு பெண்ணால் ஏற்பட்ட அவமானமும், பியர் கொடுத்த போதையும் ஒன்றென இணைய, அவன் நாகராஜனைத் தள்ளிவிட்டு, கால்கள் தடுமாற அந்தப் புதுமனிதனை நோக்கி ஓடினான்.

ரவி தள்ளியதில் விழுந்த நாகராஜனும், நாகராஜன் சமாதனப்படுத்தியதால் மீண்டும் குடிக்க ஆரம்பித்திருந்த அந்தப் புது மனிதனும் சூதாரிக்கும் முன்னமே ரவி கையோடு தூக்கிச் சென்றிருந்த மார்கோ போலோ பாட்டிலால் அந்தப் புது மனிதனின் முன் நெற்றியில் ஓங்கியடித்தான். பாட்டில் இரண்டாய் உடைந்து சிதற, அவன் தன் தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்தான்.

உலகத்தில் மனித மூளையை செயலிழக்க வைக்கச் செய்யப் பிராந்தி விஸ்கி ரம் ஜின் வோட்கா என்று எத்தனையோ வகையான போதைத் திரவங்கள் இருக்கின்றன என்றாலும் இவையெல்லாம் உட்கொண்டால் மட்டுமே போதையேற்றுபவை. ஆனால் இந்தப் பட்டியலில் வராத ஒரு போதைத் திரவம் இருக்கிறது. அதைக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பார்த்தால் மட்டுமே போதுமானது. ஒருசிலரை சுயவுணர்வு இழக்கச் செய்து மயங்கி விழ வைத்துவிடும் அளவுக்கு வீரியம் மிக்க அதே திரவம் வேறு சிலரைத் தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டே இருக்கும். ஆமாம் செந்நிற குருதி தான் அந்தத் திரவம்.

அவன் தலையிலிருந்து ரத்தம் ஒழுகி அவன் முகத்தில் வழிந்து அவன் அப்படியே சரிந்து விழுந்தபொழுது, ரவி விழுந்தவனைப் பார்க்காமல் அவன் தலையிலிருந்து ஒழுகியோடிய ரத்தத்தையே பார்த்தபடி நின்றான்.

“என்னப் பாத்து என்னல சொன்ன மயிரப் புடுங்குவேன்னா. பாருல உந்தலேலருந்து ரத்தம் புடுங்கிட்டு போறத” ரவி சத்தமாக அவனைப் பார்த்துக் கத்தினான்.

விழுந்தடித்து ஓடி வந்த நாகராஜன் ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“ளே ரவி. இப்ப எதுக்குல இவென் மண்டய பொழந்த”

“நீ தானண்ணே என்னப் பாத்து சின்னப்பயன்னு சொன்ன.”

“ளேய் நீ மண்டய பொளந்திருக்கது யாரைன்னு தெரியுமால”

“அவென் எவனா இருந்தா எனக்கென்னணே. என்னைய பாத்து மயிரெப் புடுங்குவேன்னு சொன்னான். நா என்ன மயிரேப் புடுங்குவேன்னு அவனுக்குத் தெரியனும்ல”

“நீ புடுங்கின மயிரு எல்லாம் போதும். ஓட்டுப்புறத் தெருலருந்து இவெனுக்க ஆளவளோ இல்ல கடெக்காரன் போலிஸுக்கு போனப் பண்ணி போலீஸோ வரதுக்க முன்னாடி நாம இங்கேருந்து எஸ்ஸாவனும் வால” ரவியின் கையைப் பிடித்து நாகராஜன் இழுத்தான்.

“என்னண்ணே சின்னப்பயலுவள மாதிரி பயந்துட்டு இருக்க, எவென் வேணுன்னாலும் வரட்டுண்ணே” போதையில் பேசிய ரவியைப் பயத்தோடுப் பார்த்தான் நாகராஜன்.

“ளேய் இவென் ஓட்டுப்பொறத் தெரு சய்யதுல. இவென் தனியா இங்க வந்திருக்க மாட்டான். மொதல்ல இங்கேருந்து வெளியே போவம் வால”

வலுக்கட்டாயமாக ரவியின் கையைப் பிடித்து நாகராஜன் வெளியே இழுத்துச் செல்ல, ரவி விழுந்து கிடந்த செய்யதை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

முன்பு அவனை ஸ்தம்பிக்கச் செய்த பயம் இன்று உதறித் தள்ளப்பட்டு கிடந்தததைப் போல அவனுக்குத் தெரிந்தது.

(தொடரும்)